இதயங்களின் துடிப்பு.- வன்னியூர் குரூஸ் –

248 0

இதயங்களின் துடிப்பு.
****** ***
பெருங்காடு தனையழித்து முள்வேலி முகாமமைத்து
அருங்காட்சி யகம்போலே…! வருவோர்கள் பார்வையிட
மிருகங்கள் போலங்கே எட்டிப் பார்த்தும் ஏங்கியும்…!
பெருவாழ்வு வாழ்ந்தவர்கள் பெரும்பாடு பட்டனரே!

கனவுள்ளும் நுழையாத காலத்தின் பதிவாக…
உணவுக்கு வரிசைகட்டும் ஒருவகைப் பரிதாபம்…!
அழித்த நிலைதாண்டி அடுத்த களம்போலே…
விழிக்கும் திசையெல்லாம் காடையரின் காப்பரண்கள்!

அப்பப்போ உள்நுழைந்து கைதுகள் செய்கின்ற
அதிகாரம் அதுகொண்ட இராணுவப் புலனாய்வோ..!
எப்பெப்போ வருவானோ என்கின்ற ஏக்கத்தில்
கடிகார முள்போலே துடித்ததே இதயங்கள்.

– வன்னியூர் குரூஸ் –