‘தமிழ்க்குரல்’ சண்முகம் சபேசன் மறைந்தார்!

141 0

அவுஸ்திரேலியாவில் விக்ரோரியா மாநிலத்தில் மெல்பனை தளமாகக்கொண்டிருந்து இயங்கிய தமிழ்ச்சங்கம், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழர் புனர் வாழ்வுக்கழகம், மற்றும் 3 CR வானொலி தமிழ்க்குரல் ஒலிப்பரப்புச்சேவை முதலானவற்றில் நீண்டகாலமாக ஈடுபட்டுழைத்திருக்கும் சண்முகம் சபேசன் இன்று ( 29 -05 – 2020 ) ஆம் திகதி அதிகாலை மெல்னில் மறைந்துவிட்டார் என்ற துயரமான செய்தி எம்மை வந்தடைந்தது.

அவுஸ்திரேலியாவுக்கு நான் புலம்பெயர்ந்து வந்தபின்னர் எனக்கு அறிமுகமாகி, நான் உறவாடி மகிழ்ந்தவர்களில் கலை, இலக்கியம், கல்வி, ஊடகம் முதலான துறைகளிலும் மற்றும் சமூகப்பணிகளிலும் ஈடுபட்ட பலரைப்பற்றி தொடர்ச்சியாக எழுதிவந்துள்ளேன்.

அந்த வரிசையில் தீவிரமான வாசிப்பு பயிற்சியிலிருப்பவர்கள் தொடர்பாக வாசகர் முற்றம் என்ற தலைப்பிலும் சிலரது வாசிப்பு அனுபவங்களை கேட்டு எழுதி பதிவுசெய்து வந்துள்ளேன்.

அந்த வரிசையில் மெல்பனில் நீண்டகாலமாக என்னுடன் உறவு பாராட்டிவரும் நண்பர் சண்முகம் சபேசன் பற்றியும், அவரது வாசிப்பு அனுபவங்களையும் பற்றியும் விரிவாக எழுதவேண்டும் என்ற எண்ணத்திலிருந்தபோது, இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தின் செறிவு குறையட்டும் சந்தித்துப்பேசுவோம் என்று சொன்னார்.

இன்னமும் அந்த வைரஸின் அச்சுறுத்தல் முடிவுக்கு வராமலிருக்கும் இக்காலப்பகுதியில், நண்பர் சபேசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி செவிக்கு எட்டி மிகவும் வருந்தினேன். அதனையடுத்து, நேற்று நள்ளிரவு சபேசனின் நீண்டகால நண்பரும் தமிழ்நாடு திராவிட இயக்கப்பேரவையின் தலைவருமான பேராசிரியர் சுபவீரபாண்டியனுக்கும் தகவல் தெரிவித்தேன். அவரும் வருந்தியதுடன் மேலதிக தகவலை கேட்டறிந்து சொல்லுமாறு தெரிவித்தார்.

எனினும், அதனையடுத்து இன்று அதிகாலை சபேசன் மறைந்துவிட்டார் என்ற துயரமான செய்தியைத்தான் அவருக்கு வழங்கமுடிந்தது.

மெல்பனில் எனக்குத் தெரிந்த சில சபேசன்கள் இருக்கிறார்கள். நண்பர் சண்முகம் சபேசனை, 3 CR சபேசன் என்று அடையாளப்படுத்தினால்தான் பொதுவாக இங்குள்ள தமிழ் சமூகத்தவர் அறிவர்.

மெல்பனில் Fitzroy smith street இலிருந்து 1976 ஆம் ஆண்டு முதல் இயங்கும் 3 CR சமூக வானொலி கலையகத்திற்கு கால் நூற்றாண்டு காலத்திற்கும் ( இருபத்தியைந்து வருடங்களுக்கும் ) மேல் வாராந்தம் சென்று தமிழ் ஒலிபரப்பை நிகழ்த்தியவர் சபேசன்.

அந்த ஒலிபரப்பு கலையகத்திற்கு பல தடவை என்னையும் அழைத்து நேர்காணல் உட்பட பல உரைகளையும் நிகழ்த்தவைத்தவர்.

1988 ஆம் ஆண்டு காலப்பகுதியில், சபேசன் என்னை அங்கே அழைத்து, நாம் அக்காலப்பகுதியில் ஆரம்பித்திருந்த இலங்கை மாணவர் கல்வி நிதியம் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் செயற்பாடுகளை நேயர்கள் அறியும் வகையில் அவரது நண்பர் திரு. ரவி கிருஷ்ணா மூலம் என்னுடன் ஒரு சந்திப்பையும் ஒழுங்குசெய்திருந்தார்.

பின்னர் அந்த நேர்காணலின் எழுத்து வடிவம், பிரான்ஸிலிருந்து வெளியான பாரிஸ் ஈழநாடு இதழிலும் வெளியாகியதையடுத்து, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் இரக்கமுள்ள அன்பர்கள் எமது உருக்கமான வேண்டுகோளை அந்த நேர்காணலில் படித்துவிட்டு இலங்கையில் நீடித்த போரில் பெரிதும் பாதிக்கப்பட்ட ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு உதவ முன்வந்தனர்.

இவ்வாறு நண்பர் சபேசன் குறிப்பிட்ட 3 CR வானொலி ஊடாக பல தன்னார்வ சமூகப்பணிகள் குறித்த செய்திகளை மக்களிடம் பகிர்ந்துகொள்வதற்கு ஆக்கபூர்வமாக பணியாற்றினார்.

அவ்வாறு அவர் முக்கியத்துவம் வழங்கிய மற்றும் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் தமிழர் புனர்வாழ்வுக்கழகம். விக்ரோரியா தமிழ்ச்சங்கம், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு உட்பட பல சமூக அமைப்புகளின் நிகழ்ச்சிகளுக்கும் முன்னுரிமை கொடுத்து ஒலிபரப்பினர்.

சிட்னியில் மறைந்த இலங்கை வானொலி, லண்டன் பி.பி.சி புகழ் ‘அப்பல்லோ ‘ சுந்தா சுந்தரலிங்கம், மெல்பனில் மறைந்த ஓவியர் கே. ரி. செல்லத்துரை அய்யா ஆகியோர் மறைந்தவேளையிலும் எனது இரங்கல் உரைகளை அந்த வானொலியில் ஒலிபரப்பியதுடன், பல தடவைகள் என்னையும் எழுத்தாளர் ( அமரர் ) நித்தியகீர்த்தியையும் கலையகத்திற்கு அழைத்து இலக்கிய சந்திப்பு உரைகளையும் ஒலிபரப்பினார்.

நண்பர் சபேசன், தமிழ்த்தேசியத்திலும் பேச்சுவார்த்தை மற்றும் ஆயுதப்போராட்டத்தின் ஊடாக தொடர்ந்து ஈழ விடுதலைப்போராட்டத்தை முன்னெடுத்த வேலுப்பிள்ளை பிரபாகரனிடத்திலும் ஆழ்ந்த நேசம் கொண்டிருந்தவர்.

பதினொரு வருடங்களிற்கு முன்னர், இதே காலப்பகுதியில் நேர்ந்துவிட்ட ஈடுசெய்யப்படமுடியாத இழப்புகளினால் கலங்கியிருந்தவர்.

அக்கலக்கத்தையும் துயரத்தையும் தீவிரமான வாசிப்பிலிருந்து கடந்து செல்வதற்கு முயன்றவர். எனினும் தீராத துயரம் அது. எனதும் இவரதும் நண்பருமான கவிஞர் புதுவை ரத்தினதுரை, இவரை வன்னியில் சந்தித்தபோது எனக்காக கொடுத்தனுப்பிய இயக்கத்தின் தமிழ்த்தாய் வெளியீடான தனது நினைவழியா நாட்கள் கவிதைத் தொகுதியை எடுத்துவந்து தந்ததுடன், நண்பர் யாதவன் ஊடாக பெற்ற புதுவையின் நேர்காணல் பதிவையும் 3 CR வானொலி தமிழ்க்குரலில் ஒலிபரப்பினார்.

“ யு.கே.க்குப்போக யூ.ரி.ஏ ஏறாமல்
ஏ.கே. தூக்கி இறந்தவர்கள் எத்தனைபேர்…..
இங்கே பற்பலர் பேசிக்களித்தனர்
எம்நாடு எரிகையில் ஓடிப்பறந்தனர்
சங்கமாடிய தமிழ் எனப்பேசிய
தம்பிமார் எல்லாம் கடலைக்கடந்தனர் “

என்று புலம்பெயர்ந்தவர்கள் பற்றி கவிதை பாடிய கவிஞர் புதுவை ரத்தினதுரை எழுதிய புலுனிக்குஞ்சுகளும் பூவரசம் வேலியும் என்ற நூலையும் புலம்பெயர்ந்த தமிழர்கள் வெளிநாடுகளில் வெளியிட்டு வைத்தபோது, மெல்பனிலும் அந்த நூலின் வெளியீட்டு விழாவை முன்னின்று நடத்தியவர்தான் சபேசன்.
என்னையும் அழைத்துப்பேசவைத்தார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் குழு வௌியிட்ட “ இஸ்லாமியத் தமிழரும் தமிழீழ விடுதலைப் போராட்டமும் “ என்ற நூல் எனக்கு கிடைத்தபோது, அதுபற்றிய எனது வாசிப்பு அனுபவத்தையும் தனது வானொலி ஒலிபரப்பில் சபேசன் சேர்த்துக்கொண்டார். அந்த நூலை தமிழீழ விடுதலைப்போரில் முதற் களப்பலியான இஸ்லாமியத் தமிழ் வீர மறவன் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் லெப்டினன்ட் ஜூனைதீனுக்கு சமர்ப்பணம் செய்திருந்தனர்.

அக்கட்டுரை பின்னர் கொழும்பு தினக்குரல் வார இதழிலும் வெளியானது. மூத்த இலக்கிய ஆளுமைகளான, மகாகவி பாரதி, புதுமைப்பித்தன், கண்ணதாசன், ஜெயகாந்தன், அகிலன், தி. ஜானகிராமன், எஸ். பொன்னுத்துரை, டொமினிக்ஜீவா, இரசிகமணி கனகசெந்திநாதன், கவிஞர் அம்பி முதலானோரின் சுவாரசியமான மறுபக்கங்கள் குறித்து நான் எழுதியிருந்த தொடரையும் தனது 3 CR தமிழ்க்குரலில் அவரே வாசித்து ஒலிபரப்பினார்.

சபேசன், தமிழ்நாட்டின் தமிழ் உணர்வாளர்கள் பேராசிரியர் சுப வீரபாண்டியன், பழ. நெடுமாறன், ஓவியர் புகழேந்தி, கவிஞரும் திரைப்பட வசன கர்த்தாவுமான அறிவுமதி, இயக்குநர் தங்கர்பச்சான், கவிஞர் வைரமுத்து ஆகியோருடனும் நட்புறவு கொண்டிருந்தவர்

மெல்பனுக்கு சுப. வீரபாண்டியன், ஈழவேந்தன், உலகத் தமிழர் பேரவையைச்சேர்ந்த வண. பிதா இமானுவேல் அடிகளார் உட்பட பல தமிழ் உணர்வாளர்கள் வருகை தந்த சந்தர்ப்பங்களில் சபேசனின் இல்லத்தில் அன்பான உபசரிப்பில் திழைத்திருக்கிறார்கள்.

அரசியலில் கலை, இலக்கியத்தில் மாற்றுக்கருத்துக்கொண்டவர்களுடனும் சிநேகபூர்வமாக பழகும் மென்மையான இயல்புகளையும் தன்னகத்தே கொண்டிருந்தவர் சபேசன்.

நவீன தமிழ் இலக்கியத்தில் இவருக்கிருந்த தீவிர நாட்டத்தினால், தரமான இலக்கியச் சிற்றிதழ்களையும் நூல்களையும் தருவித்து படிப்பவர். சென்னையில் நடைபெறும் புத்தகத் திருவிழாவுக்கும் சென்று வந்து தனது அனுபவங்களை எம்முடன் பகிர்ந்துகொள்வார்.

இவரது வாசிப்பு அனுபவத்தின் தீவிரம், இவரை புதுச்சேரியில் வதியும் கரிசல் இலக்கிய வேந்தர் என வர்ணிக்கப்படும் மூத்த படைப்பாளி கி. ராஜநாரயணன் அவர்களையும் தேடிச்சென்று உறவாட வைத்தது.

ஈழத்து இலக்கியத்தின் மீதும் புகலிட இலக்கிய முயற்சிகள் குறித்தும் ஆர்வம் காண்பிக்கும் கி. ரா. அவர்கள், சபேசனு டனான அந்த சந்திப்பிற்குப்பின்னர், தீராநதி இதழில் ஒரு கட்டுரையும் எழுதினார். அதற்கு Cover Story முக்கியத்துவமும் வழங்கப்பட்டிருந்தது.

2001 ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் முற்பகுதியில் மெல்பனில் நாம் அடுத்தடுத்து இரண்டு நாட்கள் தமிழ் எழுத்தாளர் விழாவை நடத்தியபோது, அதனை புறக்கணித்து பகிஷ்கரிக்குமாறு ஒரு பிரசாரமும் சிலரால் தொடங்கப்பட்டபோது, சபேசனின் நிலைமை ஒரு சூழ்நிலையின் கைதிக்கு ஒப்பானதாக மாறியிருந்தது. அதற்காக பின்னாளில் அவர் வருந்தவும் நேரிட்டது.

எனினும் 2012 ஆம் ஆண்டில், அதாவது பதினோரு ஆண்டுகளின் பின்னர், அவர் மெல்பனில் நடைபெற்ற 12 ஆவது தமிழ் எழுத்தாளர் விழா அச்சமயம் எமது தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் தலைவராக இருந்த பாடும்மீன் சு. சிறீகந்தராசா தலைமையில் நடந்தபோது, அதில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அச்சமயம் அவருக்கு “ எதற்கும் காலம் பதில் சொல்லும் “ என்று இரத்தினச்சுருக்கமாக சொன்னபோது தோளில் தட்டி புன்னகை சிந்தினார்.

நண்பர் எழுத்தாளர் நடேசனுக்கும், சபேசனுக்கும் இடையில் அரசியல் ரீதியில் நிறைய கருத்து முரண்பாடுகள் இருந்தபோதிலும் இவர்களின் நட்புக்கு என்றைக்கும் குந்தகம் ஏற்படவில்லை. அந்த நட்பினை சபேசன் இவ்வாறு வர்ணிப்பார்.

மூதறிஞர் ராஜாஜி ஆத்மீகவாதி. தந்தை பெரியார் நாத்தீகவாதி. கொள்கையால் இணையாத வேறு வேறு துருவங்கள். ஆனால், இறுதிவரையில் நல்ல நண்பர்களாக விளங்கினார்களே… ! அப்படித்தான் எமது நட்புறவும் என்று புன்னகையுடன் கடந்து செல்வார்.

சபேசனின் வானொலி உரைகள் ஏராளமாக அவரது சேகரிப்பில் இருக்கின்றன. அவற்றை வானொலியில் நிகழ்த்தும்போது அருகில் ஒரு தண்ணீர் போத்தலுடன்தான், ஒலிவாங்கிக்கு முன்னால் அமருவார். இருமல் வந்து உபத்திரவம் கொடுக்கும்போதெல்லாம் அந்த தண்ணீர்ப்போத்தல்தான் அவருக்கு பக்கத்துணை.

சில கட்டுரைகள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. மூத்த சட்டத்தரணி நடேசன் சத்தியேந்திரா முதல், முன்னாள் இலங்கை வெளிவிவகார அமைச்சர் லக்‌ஷ்மண் கதிர்காமர் வரையில் சபேசனின் சில உரைகள் தமிழிலும் ஆங்கில மொழிபெயர்ப்பூடாகவும் சென்றிருக்கும் செய்திகள் பலரும் அறியாதது.

குறிப்பிட்ட உரைகளை தொகுத்து நூலாக வெளியிடவேண்டும், பூபதி நீங்கள்தான் அவற்றை பார்வையிட்டு கால வரிசைப்படி செப்பனிட்டுத்தரல் வேண்டும் என்று எனக்கு தொலைபேசி அழைப்பு எடுக்கும் வேளைகளில் எல்லாம் சொல்வார்.

2020 ஆம் ஆண்டு பிறந்ததும் அந்த வேலைகளை ஆரம்பிப்போம் என்ற தீர்மானத்திற்கு வந்திருந்தவேளையில் எதிர்பாராமல் கொரோனா வந்து இடைவெளியை ஏற்படுத்திவிட்டது.

கடந்த ஆண்டில் மெல்பனில் நடைபெற்ற நடேசனின் நூல்கள் குறித்த அறிமுக அரங்கிலும் சபேசன் கலந்துகொண்டு, நடேசன் எழுதிய நைல் நதிக்கரையில் பயண இலக்கிய நூல் குறித்தும் உரையாற்றினார். இதுவே சபேசன் கலந்துகொண்டு உரை நிகழ்த்திய இறுதி நிகழ்வு.

இந்த ஆண்டு தொடக்கத்தில் சிட்னியில் எங்கள் நீண்டகால நண்பர் கலைவளன் சிசு.நாகேந்திரன் அய்யா, மறைந்த செய்தியை அறிந்த சபேசன் என்னுடன் துயர் பகிர அழைப்பெடுத்தபோது, நான் அந்த இறுதி நிகழ்விற்காக சிட்னிக்குப் புறப்பட்டுக்கொண்டிருந்தேன்.

தனது உடல் நிலையினால் அங்கு வரமுடியாதிருப்பதாக கனத்த மனதுடன் அவர் குலுங்கி அழுதபோது நெகிழ்ந்துவிட்டேன். மெல்பனில் சிசு அய்யாவுக்கு நாம் இரங்கல் நிகழ்வு நடத்தும்போது வந்து உரையாற்றுங்கள் என்று அழைத்திருந்தேன்.

அந்த நிகழ்வும் திட்டமிட்டவாறு நடக்கவிருந்த வேளையில் சபேசனும் உரையாற்றவிருந்தார். எனினும் சமூக இடைவௌியை பேணவேண்டியிருந்தமையால் அந்த நிகழ்ச்சியையும் இறுதி நேரத்தில் இரத்துச்செய்துவிட்டோம்.

கடந்த ஆண்டு இலங்கையில் மறைந்த சிறந்த சமய சமூகப்பணியாளர் அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதரும் சபேசனின் உறவினர். மருத்துவமனையிலிருந்தவாறு, ஜேம்ஸ் பத்திநாதரின் மருமகன் ஆருரண் ரவீந்திரனிடத்தில், அன்னாரையும் தலைவர் பிரபாகரனையும் நினைவுபடுத்தி சபேசன் பேசியதாக அறிய முடிந்தது.

விடைபெறவேண்டிய தருணம் அவருக்கு வந்துவிட்டது. இனி எம்மிடம் எஞ்சியிருக்கப்போவது சபேசன் பற்றிய பசுமையான நினைவுகள் மாத்திரமே.