18-வது நாளாக உண்ணாவிரதம்: உடல் சோர்வால் முருகனுக்கு குளுக்கோஸ் ஏற்றம்

249 0

ஜெயிலில் 18-வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்த முருகனின் உடல்நிலை திடீரென சோர்வடைந்தது. அதையடுத்து டாக்டர்கள் உடனடியாக அவருக்கு குளுக்கோஸ் ஏற்றினர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலில் தனி அறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக வேலூர் ஆண்கள், பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் தங்களின் குடும்பத்தினர், உறவினர்களிடம் செல்போனில் வாட்ஸ்-அப் வீடியோ கால் மூலம் பேசி வருகிறார்கள். முருகன் தனது மனைவி மற்றும் உறவினர்களிடம் வீடியோ கால் மூலம் பேச சிறைத்துறை நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை.

அதனால் மனவேதனை அடைந்த முருகன் ஜீவசமாதி அடைய வேண்டி கடந்த 1-ந் தேதி முதல் ஜெயிலில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். யாருடனும் பேசாமல் தியான நிலையில் இருக்கும் முருகனின் உடல்நிலையை ஜெயில் டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். நேற்று 18-வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்த முருகனின் உடல்நிலை திடீரென சோர்வடைந்தது. அதையடுத்து டாக்டர்கள் உடனடியாக அவருக்கு குளுக்கோஸ் ஏற்றினர். இதுவரை முருகனுக்கு 5 முறை குளுக்கோஸ் ஏற்றப்பட்டுள்ளது. உண்ணாவிரதத்தை கைவிடும்படி பலமுறை கோரிக்கை விடுத்தும் அவர் அதனை ஏற்கவில்லை என்று ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.