விதையாகிப்போன உயிர்களும் வியாபாரிகளாகிப் போன தமிழ் அரசியல் தலைமைகளும்.

532 0

இலங்கையில் மீண்டும் ஒரு பாராளுமன்ற தேர்தல்நடை பெறுவதற்கானநாள் நெருங்கிக்கொண்டிருக்கின்றது என்று சொல்வதைவிட மீண்டும்
ஒருமுறை தமிழினம் ஏமாற்றப்படுவதற்கான திகதி குறிக்கப்பட்டுவிட்டது என்றுதான் கவனத்தில் கொள்ள வேண்டியதாக இருக்கின்றது.

தமிழின உரிமைகளை அதன் போராட்டங்களை காலங்காலமாக அடக்கிவந்த சிங்கள பேரினவாத அரசுகள் அதன் உச்சக்கட்டமாக 2009இல் ஒரு பெரிய இனஅழிப்பை நடாத்தி ஆயுதரீதியாக எமது போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தது. எமது போராட்டமானது அதனுடைய அரசியல் இராணுவ செயற்பாடுகளின் சரி, தவறுகளுக்கு அப்பால் இன்று சர்வதேச அரங்கில் ஒரு பேசுபொருளாக மாறியிருக்கின்றது.

2009க்கு பிற்பாடு இன்றைய எமது அரசியல் தலைமைகள் குறிப்பாக தமிழத்தேசிய கூட்டமைப்பு சர்வதேச அரங்கில் பேசு பொருளாக மாறிய
எமது பிரச்சனையை கொழும்புக்குள் முடக்கிவிடப்பார்க்கின்றது. இதை கொழும்புக்குள் முடக்குவதற்கான நிகழ்ச்சி நிரல்களின் ஆரம்ப நிகழ்வுதான்
சட்டதரணி சுமந்திரனின் வருகையாகும். கூட்டமைப்புக்குள் வந்த சுமந்திரன் படிப்படியாக வளர்ச்சியடைந்து இன்று கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளராக
மாறியிருப்பதுடன் ஐயா சம்பந்தனுக்கு பிற்பாடு தலைமைப் பொறுப்பை வகிக்கும் அளவுக்கு வளர்ந்த அவரை ஆயுதப்போராட்டம் சம்பந்தமாகவும், தேசியக்கொடி சம்பந்தமாகவும் சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழ்வதை ஒரு பாக்கியமாக கருதுவது சம்பந்தமாகவும் சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணல் அவருடைய அரசியலிருப்பை தமிழ் அரசியல் பரப்பில் கேள்விக்குள்ளாகுகின்றது.

இன்று நேற்றல்ல பல சந்தர்ப்பங்களிலே சுமந்திரன் எமது விடுதலைப் போராட்டத்துக்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்திருப்பதை பார்த்திருக்கின்றோம். ஐந்து வயதிலிருந்து கொழும்பில் வாழ்ந்த சுமந்திரனுக்கு நாம் சிந்திய இரத்தம், வியர்வை விடுதலைக்காக உயிர்நீத்த அனைத்துப் போராளிகள், மக்களின் மரணங்கள் அனைத்தையும் தமிழின விடுதலைக்காக கொடுத்த அனைத்துப் போராளிகளின் இன்றைய வாழ்நிலைமை, எமதுபோராட்டம் முடிவுக்குவர அப்போராட்டம் தனக்குள்ளே கொண்டிருந்த முரண்பாடுகள் அதன் வலிகள் என்றும் சுமந்திரனுக்கு தெரிந்திருக்கவாய்ப்பில்லை. தவறு எம்மில்தான் தேசியப்பட்டியலுக்குள்ளால் வந்தவரை ஆரம்பத்திலேயே தமிழ்த்தேசிய அரசியலில் இருந்து விரட்டியிருக்கவேண்டும். சுமந்திரன் இவ்வாறான தமிழ்
மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கு எதிரான கருத்துக்களை முன்வைப்பதற்கான சூழல் என்ன என்பதை பார்த்தால்.

1)நாங்கள் என்ன கதைத்தாலும் தமிழ்மக்களுக்கு மாற்றுத்தலைமை இல்லை
என்பதால் எங்களுக்குத்தான் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை.

2)பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் மக்களுடைய நலனில், விடுதலையில்
உறுதியாக நின்று தங்களுக்கு எதிரான பிரச்சனைகளைச் செய்யமாட்டார்கள்
என்ற நம்பிக்கை.

3)மறத்தல் என்பது மானிடகுணம் என்றாலும் தமிழினம் விரைவாக
மறந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு.

சுமந்திரன் இவ்வாறான கருத்துக்களை முன்வைப்பதற்கான முக்கியமான சூழல்களாக இவைகளைப் பார்க்கலாம். சுமந்திரன் வைத்திருக்கும்
நம்பிக்கையை விடுதலைக்காக உயிர்நீத்த அத்தனை ஆத்மாக்களின் மீதும் சத்தியம் செய்து தகர்த்தெறியவேண்டிய பொறுப்பு தமிழ்மக்களுக்கும் தமிழ்
மக்களின் உரிமைகள் சார்ந்த ஊடகங்களுக்கும் இருக்கின்றது. எது விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது என்று கருதுகின்றோமோ,அவரை அல்லது அந்த
அமைப்பை நாமே அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்கின்கிறோம் என்றுபொருள். எனவே எமது போராட்டத்தை விமர்சிப்பது தொடர்பாக எந்த மாற்றுக்கருத்தும் இல்லை இங்கே முரன்பாடு என்னவெனில் சிங்களப்பேரினவாத அரசுசார்ந்து விமர்சிக்கிறோமா அல்லது தமிழ்மக்களுடைய போராட்டம் சரியான திசையில் பயனிக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்போடு தமிழ்மக்களின் விடுதலைசார்ந்து நின்று விமர்சிக்கின்றோமா என்பதுதான்.

இந்தவகையில் சுமந்திரனுடைய விமர்சனங்கள் எந்தநிலை சார்ந்து நிற்கின்றது என்பதை தமிழ் அரசியல்பரப்பில் இருப்பவர்களால் விளங்கிக்கொள்ள முடியும். சுமந்திரனால் மட்டுமல்ல இன்று இருக்கின்ற தமிழ் அரசியல் தலைமைகளால் தமிழ் மக்களின் உரிமைகள் சார்ந்து பாராளுமன்ற அரசியலுக்கூடாக எதையும் செய்துவிடமுடியாது என்பதை கூற ஜனாதிபதி தேர்தலில்கூட கண்கூடாகக் கண்டோம். தமிழ்த் தலைமைகளுக்கு தமிழ்மக்கள் உரிமைகள்சார்ந்து எந்த நிபந்தனையும் இரு பெரும்பாண்மை பேரினவாத அரசுகளுக்கு வைக்கமுடியாது என்று தெரிந்ததனால் தமது பணப்பெட்டியை நிறைத்துக் கொள்ளத்தான் நிபந்தனையை மட்டும் விதிக்கின்றார்கள். ஓவ்வொரு முறையும் தமிழ்மக்களை ஏமாற்றுவது போல்தான் இம் முறையும் சிங்கள பேரினவாத அரசுகளும் தமிழ் அரசியல் தலைமைகளும் தயாராகிக்கொண்டு இருக்கின்றார்கள்.

இந்தத் தலைமைகளை நிராகரித்து அதில் உள்ளவர்களும் வெளியில் உள்ளவர்களும் விடுதலைசார்ந்து புதிய தலைமையை உருவாக்க வேண்டும். அதன்பணி மெதுவாக நகர்ந்தாலும் காலத்தின்தேவை அதைத்தான் உணர்த்தி நிற்கின்றது. பாராளுமன்றம் என்பது எமது உரிமை சார்ந்தகுரலை பதிவுசெய்யும் இடமாகவும் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கு தமிழ்மக்களை அணிதிரட்டிய ஜனநாயகரீதியான போராட்டக் களத்தை பயன்படுத்த வேண்டும் கேட்டுப்பெறுவதில்லை சுதந்திரம் போராடி பெறுவதுதான் சுதந்திரம். இதைமீறி சுதந்திரம் கேட்டுப் பெறப்படுமானால், கொடுக்கப்படுமானால் அது நோய்வாய்ப்பட்ட சுதந்திரமாகத்தான் இருக்கமுடியும்.

உழுத்துப்போன கட்டிடத்துக்கு வர்ணம் தீட்டுவதை விடுத்து உழுத்துப்போன கட்டிடத்தில் கற்களை வைத்தே புதிய கட்டிடத்தை உருவாக்கவேண்டும். அந்த புதிய தலைமை உருவாகும்வரை தேர்தல் களத்தில் நிற்பவர்களுக்கு ஓர் அச்சத்தை கொடுக்கவேண்டும் . அதாவது நீங்கள் தமிழ் மக்களின் உரிமைசார்ந்து, நலங்கள் சார்ந்து எதுவும் செய்யாவிட்டாலும் அதற்க்கு எதிரான கருத்துக்களைப் பதிவு செய்தால் தமிழ் அரசியல் பரப்பில் இருந்து இல்லாமல் செய்வோம் என அச்சத்தைக் கொடுக்க வேண்டும். இதுதான் எமது போராட்டத்திற்காக உயிர்நீத்தவர்களுக்கு நாம் செய்யும் அஞ்சலியாக இருக்கமுடியும்.

இதன் தொடக்கப் புள்ளியாக எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சுமந்திரனை புறக்கணிக்கவேண்டும் அறிவுசார்ந்தவர்கள் சட்டத்தரணிகள் (இவர்களால் தான் தமிழ்மக்களின் உரிமைகளைப் பெறமுடியும் என்று காலம் காலமாக நாம் வைத்திருக்கும் கருத்தியல் மாறவேண்டும்) கையில் இருக்கும் தமிழ் அரசியலை தமிழீழ விடுதலை சார்ந்த, தமிழ்மக்களுக்கு இழைக்கப்பட்ட  அநீதிகளுக்கும், போராளிகளின் தியாகத்திற்கும் நியாயமான தீர்வு வேண்டும் என்பதை மட்டுமே கொள்கையாகக் கொண்டதலைமை உருவாக வேண்டும் அதுவரை பாராளுமன்றத்தில் எமது குரலை பதிவுசெய்வதற்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுப்போம்.

சட்டத்தரணி  சுமந்திரனை நிராகரிப்போம். இந்த நிராகரிப்பு மற்றவர்களுக்கும் நாளை நடக்கும் என்ற அச்சத்தைக் கொடுப்போம். இவைதான் நாளை மலரப்போகும் தமிழீழத்தை நான் வானிலிருந்து பார்ப்பேன் என்ற கனவோடு மடிந்து போனவர்களுக்கு நாம் கொடுக்கும் முதல் நம்பிக்கையாக இருக்கமுடியும்.

பாஸ்கரன்.