சாத்தான்குளம் விவகாரம்-வழக்கை சி.பி.ஐ. இற்கு மாற்றவுள்ளதாக முதல்வர் அறிவிப்பு

356 0

சிறையில் உயிரிழந்த சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் மரண வழக்கு விசாரணையை சி.பி.ஐ. விசாரணைப் பிரிவுக்கு மாற்றுவதற்கு உயர் நீதிமன்றில் கோரவுள்ளதாக  முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அரச தரப்பில் இருந்து இவ்வழக்கை சி.பி.ஐ.இற்கு மாற்ற முடிவு செய்துள்ளதாகவும் மதுரை நீதிமன்றக் கிளையில் வழக்கு விசாரணைக்கு வரும்போது நீதிமன்ற அனுமதி பெற்று சி.பி.ஐ. இடம் இவ்வழக்கு ஒப்படைக்கப்படும் என்றும் முதல்வர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) குறிப்பிட்டுள்ளார்.

தூத்துக்குடி, சாத்தான்குளம் பகுதியில் உயிரிழந்த தந்தை மற்றும் மகனான குறித்த வர்த்தகர்கள் தமது தொலைபேசி கடையைத் திறந்துவைத்திருந்ததால் பொலிஸாருடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் கோவில்பட்டி கிளைச்சிறையில் தடுத்துவைக்கப்பட்ட நிலையில் குறித்த இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில் பொலிஸாரின் தாக்குதலிலேயே உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் தொடர்பாக எதிர்க் கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ள நிலையில் நீதி விசாரணைக்கும் வலியுறுத்திவருகின்றனர். இந்நிலையில் குறித்த வழக்கை சி.பி.ஐ. இற்கு மாற்றவுள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார்.