எமது விடுதலையை நாம் மீண்டும் பெறுகின்றோம் (Wir erhalten nun viele unsere alten Freiheiten zurück) என்றார் சுவிஸ் அதிபர்

352 0

உண்மையில் சுவிசின் நடுவனரசு எதிர்வரும் 24. 06. 2020 தமது தளர்வு நடவடிக்கைகள் தொடர்பாக அறிவிக்க இருப்பதாக தெரிவித்திருந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக 19. 06. 2020 பிற்பகல் 15.00 மணிமுதல் சுவிவிற்சர்லாந்து அதிபர் திருமதி. சிமோனெற்ரா சொமறுக்கா, சுகாதார அமைச்சர் திரு. அலான் பெர்சே மற்றும் பிரதமர் வால்ரெர் தூர்ன்கெர் அவர்கள் பங்கெடுத்தனர். இற்றைக்கு 3 மாதங்களுக்கு முன்னர் 16. 03. 2020 சுவிஸ் அரசு பேரிடர் தவிர்பு நடவடிக்கையாக அவசரகாலச் சட்டத்தினை நடைமுறைப்படுத்தி இருந்தது. இன்று 3 மாதங்கள் கடந்து இச்சட்டத்தினை நாம் நீக்குகின்றோம் எனும் பதத்துடன் கூட்டம் தொடங்கியது.

ஆயிரம் நபர்களுக்கு மேலாக ஒன்றுகூடுவதைத் தவிர ஏனைய தடைகள் நீக்கப்படுகின்றன. ஆனாலும் கொறோனா பெருந்தொற்று தொடர்ந்தும் கட்டுப்பாட்டிற்குள் இருந்தால் செப்ரெம்பரில் இத்தடையும் நீக்கப்படும். முழு விடுதுலையும் சுவிஸ் வாழ் மக்களுக்கு மீளக்கிடைக்கும்!

22.06.2020 புதிய தளர்வுகள்

பொது இடத்தில் 30 நபர்கள் மட்டுமே கூடலாம் என்னும் தடை நீக்கப்படுகின்றது.

நிகழ்வுகளில் ஆகக்கூடியது 300 நபர்கள் மட்டும் பங்கெடுக்கலாம் எனும் தடை நீக்கப்பட்டு ஆகக்கூடியது 1000 மக்கள் வரை பங்கெடுக்கலாம் எனும் அனுமதி வழங்கப்படுகின்றது.

ஆனால் ஆகக்கூடியது 1000 மக்கள் கூடலாம் என்றாலும் அவர்கள் இடத்தின் அளவைப்பொறுத்து ஒரு பகுதியில் கூடியது 300 மக்கள் என அனுமதிக்கப்படலாம். குறைந்தது 31. 08. 2020 வரை 1000 மக்களுக்கு மேலாக ஒன்றுகூடத் தடை தொடர்கின்றது. சூழ்நிலை அனுமதித்தால் செப்ரெம்பர் மாதம் முதல் இத்தடையும் நீக்கப்படலாம்.

விருந்தோம்பல் துறையில் உணவுண்ணும் மக்கள் நகர்ந்து அசைவதற்கு விடுக்கப்பட்ட தடையும் இத்தால் நீக்கப்படுகின்றது.
உணவு விடுதிகள் நள்ளிரவில் மூடப்பட வேண்டும் எனும் தடையும் நீக்கப்படுகின்றது.குறுகிய இடைவெளிவிடப்பட்டு ஆடப்படும் விளையாட்டுக்களான நீச்சல், மல்யுத்தம், குத்துச்சடண்டை அமெரிக்க உதைபந்தாட்டத்திற்கு விடுக்கப்ப்டிருந்ததடையும் நீக்கப்படுகின்றது.

20.06.2020 முதல் ஊர்வலங்கள், அமைதிப்பேரணிகள், ஒன்றுகூடல்களிற்கு விடுக்கப்பட்டிருந்த வரையறைகள் நீக்கப்படுகின்றது. ஆகக்கூடிய மக்கள் தொகை எனும் கட்டுப்பாடு அரசியல் உரிமை கொண்டு ஒன்றுகூடும் நிகழ்வுகளுக்கு கிடையாது. ஊர்வலங்களில் எத்தனைபேரும் பங்கெடுக்கலாம். ஒரே ஒரு நிபந்தனை ஊர்வலங்களில், பேரணிகளில், பொதுக்கூட்டங்களில் பங்கெடுப்போர் சுகாதாரப்பாதுகாப்பு முகவுறை அணிய ஆணையிடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகள் 1.5 மீற்றர் இடைவெளி பேண கேட்கப்பட்டிருந்த சூழலில் இதுவரை சுவிஸ் நாடு மட்டுமே 2 மீற்றர் இடைவெளிபேணப் பணித்திருந்தது. ஆனால்ல் இதனையும் ஏனைய ஐரோப்பிய நாடுகள் போல் 1.5 மீற்றர் இடைவெளியாக சுவிசும் குறைத்துள்ளது. இருந்தபோதும் பொதுப்போக்குவரத்தில் பயணிகள் நெரிசல் ஏற்படக்கூடிய சூழலில் சுகாதாரப்பாதுகாப்பு முகவுறைகளை அணிய சுவிஸ் அரசு முன்மொழிகின்றது.

1000 மக்கள்வரை பங்கெடுக்கும் நிகழ்வுகளை சுற்றுக்கண்டப் பகுதிகளாகப் பிரிக்க முன்மொழிகின்றது. அதன் ஊடாக தொடுகை நெருக்க உள்ள தொகை வரையறுக்கப்படும்என எதிர்பார்க்கப்படுகின்றதாது பொது நிகழ்வுகளில் இசைக்கச்சேரிகளில் அல்லது திரையரங்கில் ஒருவருக்கொருவர் ஒரு இருக்கை இடைவெளி பேணுதல் போதும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிகழ்வுகளின்போது போதியளவு இடைவெளிபேண முடியாதுபோனால் வருகை அளிப்பவர்களது தரவுகளை நிரலில் பதிவுசெய்து பேண வேண்டப்படுகின்றது. வீட்டிலிருந்து பணிசெய்ய நடுவனரசு மொழிந்திருந்த முன்மொழிவினை திரும்பப்பெற்றுக்கொள்கின்றது. நிறுவனங்கள் தமது வாய்ப்பிற்கமைய முடிவெடுக்க சுவிஸ் அரசு அனுமதி அளிக்கின்றது.

ஆபத்து உள்ள பிரிவினர் பணிக்கு திரும்பவேண்டாம் எனும் முன்மொழிவினையும் சுவிஸ் அரசு மீளப்பெற்றுக்கொள்கின்றது. ஆனால் நோய்த்தொற்று ஏற்படக்கூடிய அபாயத்தில் வாழும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு நடடிக்கைகளை தொழில் நிறுவனங்கள் ஏற்படுத்திக்கொடுக்க கேட்கப்படுகின்றது.

நோய்த்தடுப்பு நடவடிக்கை மாநிலங்கள் கையில்

கொறோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கை முடிவுகள் அனைத்தினையும் மேற்கொண்டு மாநிலங்கள் அரசிடம் நடுவனரசால் கையளிக்கப்படுகின்றது. மாநிலங்கள் தமது சூழலிற்கு ஏற்ப நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். 20. 03. 2020 சுவிஸ் அரசால் நிறுவப்பட்டு பேரிடர் தடுப்பு நிபுணர்குழு 22. 06. 2020 முதல் கலைக்கப்படுகின்றது.

சுவிற்சர்லாந்து அரசு அறிவித்த நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கை ஆகக்குறைந்தது 52000 உயிர்களைக் காத்திருப்பதாக நிபுணர்குழு கணித்துள்ளது.

 கொறோனா சோதனைக்கு கட்டணம் யார் செலுத்த வேண்டும்?

கொறோனா சோதனைக்கு யார் கட்டணம் செலுத்த வேண்டும் எனும் கேள்வி தொடர்ந்தும் விவாதிக்கப்பட்டுவருவதாகவும், ஆனால் எதிர்வரும் இலையுதிர் காலத்தில் தொற்று அதிகரிக்கலாம் எனும் நிலையில் மக்கள் கட்டணத்தில் பங்கெடுக்க அழைப்பு விடுத்தால் சோதனை செய்வோர் தொகை குறையக்கூடும் எனவும், ஆகவே பொதுமக்கள் கட்டணம் செலுத்தாது இச்சோதனையினை மேற்கொள்ள வழிதேடுவதாகவும் சுகாதார அமைச்சர் திரு. அலான் பெர்சே தெரிவித்தார்.

 தொற்றுத் தடமறியும் செயலி (Tracing-App)

இச்செயலியின் நோக்கம் நோய்த்தொற்று ஆளானவர்களை அடையாளம் காண்பதும், எவருக்காவது நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பது அறியப்பட்டால் அவருடன் நோய்த்தொற்றுக்காலத்தில் நெருக்கமாக இருந்தவர்களை இச்செயலி ஊடாக அடையாளம் கண்டு அவர்களையும் சமூகத்தனிமைப்படுத்தலுக்கு அறிவுறுத்தல் வழங்குவதாகவும் உள்ளது. எதிர்வரும் 24.06.2020 இச்செயதில் தொடர்பான தகவில் முழுமையாக வெளியிடப்படும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார். மேலும் இது சுய விருப்பில் மக்கள் பயன்படுத்த வெளியிடப்படும் என சுவிஸ் அதிபர் தெளிவுபடுத்தினார்.

மாநிலங்கள் சுயமாக சுகாதார முகவுறை அணிய கட்டளைகளைப் பிறப்பிக்கலாமா?

இக்கேள்வி கேட்கப்பட்டபோது சுவிசின் சுகாதார அமைச்சர் திரு. பெர்சே இவ்வாறு பதிலளித்தார் சுவிற்சர்லாந்தின் கூட்டாச்சி உங்களை வரவேற்றுக்கொள்கின்றது, நிற்சயமாக மாநிலங்கள் தமது முடிவுகளைத் தாமே எட்டலாம், இதுவே கூட்டாச்சி என்றார். மேலும் சுவிஸ் அதிபர் தொடர்கையில் எதிர்காலத்தில் நடுவன் அரசின் பொது விதிகளும், மாநிலங்கள் தனித்தனியான விதிகளும் கடைப்பிடிக்க வேண்டி இருக்கலாம். ஆனால் பொதுப்போக்குவரத்தில் மாநிலங்கள் கூட்டாக பேசி ஒரு முடிவு எடுப்பது சிறந்தது. ஆனால் சில விடயங்களில் விதிகள் மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடலாம் என்றார்.

தற்போது சுவிசில் 94 வீதமானோர் பொதுப்போக்குவரத்தில் சுகாதார பாதுகாப்பு முகவுறை அணிவதில்லை.

பிரதமர் உரை

சுவிசின் பிரதமர் திரு. வால்ரெர் தூர்னெர் பேசுகையில் சுவிசின் நடுவனரசு கொறோனா தொடர்பான அறிவித்திருக்கும் விதிகளை சட்டமாக்க அடிப்படை ஆய்வும் ஆலோசனைகளும் ஆற்றப்பட்டு வருகின்றன. நோய் தொற்றுச் சூழல் கட்டற்றுப்போனால் இப்போது தளர்த்தப்படும் விதிகள் மீளவும் இறுக்கப்படலாம் என்றார்.

சுவிசிற்கு முழு விடுதலையும் கிடைக்கட்டும், நுண்ணுயிர்க் கொல்லியும் கட்டுப்பாட்டிற்குள் இருக்கட்டும் எனும் இருதுருவத்தில் சுவிஸ் பயணிக்கின்றது. பயணம் வெல்ல நாமும் வாழ்த்துவோமாக!

தொகுப்பு: சிவமகிழி