யேர்மன் தலைநகரில் யூத மக்களின் நூல்கள் எரிக்கக்பட்ட வரலாற்று சதுக்கத்தில் நடைபெற்ற யாழ் பொது நூலக எரிப்பின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல்

534 0

தமிழர்களின் அறிவுக்களஞ்சியமான யாழ் பொது நூலகம் பேரினவாதிகளால் எரியூட்டப்பட்டு 39 ஆண்டுகள் கடக்கின்றது.
தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாததொழிக்கும் ஸ்ரீலங்கா அரசின் கட்டமைப்புசார் இனவழிப்பின் ஓர் அங்கமான பண்பாட்டுப் படுகொலையாக அரங்கேற்றப்பட்டதே யாழ் நூலக எரிப்பாகும்.

“ஒரு இனத்தை அழிக்க முன் அதன் வேர்களை அழி” என்பார்கள். அந்த இனத்தின் அடிப்படை ஆதாரங்களையும், மூலங்களையும் அழிப்பது என்பது இன அழித்தொழிப்புக்கான முன்நிபந்தனையாகக் கொள்வார்கள். உலக வரலாறு முழுவதும் இத்தகைய போக்கைக் காண முடியும்.

யூதர்களின் மீது இன அழிப்பை மேற்கொண்டபோது ஹிட்லர் தனது நாசிப் படைகளை ஏவி யூதர்களின் படைப்புகளைத் தேடித் தேடி அழித்த செய்தியை நாமறிவோம்.

நூல்களை எரிக்கின்ற கொடுமையை, நாசிகள் எப்போதுமே புரிந்து வந்திருக்கிறார்கள். 1930களில் யூத மக்களின் நூல்களை வீதியோரங்களில் பகிரங்கமாக நாசிக்கள் எரித்து வந்தனர். 1933ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் திகதியன்று ஹிட்லரின் பிரச்சார அமைச்சரான கோயபல்சின் உத்தரவின் பிரகாரம் பெர்லின் நூல்நிலையத்திற்குச் சென்ற நாசிகள் அங்கிருந்த சகல நூல்களையும் எரித்தார்கள். ஒரே ஒரு வித்தியாசம் தான்! இலங்கையில் சிங்கள நாசிகள் செய்ததுபோல, அவர்கள் பெர்லின் நூல் நிலையத்தை எரிக்கவில்லை.

அதன் வழியில் யாழ் நூலக எரிப்பும் 1981ம் ஆண்டு ஜூன் முதலாம் திகதி சிங்கள காடையர்களால் தீக்கிரையாக்கப்பட்ட அனுபவமும் தமிழ் மக்களுக்கு உண்டு.

வரலாற்றை அழிப்பது, சிதைப்பது, மறைப்பது, மறுப்பது என்கிற நிலைகளில் இன அழிப்பாளர்களின் வியூகங்கள் அமைந்துவிடுகின்றன. இலங்கையில் தமிழ் மக்களின் மீதான அழித்தொழிப்பும் இந்த வடிவங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கிறது.

யாழ் பொது நூலக எரிப்பு என்பது ஈழத்தமிழர்கள் மீது சிங்கள பேரினவாத அரசு மேற்கொண்ட இனவழிப்பில் முக்கிய நிகழ்வாகும்.நாசி படைகளால் யூத மக்களின் நூல்கள் எரிக்கப்பட்ட வரலாற்று வளாகத்தில்
Bebel Platz ( Berlin ) இன்றைய நாள் 01.06.2020 பொது நூலக எரிப்பின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. பல்லின மக்களுக்கு யேர்மன் மொழியில் துண்டுப்பிரசுரம் வழங்கி விளக்கங்களும் கொடுக்கப்பட்டது.