மத்திய குழு தமிழகம் வருகை- சென்னை உள்பட 7 மாவட்டங்களில் ஆய்வு

270 0

ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜேந்திர ரத்னு தலைமையில் மத்தியக்குழு தமிழகம் வந்து உள்ளது. இந்தக்குழு சென்னை உள்பட 7 மாவட்டங்களில் 3 நாட்கள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

கொரோனா தடுப்பு பணிகளில் தமிழக அரசு எவ்வாறு செயல்படுகிறது? என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்கிறது? என்பது குறித்து ஆய்வு செய்ய மத்திய ஆய்வுக்குழு கடந்த மாதம் 24-ந்தேதி தமிழகத்துக்கு வந்தது. தேசிய பேரிடர் மேலாண்மை கூடுதல் செயலாளர் திருப்புகழ் தலைமையில் வந்த குழுவினர் 5 நாட்களுக்கு மேலாக ஆய்வு செய்தது.

இதன் தொடர்ச்சியாக தற்போது தொழில் மற்றும் உள்வர்த்தக மேம்பாட்டுத்துறை இணை செயலாளர் ராஜேந்திர ரத்னு தலைமையில், ஜிப்மர் மருத்துவமனை டாக்டர்கள் என மொத்தம் 5 பேர் அடங்கிய குழுவினர் தமிழகம் வந்து உள்ளனர். இவர்கள் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், அரியலூர், விழுப்புரம் ஆகிய 7 மாவட்டங்களில் 3 நாட்கள் ஆய்வு நடத்த இருக்கின்றனர்.

பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்தில், மத்தியக்குழு ஆய்வு நடைபெற்றது. பின்னர், மத்திய ஆய்வுக்குழுவின் தலைவர் ராஜேந்திர ரத்னு நிருபர்களிடம் கூறியதாவது:-

இதற்கு முன்பு தமிழகம் வந்த மத்திய குழுக்கள் மருத்துவமனைகளில் எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது? பாதிப்பை எவ்வாறு கண்டறிகின்றனர்? என்பதை ஆய்வுசெய்தனர். ஆனால், எனது தலைமையிலான குழு, கொரோனா அறிகுறி உள்ளவர்களை கண்டறிந்து சோதனை செய்து அவர்களை தனிமைப்படுத்தி வைக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் முதல், கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு சென்று அங்கு நிலவரம் எப்படி உள்ளது? மாநில அரசு சார்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன? பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு உள்ளதா? இறப்பு விகிதம் கட்டுப்படுத்தப்பட்டது எப்படி? என்பது வரை பல்வேறு கோணங்களில் ஆய்வுசெய்ய உள்ளோம்.

நாடுமுழுவதும் பிறமாநிலங்களில் உள்ளதை விட தமிழகத்தில் கொரோனா இறப்புவிகிதம் குறைவாகவே உள்ளது. குறைகளை கண்டுபிடிப்பதற்காக ஆய்வுக்குழு தமிழகம் வரவில்லை. தமிழகத்தில் கொரோனா பரவல் இருந்தாலும் இறப்புவிகிதம் கட்டுக்குள் உள்ளது எப்படி?, தமிழகத்தில் இறப்பு விகிதத்தை கட்டுக்குள் வைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? இதே நடைமுறையை பிற மாநிலங்களில் ஏன் அமல்படுத்தக்கூடாது? அதே சமயம், பிற மாநிலங்களில் பாதிப்பை குறைத்தது எப்படி? அதை தமிழ்நாட்டில் எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும்? என்று தமிழகத்தின் செயல்பாடுகளை, பிற மாநிலங்களுக்கும், பிறமாநிலங்களின் செயல்பாடுகளை தமிழகத்துக்கும் கொண்டு செல்லவே நாங்கள் தமிழகம் வந்துள்ளோம். 3 நாட்களில் ஆய்வை முடித்து விட்டு, ஆய்வு முடிவுகளை ஆராய்ந்து அதன்பின் மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.