யாழ் நூலக எரிப்பு : அரங்கேற்றப்பட்ட இனவாதம் – 39 வருடம் நிறைவு

829 0

யாழ் நூலக எரிப்பென்பது சாதாரணமான ஒரு வன்முறையல்ல. அது வேண்டும் என்று அரங்கேற்றப்பட்ட ஓர் இனவாத அரசியல் நாடகம். திட்டமிட்டு தமிழர்கள் மீது நடத்தப்பட்ட ஒரு பெரும் தாக்குதல். தீர்மானம் மிக்கதோர் இன அழிப்பு நடவடிக்கை. தமிழ் மக்களின் கலை, கலாசாரம், பண்பாடு, அறிவியல் ஆகிய அம்சங்களை அழித்தொழித்ததோர் இன வன்முறை. அதுவும் ஓர் அரச வன்முறை.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்கான சாத்வீகப் போராட்டங்கள் தோல்வியடைந்தையடுத்து, வேறு வழியின்றி தனிநாட்டைக் கோருவதைவிட வேறு வழியில்லை என்ற அரசியல் ரீதியான வெறுப்பின் விளிம்பில், தமிழ்த் தலைவர்கள் வந்திருந்த தருணம் அது.

சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ் மக்களின் இறைமையையும் சுதந்திரத்தையும் நிலைநாட்டி தமிழ்த் தேசிய இனம் பாதுகாப்புடன் வாழ்வதற்காக தனித் தமிழீழத்தை நாடுவதைவிட வேறு வழியில்லை என்று வட்டுக்கோட்டை பண்ணாகத்தில் 1976 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி தனிநாட்டுக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் அப்போதைய தலைவர் தந்தை செல்வநாயகத்தின் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காகத் தமிழ் அரசியல் தலைவர்கள் இப்படியொரு தனிநாட்டுக்கான தீர்மானத்தை துணிந்து நிறைவேற்றுவார்கள் என்று ஆட்சியாளர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை.

மாவட்ட சபை முறைமை

தனிநாட்டுத் தீர்மானம் மாத்திரமல்ல. அதன் பின்னர் 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஒரு சர்வசன வாக்கெடுப்பைப்போன்று இந்தத் தீர்மானத்தை முன்வைத்துப் போட்டியிட்ட தமிழர் விடுதலைக்கூட்டணிக்கு தமிழ் மக்கள் அமோக ஆதரவளித்திருந்தனர். அந்தத் தேர்தல் தமிழர் விடுதலைக் கூட்டணியினருக்குப் பெரும் வெற்றியை ஈட்டித் தந்திருந்தது.

ஏற்கனவே தமிழ்த் தலைவர்களின் தனிநாட்டுத் தீர்மானத்தினால் சீற்றத்திற்கு உள்ளாகியிருந்த சிங்களத் தலைமைகளினால் இந்தத் தேர்தல் வெற்றியை சீரணிக்க முடியவில்லை. தமிழ்த் தலைவர்களின் மீதும் தமிழ் மக்கள் மீதும் தமது ஆத்திரத்தை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி இருந்தனர்.

வடக்கிலும் கிழக்கிலும் தமிழர் விடுதலைக் கூட்டணி தேர்தலில் வெற்றிபெற்றிருந்தது. நாட்டின் தென்பகுதிகளில் ஐக்கிய தேசிய கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருந்தது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக அப்போதிருந்த ஜே.ஆர்.ஜயவர்தன தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர்களுடன் தந்திரோபாய பேச்சுக்களை நடத்தி மாவட்ட சபைகளின் ஊடாக அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கு இணக்கம் கண்டிருந்தார்.

தனிநாடே பிரச்சினைக்குத் தீர்வாக அமையும் என்று வட்டுக்கோட்டையில் தீர்மானம் நிறைவேற்றியதன் பின்னர் மாவட்ட சபைகளின் ஊடாக அதிகாரப் பகிர்வுக்கு எவ்வாறு தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் ஒப்புக்கொண்டார்கள், எவ்வாறு அந்தத் தீர்மானத்திற்கு இணங்கினார்கள் என்பது தமிழ் அரசியலில் ஒரு புதிராகவே இருக்கின்றது.

வட்டுக்கோட்டை தீர்மானத்தையடுத்து, தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்குமாகத் தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். இலை மறை காயாக அந்தப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. தனிநாட்டுக் கோரிக்கையை வைத்திருந்த தமிழ்த்தலைவர்கள் மாவட்ட சபை தீர்மானத்திற்கு ஒப்புக்கொண்டிருந்தமை தமிழ் இளைஞர்களைக் கோபமடையச் செய்திருந்தது

இலங்கை அரசியலில் ஜே.ஆர்.ஜயவர்தன மிகவும் தந்திரசாலி, தந்திரோபாயப் போக்கைக் கொண்டிருந்தவர் என்ற ஒரு கணிப்பு உண்டு. தனிநாட்டுத் தீர்மானத்தை மேற்கொண்டு, தமிழ் மக்களிடம் தேர்தல் ஒன்றின் மூலம் அதற்கான ஆணையைப் பெற்றிருந்த தமிழ்த்தலைவர்களை வெறும் மாவட்ட சபைக்கு இணங்கச் செய்ததன் மூலம் ஜேஆர் தனது அரசியல் நரித்தந்திர மூளையின் மகத்துவத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

தனிநாடு கோரி போராட்டத்தை ஆரம்பித்திருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியினதும், அதற்கு பேராதரவளித்திருந்த தமிழ் மக்களினதும் அரசியல் வலிமையைப் பலவீனப்படுத்த வேண்டும் என்ற திட்டமும் ஜேஆர் ஜயவர்தனவிடம் இருந்தது. அந்தத் திட்டத்தின் ஓர் அங்கமாகவே தமிழர் விடுதலைக்கூட்டணி தலைவர்களை மாவட்ட சபை முறைமையை ஏற்கச் செய்து, அதற்கான தேர்தலில் அவர்களை அவர் போட்டியிடச் செய்திருந்தார்.

 ஐநூறு பேர் கொண்ட பொலிஸ் படையும் வந்தது

அதேவேளை, மாவட்ட சபைத் தேர்தலில் எப்படியாவது யாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் ஒருவரை வெற்றி பெறச் செய்துவிட வேண்டும் என்பதிலும் அவர் குறியாக இருந்தார். தமிழ் மக்களின் ஒன்றிணைந்த அரசியல் பலத்தைப் பலவீனப்படுத்துவதற்குரிய களமாக மாவட்டசபைகளுக்கான தேர்தல் களத்தை அவர் தெரிவு செய்திருந்தார்.

நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளாகப் பிரபல்யம் பெற்றிருந்த ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் ரீதியாக வேரூன்றுவதற்காக மேற்கொண்ட முயற்சிகள் பெரிய அளவில் வெற்றியளிக்கவில்லை. இருப்பினும் அந்த முயற்சிகள் முழு அளவில் தோல்வியடையவுமில்லை.

அந்த வகையில் 1970 ஆம் ஆண்டு தேர்தலில் அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸின் சார்பில் வட்டுக்கோட்டை தொகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தளபதியாகத் திகழ்ந்த அமிர்தலிங்கத்தைத் தோற்கடித்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியிருந்த அ.தியாகராஜாவை, 1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மாவட்டசபைக்கான தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி தனது வேட்பாளராகத் தெரிவு செய்திருந்தது.

தமிழ்க் காங்கிரஸின் வட்டுக்கோட்டை தொகுதிக்கான பிரதிநிதியாக 1970 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்குச் சென்றிருந்த அ.தியாகராஜா தமிழ் மக்களின்; அரசியல் நலன்களை முற்றாகப் புறக்கணித்திருந்த போதிலும், 1972 ஆம் ஆண்டு சிறிலங்கா சுதந்திரக் கட்சியினால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புக்கு ஆதரவளித்திருந்தார். அத்தகைய ஒரு பின்னணியிலேயே மாவட்ட சபைத் தேர்தலில் அவர் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராகக் களமிறங்கியிருந்தார்.

யாழ் மாவட்டத்தில் தமிழ் வேட்பாளர்கள் எவரும் பேரின கட்சிகளின் சார்பில் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று ஆயுதப் போராட்டத்தில் குதித்திருந்த இளைஞர்கள்; எச்சரிக்கை செய்திருந்தனர். அந்த எச்சரிக்கையை மீறிச் செயற்பட்டிருந்த தியாகராஜா தேர்தலுக்கு முந்திய வாரம் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.

தமிழ் அரசியலைப் பலவீனப்படுத்தும் நோக்கத்தில் எந்த வகையிலாவது யாழ்ப்பாணத்தில் காலூன்றிவிட வேண்டும் என்று முனைந்திருந்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைக்கு, தனது வேட்பாளர் அங்கு கொலை செய்யப்பட்டிருந்ததைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இருப்பினும் அந்தத் தேர்தல் களத்தில் தனது கைவரிசையைக் காட்ட வேண்டும் என்பதற்காக அமைச்சர்களான காமினி திசாநாயக்க, சிறில் மத்தியூ ஆகியோரின் தலைமையில் அதிகாரிகள் குழுவொன்றை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி இருந்தார். அத்துடன் 500 பேர் கொண்ட ஒரு விசேட பொலிஸ் படையும் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

வெறியாட்டம்

ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் தியாகராஜா கொல்லப்பட்ட சூழலில் தேர்தலுக்கான பிரசாரத்தில் தமிழர் விடுதலைக்கூட்டணியினர் மும்முரமாக இறங்கி இருந்தனர். மே மாதம் 31 ஆம் திகதி யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் கூட்டணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

அந்தக் கூட்டத்திற்குப் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த 3 பொலிசார் ஆயுதமேந்திய இளைஞர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகினர். அவர்களில் இருவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். படுகாயமடைந்த மற்றவர் உடனடியாகக் கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அன்று மாலை சம்பவ இடத்திற்குச் சென்றடைந்த பொலிசார் நாச்சிமார் கோவிலடியைச் சூழ இருந்த வீடுகள் கட்டிடங்கள் அனைத்திற்கும் எரியூட்டினார்கள். கண்ணிலகப்பட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அந்தப் பிரதேசம் ஒரு குறுகிய நேரத்தில் புகை மண்டலம் சூழ்ந்து சுடுகாடாகியது.

அந்த அரச வன்முறைகள் அத்துடன் நிற்கவில்லை. கொழும்பில் இருந்து வந்தவர்களினால் யாழ் நகரம் பெரும் தாக்குதலுக்கு உள்ளாகியது. நகரில் வைக்கப்பட்டிருந்த தமிழ்ப் பெரியார்களின் சிலைகள் அடித்து நொறுக்கப்பட்டன. வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டு எரியூட்டப்பட்டன. ஈழநாடு பத்திரிகை நிறுவனத்துக்கும் எரியூட்டப்பட்டது.

நூலகத்தில் இருந்து பழம்பெரும் சுவடிகள், பெறுமதி மிக்க புத்தகங்கள், பத்திரிகைகள், கையெழுத்துப் பிரதிகள் என்பவற்றின் தொகுப்புக்கள் என்பன முற்றாக எரித்துச் சாம்பலாக்கப்பட்டன. இலங்கை மற்றும் தென்னிந்திய பழைமை வாய்ந்த இலக்கியம் மற்றும் வரலராற்றுப் பதிவுகளைக் கொண்ட கிடைத்தற்கரிய புத்தகங்களும் எரித்து நாசமாக்கப்பட்டன.

எல்லாமாக சுமார் ஒரு லட்சம் புத்தகக் களஞ்சியம் இந்த வெறியாட்டத்தின் மூலம் நாசமாக்கப்பட்டது. நூலகக் கட்டிடமும் தீயினால் பெரும் சேதத்திற்கு உள்ளாகியது.

ஆசியாவிலேயே சிறந்த பெரிய நூலகமாகத் திகழ்ந்த யாழ் நூலகம் என்ற அறிவுக்களஞ்சியம் யாழ்ப்பாணத்தில் வெறியாட்டம் ஆடியவர்களினால் அழித்தொழிக்கப்பட்டது. இது தமிழ் மக்களின் அறிவுசார்ந்த செல்வத்திற்கு ஏற்பட்;ட ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

யாழ் நூலகப் பிரதேசத்தில் அமைந்திருந்த யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வி.யோகேஸ்வரனின் வீட்டைச் சுற்றி வளைத்த காடையர்கள் அவருடைய ஜீப் வாகனத்திற்கு முதலில் தீ வைத்ததுடன், வீட்டிற்கும் தீ வைத்தார்கள். நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தெய்வாதீனமாக அவர்களுடைய கண்ணில் அகப்படவில்லை. அவர் தனது மனைவியுடன் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தார்.

ஒப்புக்கொண்டனர் – நீதி நியாயம் வழங்க முற்படவில்லை

அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் இருவர் அதிகாரிகள் மற்றும் பெரும் பொலிஸ் படையுடன் யாழ். மாவட்ட சபைத் தேர்தலைக் கவனிப்பதற்காக வருகை தந்திருந்த நிலையிலேயே யாழ் நூலகமும், யாழ் நகரமும் எரித்து சாம்பலாக்கப்பட்டது. பேரழிவுக்கு உள்ளாகியது. இந்த வெறியாட்டத்தை நடத்தியவர்கள் சிவிலுடையில் காணப்பட்ட போதிலும், அவர்கள் மத்தியில் பொலிஸ் சீருடை அணிந்தவர்களும் இருந்ததைப் பாதிக்கப்பட்ட பலர் நேரில் கண்டிருந்தார்கள்.

நகரின் மையப்பகுதியில் யாழ் வாடி வீட்டில் தங்கியிருந்த அமைச்சர்கள் இருவரும் யாழ் நகரமே தீப்பற்றி எரிந்த போது எழுந்த தீச்சுவாலையையும், புகை மண்டலத்தையும் நேரடியாகக் கண்டிருந்தார்கள். ஆனால் அங்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறியவோ அல்லது அந்த அட்டூழியங்களைத் தடுத்து நிறுத்தவோ அவர்கள் முயற்சிக்கவில்லை.

யாழ் நகரமும், யாழ் நூலகமும் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பின்னர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டபோது, அமைச்சர்கள் காமினி திசாநாயக்காவும், சிறில் மத்தியூவும் அங்கு பிரசன்னமாக இருந்ததை ஒப்புக்கொண்டிருந்தனர். அது மட்டுமல்லாமல் மது வெறிக்கு ஆளாகியிருந்த சில காவல்துறையினரே கட்டு மீறி நடந்து கொண்டார்கள் என்று மிகச் சாதாரணமாகக் குறிப்பிட்டிருந்தனர்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அந்தப் பேரழிவையும் பேரக்கிரமத்தையும் மிகச் சாதாரண நிகழ்வாகவே அந்த அமைச்சர்களும், அரச தரப்பினரும் கருதி, நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின்போது உரையாற்றி இருந்தனர். அங்கு நடைபெற்ற சம்பவங்கள் குறித்து ஆதாரங்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான அ.அமிர்தலிங்கம் மற்றும் வி.யோகேஸ்வரன் ஆகியோர் நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்து நியாயம் கோரியிருந்தனர்.

அவர்களுடைய அறிக்கையையும் உரையையும் செவிமடுத்த அரச தரப்பினர் வாயடைத்துப் போயிருந்தனர். பதிலளிக்க வேண்டும் என்ற சம்பிரதாயத்திற்காக அவர்கள் கருத்துக்களை வெளிப்படுத்தனார்களே தவிர மனிதாபிமானத்தையோ அல்லது இழைக்கப்பட்ட அநியாயங்களை உணர்ந்து அதற்காக வருத்தத்தையோ வெளிப்படுத்தவில்லை. நடைபெற்ற அநியாயங்களுக்கு நீதி வழங்கவும் குற்றவாளிகளைத் தண்டிக்கவும் முற்படவே இல்லை.

யாழ் நூலகம் எரிக்கப்பட்டு நான்கு தசாப்தங்களாகின்றன. தமிழ் மக்களை இன ரீதியாக ஒடுக்க வேண்டும் என்ற அரசியல் நிலைப்பாட்டில் இருந்து பேரினவாதிகள் இன்னுமே விடுபடவில்லை.

தமிழ் மக்களின் அரசியல் ரீதியான ஒற்றுமையையும் அரசியல் பலத்தையும் இல்லாமல் செய்ய வேண்டும். அவர்களை அரசியல் ரீதியாகப் பலவீனமடையச் செய்து இரண்டாந்தரக் குடிமக்களாகவே வைத்திருக்க வேண்டும் என்ற நீண்டகால திட்டத்தை அவர்கள் படிப்படியாகச் செயற்படுத்தி வருவதையே 1981 ஆம் ஆண்டின் பின்னரான அரச வன்முறைச் செயற்பாடுகள் வரலற்று நிகழ்வுகளாகக் காட்டியிருக்கின்றன.

நினைவுகூர வேண்டும் நிலைமைகள் குறித்து சிந்திக்கவும் வேண்டும்

மாவட்ட சபைத் தேர்தலின்போது தமிழ் மக்கள் மீதும், அவர்களுடைய ஒன்றிணைந்த அரசியல் நிலைப்பாட்டின் மீதும் பேரின அரசியல்வாதிகள் கட்டவிழ்த்துவிட்ட வன்முறைகள் தற்செயலாக நடைபெற்றதல்ல. ஏற்கனவே ஏதாவது ஒரு வகையில் தமிழர்கள் மீதான தாக்குதல்களை நடத்த வேண்டும் என்பதற்கான பெரும் திட்டம் தீட்டப்பட்டிருந்தது என்பது அந்த வன்முறைகளின் பின்னர் ஏற்கனவே தெளிவாகியிருந்தது

யாழ் நூலக எரிப்பின் மூலம் கலை, கலாசார, பண்பாட்டு அறிவியல் ரீதியாக தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு நடவடிக்கையே மேற்கொள்ளப்பட்டது என்பது அந்த வன்முறைகள் இடம்பெற்ற விதத்தில் இருந்து தெளிவாகியது. அது மட்டுமல்ல. அதன் பின்னர் 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜுலை வன்முறைகளின் மூலம் தமிழ் மக்களின் பொருளாதாரம் முற்றாக நசுக்கி அழிக்கப்பட்டது. இது தமிழ் மக்கள் மீதான பொருளாதார ரீதியான இன அழிப்பு நடவடிக்கையாகவே மேற்கொள்ளப்பட்டது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

கறுப்பு ஜுலை வன்முறைகளைத் தொடர்ந்து தீவிரம் பெற்ற தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டம் 2009 ஆம் ஆண்டு அப்பட்டமான இன அழிப்பு இராணுவ நடவடிக்கையாக முள்ளிவாய்க்காலில் நடத்தி முடிக்கப்பட்டது.

பேரழிவுகளுக்கு மத்தியிலும் தமது அரசியல் உரிமைகளுக்காகவும் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், உரிமை மீறல்களுக்காகவும் குரல் எழுப்புகின்ற தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாகப் பல்வேறு வடிவங்களில் நிழல் வடிவிலான இன அழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

காணி அபகரிப்பு, கலாசார ரீதியான, மத ரீதியான அடக்குமுறைகள், தொல்லியல் சின்னங்களை பௌத்த சின்னங்களாக உரிமை கோருவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு வடிவிலான நடவடிக்கைகள் என்று அந்தப் பட்டியல் நீண்டு செல்கின்றது.

இந்த நிலைமைகள் வெறுமனே தமிழ் மக்களைத் துறைசார்ந்த ரீதியில் பாதிப்படையச் செய்வதுடன் நிற்கவில்லை. தமிழ் மக்களின் ஒன்னிணைந்த அரசியல் சக்தியையும் பலவீனப்படுத்தி உள்ளது. அந்த அரசியல் சக்தி திரட்சி பெற முடியாத வகையில் புறச் சூழல்களும், அரசியல் சூழல்களும் மறைமுக நிகழ்ச்சிநிரல்களின் ஊடாக அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

யாழ் நூலக எரிப்பை நினைவுகூர்ந்து வருந்துகின்ற அதேவேளை, அரசியல் ரீதியாக எழுந்துள்ள நிலைமைகளையும் தமிழ் மக்கள் நினைவுகூர்ந்து சிந்திக்க வேண்டியது அவசியம்.

பி.மாணிக்கவாசகம்