வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்பவர்கள் மத்தள விமான நிலையம் ஊடாக

321 0

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்வோரில் அதிகமானவர்களை எதிர்காலத்தில் மத்தள விமான நிலையம் மூலமாக அனுப்புவதற்கு எதிர்பார்த்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்தே தெரிவித்தார்.

கொரியாவில் வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டு விடுமுறைக்காக தாய்நாட்டுக்கு வந்த பணியாளர்கள் விடுமுறை முடிந்த நிலையில் மீண்டும் நேற்று கொரியா நோக்கி செல்வதற்காக மத்தள விமான நிலையத்திற்கு வந்திருந்த நிலையில் அவர்கள் மத்தியில் பணியகத்தின் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையை மீள புத்துயிரூட்டும் வகையில் பணியாளர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபடுத்துவதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடாக அமைச்சர் தினேஷ் குணவர்தன நடவடிக்கை எடுத்துள்ளார். அமைச்சர் வழங்கியுள்ள வழிகாட்டுதலுக்கு இணங்கவே வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக ஒரு தொகுதியினர் நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளனர்.

தென்கொரியாவில் தொழிலில் ஈடுபட்டிருந்த இலங்கையர்கள் விடுமுறைக்காக தாய்நாட்டுக்கு வந்திருந்தனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அவர்கள் உரிய தினத்தில் மீண்டும் தென் கொரியாவுக்கு செல்லமுடியாத நிலை காணப்பட்டது. அவர்களை மீண்டும் தமது தொழில் தளங்களுக்கு அனுப்பிவைக்கும் வேலைத்திட்டத்தின் ஒருபகுதியாகவே நேற்று அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அவர்கள் அந்த நாட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே தொழில்களில் ஈடுபடுவர். அதற்கான ஏற்பாடுகளை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகமும் கொரிய நாட்டின் மனித வள அபிவிருத்தி நிறுவனமும் இணைந்து முன்னெடுத்துள்ளன.