மாவீரர்களின் நினைவுகூரலை, அரசாங்கம் வன்முறை மூலம் தடுக்க முயற்சி

271 0
மாவீரர்களின் நினைவுகூரலை, அரசாங்கம் வன்முறை மூலம் தடுக்க நினைப்பதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

வனவளத் திணைக்களத்தினரால் அடாத்தாகப் பிடிக்கப்பட்டுள்ள தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தை, நேற்று (04) பார்வையிட்டு, அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், இது தற்போது ஓர் அரச காரணியாகுமெனவும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில், 101ஆம் இலக்கத்தை உடைய இந்தப் பகுதி, அரச காரணியாக ஒதுக்கப்பட்டுள்ளதெனவும் கூறினார்.

அரச காணியை வனவளத் திணைக்களம் தன்னுடையதென அடையாளப்படுத்துவதாக இருந்தால், கிராம அலுவலர், பிரதேச செயலாளர் ஆகியோரின் அனுமதியுடனே இவ்விடத்தை அடையாளப்படுத்த வேண்டுமெனவும், சிறீதர் கூறினார்.

அப்படியாயின் வனவளப் பிரிவினால், இந்தப் பகுதி எல்லைப்படுத்தப்பட்டால் , இராணுவம் உடனடியாக வெளியேற வேண்டுமெனத் தெரிவித்த அவர், வனவளப் பிரிவு எல்லைப்படுத்தினால் இராணுவம் இருக்கலாமெனவும் ஆனால் எங்கள் மக்கள் எல்லைப்படுத்திய பகுதிகளில், அவர்களால் நெல் விதைக்கவோ வேறு தோட்டங்களையோ செய்ய முடியாதெனவும் கூறினார்.

“திட்டமிடப்பட்டு, மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வணக்கம் செலுத்த முடியாமல் தடுக்கும் வகையில், அடாத்தாக செயற்படுகிறார்கள்” எனவும், சிறீதரன் ​மேலும் தெரிவித்தார்.