வடக்கு-கிழக்கு தொடர்ந்தும் மிகப்பலமான இராணுவ முற்றுகைக்குள்-சுரேஷ் பிரேமச்சந்திரன்

418 0

வட-கிழக்கில் நிலைகொண்டுள்ள முப்படைகளுக்கும் தமிழ் மக்களின் காணி, நிலங்கள் தொடர்பான ஆதனங்களை திரட்டுவதுதான் அவர்களது முதல் பணியாக இருக்கின்றது. கொரோனானாவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு உதவி செய்கிறோம் என்ற போர்வையில் அவர்களின் நிலபுலன்களைக் கையகப்படுத்துவதும் அவர்களின் நோக்கமாக இருக்கிறதோ என்ற அச்சம் எம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது என்று தெரிவித்துள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசியக்கூட்டணியின் ஊடகப்பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் , வடக்கு-கிழக்கு என்பது தொடர்ந்தும் மிகப்பலமான இராணுவ முற்றுகைக்குள் இருக்கின்ற அதேவேளை, சிவில் நிர்வாகிகளை அப்புறப்படுத்தி இராணுவம் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவதென்பது, தமிழ் மக்களுக்கு பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

கேள்வி: கொரானா ஆபத்து நீங்கியதன் பின்னரான இலங்கையை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

பதில்: கடந்த அரசாங்கமும் சரி இப்பொழுது ஆட்சியில் இருக்கின்ற அரசாங்கமும் சரி அவர்களுடைய வரவு-செலவு திட்டங்களில் வரக்கூடிய துண்டுவிழும் தொகையை ஈடுசெய்வதற்கும் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கும் சர்வதேச நிதி ஆதாரங்களையே எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளும் சீனா, இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளும் இலங்கைக்கு கடன் உதவிகள் மற்றும் நிதியுதவிகளைச் செய்துவரும் நாடுகளாகத் திகழ்கின்றன. தமிழ் மக்களின் நியாயமான தேசிய இனப்பிரச்சினையை அரசியல் ரீதியில் தீர்ப்பதற்குப் பதிலாக ஆயுத ரீதியில் தீர்க்க முற்பட்டதன் காரணமாக உலக நாடுகளிலிருந்து கடனுக்குக் கொள்வனவு செய்த ஆயுதத்திற்கான கடனைச் செலுத்துவதற்காகவும் சீனாவிடமிருந்து நேரடியாகப் பெற்றுக்கொண்ட கடனைச் செலுத்துவதற்காகவும் இலங்கை அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை என்பது அமெரிக்க, ஐரோப்பிய, இந்திய நாடுகளிடமிருந்து சற்று விலகி, சீனசார்பான கொள்கையையே முன்னெடுப்பதாக உள்ளது. முன்னர் இருந்த அரசாங்கத்தையும் தற்பொழுதைய அரசாங்கத்தையும் சீனா தனது விருப்பப்படி ஆட்டுவிக்கக்கூடிய அளவிற்கு சீனாவின் ஆதிக்கம் இலங்கைக்குள் மிகப்பெரும் அளவில் அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக பல பில்லியன் அமெரிக்க டொலர்கள் வட்டியாகவும் முதலாகவும் வெளிநாடுகளுக்குச் செலுத்த வேண்டிய இக்கட்டான ஒரு சூழ்நிலைக்கு இலங்கை அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.

ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக இலங்கையின் உள்நாட்டு வருமானமானது இலங்கைக்குள் மீண்டுவரும் செலவீனமான அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தைக் கொடுப்பதற்கே போதாத நிலையில் இருக்கின்றது.

இவை ஒருபுறமிருக்க, யுத்தக்குற்றங்கள் தொடர்பாக ஏற்கனவே சர்வதேச சமூகத்திற்குக் கொடுத்திருந்த உறுதிமொழிகளிலிருந்து இலங்கை அரசாங்கம் பின்வாங்கியமையானது சர்வதேச சமூகத்தின் மத்தியில் இலங்கை தொடர்பான அதிருப்திகளை ஏற்படுத்தியுள்ளது. சீனா தவிர்ந்த ஏனைய ஐரோப்பிய அமெரிக்க நாடுகளிடமிருந்தும் அல்லது சர்வதேச நிறுவனங்களிலிருந்து இலங்கை, நிதியுதவிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாக இருந்தால், மனித உரிமை போன்ற விடயங்களில் அது தனது நேர்மையை வெளிப்படுத்த வேண்டும். ஆனால் இப்பொழுது இருக்கின்ற அரசாங்கம் சிங்கள பௌத்த மேலாதிக்கக் கொள்கையில் மிகவும் விடாப்பிடியுடன் இருக்கக்கூடிய ஒரு அரசாங்கமாக இருப்பதால் மனித உரிமைகள் போன்ற விடயங்களை ஏற்றுக்கொள்வாரகளா என்பது பாரிய கேள்வி.

மேற்கண்ட யதார்த்தங்களின் அடிப்படையில், நாங்கள் பார்ப்போமாக இருந்தால் கொரோனாவுக்குப் பின்னரான இலங்கை, மிக மோசமான பொருளாதார பின்னடைவைக் கொண்டதாகவும் வெளிநாட்டு முதலீடுகளை உள்ளீர்க்கும் சக்தியற்றதாகவுமே தென்படுகின்றது. இவை மாற்றப்படவேண்டுமாக இருந்தால், இலங்கை அரசாங்கம் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஆரோக்கியமன வழிமுறைகளைக் கண்டுபிடிக்க வேண்டும். மாகாணசபைகளின் அதிகாரங்கள் வலுவான அதிகாரங்களாக மாற்றப்படவேண்டும். குறிப்பாக வடக்கு-கிழக்கு மாகாணசபையின் அதிகாரங்கள் வலுவான மாற்றப்படுவதனூடாக வெளிநாடுகளில் பரந்து வாழும் பதினைந்து இலட்சம் புலம்பெயர் தமிழ் மக்களின் முதலீடுகளை உள்ளீர்ப்பதற்கான களத்தினை உருவாக்க வேண்டும்.

உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவிப்பதற்கும் ஏற்றுமதிப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும் இலங்கையின் புலம்பெயர் மக்களின் முதலீடுகள் அத்தியாவசியமானது.

இலங்கை தொடர்ந்தும் மேலும் மேலும் வெளிநாட்டுக் கடன்களில் தங்கியிருக்காமல், அல்லது சீனா போன்ற நாடுகளிடம் முழு நாட்டையும் அடவு வைக்காமல் அவற்றிலிருந்து தப்பிப் பிழைக்க வேண்டுமாக இருந்தால், இலங்கையின் பலம்வாய்ந்த புலம்பெயர் சமூகத்தின் முதலீடுகளை உள்வாங்குவதற்கான சாத்தியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதுதான் கொரோனாவிற்குப் பின்னரான இலங்கையைக் காப்பதற்கான ஒரு சிறந்த வழிமுறையாக அமையும்.

கேள்வி: இலங்கையின் தற்போதைய அரசியல் செல்நெறி குறித்து உங்களது கருத்து..

பதில்: இலங்கை தனது சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை முழுநாட்டிலும் நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது. ஜனாதிபதி தன்னை ஒரு சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கான தலைவராகவே வெளிப்படுத்தி நிற்கின்றார். இதன் காரணமாக தொடர்ந்தும் தமிழ் மக்கள் பல்வேறு நெருக்கடிக்குள் உள்ளாக்கப்படுகின்றனர். இந்துக் கோயில்களை பௌத்த கோயில்களாக மாற்றுவது, தமிழ் மக்களின் தொன்மையான புராதனச் சின்னங்களை தமது உடைமைகளாக்குவது, தமிழ்ப் பிரதேசங்களில் தொடர்ச்சியாக சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்துவது போன்ற விடயங்கள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன. இவற்றை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்காக பல்வேறுபட்ட அரச நியமனங்களில் இராணுவத்தினரே அதன் பொறுப்பாளர்களாக அமைச்சின் செயலாளர்களாக நியமிக்கப்படுகின்றனர்.

அதேசமயம், சிவில் சமூகத்தில் மிகவும் அனுபவம் வாய்ந்த, பிரசித்திபெற்ற, நிர்வாகத்திறன்மிக்கவர்கள் எத்தனையோ பேர் இருக்கையில், இராணுவ அதிகாரிகளை சிவில் நிர்வாகத்திற்கு நியமிப்பது என்பது ஜனாதிபதி தனக்கு ஆதரவான தனது செய்கைகளுக்கு ஒத்துப்போகக்கூடிய அதிகாரிகளை நியமிக்கின்ற ஒரு போக்கையே எம்மால் காணமுடிகின்றது.

அரச நிர்வாகம் என்பது வெளிப்படைத் தன்மை வாய்ந்ததாகவும் சிவில் சமூகத்தின் தேவைகளை நிறைவு செய்யக்கூடியதாகவும் அடிப்படையில் அமைய வேண்டும். ஆனால் இலங்கையின் ஜனாதிபதி ஒரு முன்னாள் இராணுவத்தினர் என்ற அடிப்படையில், அவரது நிர்வாகத்தன்மை என்பது இராணுவத்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது என்பதும் மேலும் மேலும் இராணுவ அதிகாரிகளை நியமிப்பதற்கான ஒரு காரணியாகவும் இருக்கிறது. இவ்வாறான நடவடிக்கைகள் என்பது சட்டத்தைப் புறந்தள்ளி, ஒரு சர்வாதிகாரத்தை நோக்கிய இராணுவ ஆட்சியை நோக்கிய தோற்றத்தினைக் காட்டி நிற்கிறது.

இப்பொழுது வட-கிழக்கில் நிலைகொண்டுள்ள முப்படைகளுக்கும் தமிழ் மக்களின் காணி, நிலங்கள் தொடர்பான ஆதனங்களை திரட்டுவதுதான் அவர்களது முதல் பணியாக இருக்கின்றது. கொரோனானாவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு உதவி செய்கிறோம் என்ற போர்வையில் அவர்களின் நிலபுலன்களைக் கையகப்படுத்துவதும் அவர்களின் நோக்கமாக இருக்கிறதோ என்ற அச்சம் எம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தமிழ் மக்களின் காணிகள் பறிமுதல் செய்யப்பட்டு சிங்கள மக்களுக்குக் கொடுத்த சம்பவங்கள் கடந்த ஆட்சியிலும் முந்தைய ஆட்சியிலும் நடைபெற்றுள்ளன என்பது வெளிப்படையானது. வடக்கு-கிழக்கு என்பது தொடர்ந்தும் மிகப்பலமான இராணுவ முற்றுகைக்குள் இருக்கின்ற அதேவேளை, சிவில் நிர்வாகிகளை அப்புறப்படுத்தி இராணுவம் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவதென்பது, தமிழ் மக்களுக்கு பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே கொரோனாவிற்குப் பின்னர், இலங்கையில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமாக இருந்தால் இத்தகைய நடவடிக்கைகளிலிருந்து அரசாங்கம் ஒதுங்கிக்கொள்வது சிறப்பாக இருக்கும்.

அரசாங்கத்தின் தமிழ் இன விரோதப் போக்கும், தமிழ் இன ஒழிப்பு நடவடிக்கைகளும் ஏற்கனவே சர்வதேசரீதியாக பெரும் கண்டனங்களைப் பெற்றுள்ளது. இவையாவும் நிறுத்தப்பட்டால்தான் இலங்கையின் எதிர்காலத்தைப் பற்றி அரசாங்கம் கனவு காண முடியும்.

நாட்டின் ஒட்டுமொத்த ஜனநாயகத் தன்மைக்கும் சிவில் நிர்வாகத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதற்கும் பிரதம மந்திரியும் அமைச்சர்களும் சிவில் சமூகமும் தொடர்ந்து நடைபெற்றுவரும் இராணுவ நிர்வாகக் கட்டுமானங்கள் தொடர்பாக கவனத்தில் எடுத்து, அவற்றை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

கேள்வி: சுதந்திரத்திற்குப் பின்னர் நாட்டின் அரசியல் யாப்பு பத்தொன்பதுமுறை திருத்தப்பட்டும் இன்னமும் ஸ்திரத்தன்மையற்றதாக இருப்பதாக பலரும் கூறுகின்றனர். இது குறித்து உங்களது கருத்து..

பதில்: இலங்கையில் மேற்கொள்ளப்படுகின்ற அரசியல் யாப்புகளும் திருத்தங்களும் சிறுபான்மை தேசிய இனமான தமிழ்த் தேசிய இனத்தை சிங்கள பௌத்த மேலாதிக்கத்தின் காலடிகளில் தங்கியிருக்கும் விதமாகவே உருவாக்கப்பட்டு வருகின்றன.

இலங்கை அரசியல் யாப்பு என்பது இலங்கையில் இருக்கக்கூடிய பல்லின, பலமொழி, பலமதங்கள் வாழ்கின்ற பூமி என்ற விடயத்தை ஏற்றுக்கொண்டு உருவாக்கப்பட்டதல்ல. 1972ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட குடியரசு யாப்பு என்பது சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிலைநிறுத்தியதுடன், முன்னர் சிறுபான்மை தேசிய இனங்களுக்குப் பாதுகாப்பாக இருந்த 29ஆவது ஷரத்தும் அகற்றப்பட்டு, பெரும்பான்மை சிங்கள அரசாங்கம் சிறுபான்மை தேசிய இனங்களை அழித்தொழிப்பதற்கான ஒரு வழிமுறையை அந்த யாப்பினூடாக மேற்கொண்டது. சிறுபான்மை தேசிய இனமான தமிழ் மக்கள் தமிழ் பிரதிநிதிகள் அந்த யாப்பு உருவாக்க நடவடிக்கையைப் பகிஷ்கரித்ததுடன், 1972ஆம் ஆண்டு குடியரசு அரசியல் யாப்பு உருப்பெற்ற நாள் தமிழ் மக்களுக்குக் கரிநாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

பின்னர், 1978ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்த்தன கொண்டுவந்த புதிய அரசியல் சாசனமானது ஜனநாயகம் என்ற பெயரில் தனது சர்வாதிகார ஆட்சியை நிலைநிறுத்துவதற்குப் பயன்பட்டதே தவிர, அது இந்நாட்டின் பல்தேசிய இனங்களின் பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடியதாக அமையவில்லை. அந்த அரசியல் சாசனத்தையும் தமிழ் மக்கள் நிராகரித்தார்கள். அந்த அரசியல் யாப்பே இதுவரை பத்தொன்பதுமுறை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 1987ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து மாகாணசபை முறையொன்றை இலங்கையில் உருவாக்குவதற்காக பதின்மூன்றாவது திருத்தம் ஒன்றைக் கொண்டுவந்ததன் ஊடாக, மாகாணசபைகளுக்கான அதிகாரப்பரவலாக்கமுறை ஒன்று ஏற்படுத்தப்பட்டது. தமிழ் மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமைக்கான ஆயுதப் போராட்டத்தின் விளைவாக இந்த ஒரு திருத்தம் மாத்திரமே அதிகாரங்களை பரவலாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டது. இது தமிழ் மக்களுக்கு மாத்திரமின்றி, ஒட்டுமொத்த நாட்டுமக்களுக்காகவும் ஏற்படுத்தப்பட்டது.

இப்பொழுதுவரை பத்தொன்பது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இலங்கை அரசியல் சாசனம் குறித்துப் பேசுகின்ற பொழுது அது மாதாந்தம் திருத்தத்திற்குள்ளாவதாக மக்கள் மத்தியில் கிண்டலும் கேலியும் நிலவுகிறது. கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பத்தொன்பதாவது திருத்தமும்கூட, இன்று ஆட்சியில் இருப்பவர்களது ஒத்துழைப்புடன் கொண்டுவரப்பட்ட பொழுதும், இப்பொழுது அதுவும் திருத்தப்படவேண்டும் என்ற கருத்து அவர்களிடமிருந்து வந்துகொண்டிருக்கின்றது. 1978ஆம் ஆண்டிற்குப் பின்னர், நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிகள் தங்களைத் தக்க வைத்துக்கொள்வதற்கும் தங்களது சர்வாதிகார நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கும், தங்களது ஊழல் நடவடிக்கைகளை மறைப்பதற்கும் பாராளுமன்றத்தைப் பாவித்து தமக்குத் தேவையான அரசியல் யாப்புத் திருத்தங்களை மேற்கொண்டு வருவதையும் எம்மால் காணமுடிகிறது.

சுதந்திரத்திற்குப் பின்னரான மேற்கொள்ளப்பட்ட இரண்டு அரசியல் யாப்புகளும் தமிழ்த் தேசிய இனத்தினால் முற்றுமுழுதாக நிராகரிக்கப்பட்டதுடன் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தீர்மானத்திற்கு இணங்கவும் இலங்கையில் இன முரண்பாடுகளைத் தீர்த்து ஒரு ஸ்திரமான நிலைமையை ஏற்படுத்துவதற்கும் புதிய அரசியல் சாசனத்தின் தேவை உணரப்பட்டது. இந்த அடிப்படையில் கடந்த அரசாங்கம் ஏறத்தாழ நான்கரை ஆண்டுகாலம் நாடாளுமன்றத்தை ஒரு அரசியல் சாசன சபையாக மாற்றி, எண்பத்தெட்டுமுறை கூடி விவாதித்து, தமிழர் தரப்பு, அனைத்து அடிப்படை உரிமைகளையும் விட்டுக்கொடுத்து (பௌத்தத்திற்கு முன்னுரிமை, வடக்கு-கிழக்கு இணைப்பு இல்லை, ஒற்றையாட்சி முறையில் மாற்றமில்லை) ஒரு புதிய அரசியல் சாசனத்தைக் கொண்டுவர முயன்றபோதும்கூட அந்த விடயங்களும் அன்றிருந்த எதிர்க்கட்சியினராலும் ஆளும் கட்சியின் ஒரு தரப்பினராலும் நிராகரிக்கப்பட்டது.

தமிழ் மக்கள் சார்பாக புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்தில் கலந்துகொண்ட திருவாளர்கள் சம்பந்தன், சுமந்திரன் போன்றோர் தமிழ் மக்களுக்குப் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து, புதிய அரசியல் சாசனம் வருகின்றதென்று ஏமாற்றிக்கொண்டே இருந்தார்கள். இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து தமிழ் மக்களின் அரசியல் வரலாறென்பது, சிங்கள அரசுகளால் ஏமாற்றப்பட்ட வரலாறாகவே இருந்து வந்திருக்கின்றது.

கடந்த நாடாளுமன்றத்திலும் கூட தாம் ஏமாற்றப்படுகிறோம் என்பதை அறிந்திருந்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் வழங்கிய ஆணையையும் மீறி அவர்களை தவறான திசையில் வழிநடத்திச் சென்றது.

இந்த நிலையில், தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான நியாயமான விடயங்களை உள்ளடக்கிய புதிய அரசியல் சாசனம் ஒன்று தேவை என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. ஆனால் அத்தகைய புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்படுவதற்கு முன்பாக அரசாங்கத்திற்கும் தமிழர் தரப்பிற்குமிடையில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் கூடிய முழுமையான பேச்சுவார்த்தைகள் இடம்பெறவேண்டும். இதனூடாக எட்டப்படும் இணக்கப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு புதிய அரசியல் சாசனம் என்பது உருவாக்கப்பட வேண்டும்.

கேள்வி: சமஸ்டி என்றாலே தனிநாடு என்று சிங்கள அரசியல் சமூகம் திரிபுபடுத்திக் கூறும் நிலையில் அதனை எப்படி வரையறுக்கிறீர்கள்? இந்தத் திரிபுபடுத்தலை சிங்கள மக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் எடுத்துச் சொல்வதற்கான திட்டங்கள் ஏதும் உள்ளதா?

பதில்: 1920களில் அப்பொழுது பௌத்த பிக்குவாக இருந்த அனகாரிக தர்மபால அவர்கள் கிறிஸ்தவ மெஷனரிகளிலிருந்து பௌத்தத்தைப் பாதுகாத்துக்கொள்வதற்காக பௌத்த சீர்திருத்தவாதியாக தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டார். அதே காலகட்டத்தில், வடக்கு மாகாணத்தில் ஆறுமுக நாவலர் அவர்களும் கிறிஸ்தவ மெஷனரிகளுக்கு எதிராக சைவத்தையும் தமிழையும் பாதுகாத்துக்கொள்வதற்காக அவரும் சீர்திருத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டார். கிறிஸ்தவ மெஷனரிகளிடமிருந்து சைவத்தையும் தமிழையும் பாதுகாப்பதற்கு ஆறுமுக நாவலர் பாடுபட்டாரே தவிர, அவர் பௌத்தத்திற்கு எதிராகவோ, சிங்களத்திற்கு எதிராகவோ எத்தகைய எதிர் நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை.

தென்பதியில் அனகாரிக தர்மபாலா அவர்களைப் பொறுத்தவரையில் கிறிஸ்தவ மெஷனரிகளுக்கு எதிராகத் தோற்றம் பெற்ற அவரது நடவடிக்கைகளானது, ஏனைய தேசிய இனங்களான தமிழ் முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும் மற்றும் அன்றைய காலகட்டத்தில் இலங்கையில் இருந்த மலையாளிகளுக்கு எதிராகவும் விரிவடைந்தது. “ளுinhயடநளந யசந வாந ளழn ழக வாந ளழடைஇ வுயஅடைளஇ ஆரளடiஅள யனெ ஆயடயலயடநநள யசந யடநைளெ in வாளை உழரவெசல.” அனகாரிக தர்மபாலவின் அந்த எண்ணக்கருதான் இன்றுவரை சிங்கள அரசியலின் செல்நெறியைத் தீர்மானிக்கும் எண்ணக்கருவாக இருக்கின்றது.

இந்த விடயங்கள் இவ்வாறு இருந்தபோதிலும்கூட, ஆங்கிலேயரை வெளியேற்றும் போராட்டத்தில், சிங்கள முற்போக்கு சக்திகள் தமிழ்த் தேசிய இனத்திற்கு ஒரு சரியான ஆட்சி அதிகாரம் வேண்டும் என்று குரல் கொடுத்தவர்களும் இருக்கின்றார்கள். இலங்கையில் ஒரு சமஷ்டி அரசியலமைப்புமுறையைப் பற்றிப் பேசியவர்களில் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக அவர்கள் முதன்மையானவர். இலங்கை ஒரு நாடாக இருந்தபோதிலும் அது வடக்கு-கிழக்கு, கண்டி மற்றும் கரையோரப்பகுதி என்னும் மூன்று சமஷ்டி அலகுகளை உள்ளடக்கியது என்று அவர் கூறினார். ஆகவே சிங்கள அரசியல்வாதிகளுக்கோ சிங்கள புத்திஜீவிகளுக்கோ சமஷ்டி என்றால் என்ன என்பது தெரியாததல்ல. சமஷ்டி குறித்து முதல் முதலாக பிரஸ்தாபித்தவர்களும் அதற்காகப் பிரச்சாரம் செய்தவர்களும் சிங்களத் தலைவர்களே.

ஆனால் இப்பொழுது இருக்கக்கூடிய சிங்கள அரசியல் சமூகமானது, சமஷ்டி என்று சொன்னால் தனிநாடு என்ற அடிப்படையில் வியாக்கியானப்படுத்துவதும் சமஷ்டி அரசியலமைப்பு முறையை எதிர்த்து நிற்பதும் சிங்கள பௌத்த மேலாதிக்க வெளிப்பாடாகும். அனகாரிக தர்மபால அவர்களின் வழித்தோன்றல்களான சிங்கள அரசியல் தலைமைகளானது, இலங்கை என்பது சிங்கள பௌத்த மக்களுக்கே உரித்தானது என்ற தவறான, பிழையான ஒரு கருத்தாக்கத்தை இன்னமும் தன்வசம் வைத்திருப்பதும் இலங்கையில் சரியான சமஷ்டி முறை ஒன்றை உருவாக்குவதற்கு எதிராக இருக்கின்றது.

சாதாரண சிங்கள மக்கள் சமஷ்டிக்கு எதிரானவர்கள் அல்லர். இன்றிருக்கக்கூடிய மாகாண அரசுகளை அவர்கள் எதிர்ப்பவர்களும் அல்லர். மாகாண அரசுகளுக்கு அதிகாரங்களைக் கூட்டி வழங்கினால் அவர்கள் எதிர்க்கப்போவதுமில்லை. ஆனால் இவை எல்லாவற்றையும் முடக்கும் காரணிகளாக இருப்பவர்கள் சிங்கள மேலாதிக்கவாத அரசியல் சமூகமே.

தமிழ் சமூகத்திற்குள் இருக்கக்கூடிய சிங்கள ஆளும் தரப்பிற்கு ஆதரவாகச் செயற்படக்கூடிய சிலரும் சிங்கள மக்கள்தான் ஒரு சமஷ்டி அரசியலமைப்புமுறையை எதிர்ப்பவர்கள் போலவும் ஆகவே அவர்களுக்கு புரியக்கூடிய வகையில் நாங்கள் சிங்கள மக்களுக்குப் புரியவைக்க வேண்டும் என்ற தொனியிலும் பேசுவதென்பது ஏற்புடைய விடயமாகத் தெரியவில்லை.

தந்தை செல்வாவின் காலத்திலிருந்து இன்றுவரை, சமஷ்டி குறித்து பேசப்படுகின்றது. சிங்கள அரசியல் சமூகம் என்பது சமஷ்டி என்ற விடயத்தை தவறாக வியாக்கியானப்படுத்தி அதற்கு எதிராகச் செயற்படாமலிருந்தாலே இந்தப் பிரச்சினைகளை இலகுவாகத் தீர்த்துவிட முடியும். அதனை விடுத்து சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று அவர்கள்மீது பழிசுமத்துவது தப்பித்தல்வாதமின்றி வேறேதும் இல்லை.

கேள்வி: தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டம் என்பது சமூக, பொருளாதார, அரசியல் விடயங்களை உள்ளடக்கியதாக இருக்கும் நிலையில் தமிழ் மக்களின் சுயசார்புப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு இனிவரும் காலங்களில் ஏதேனும் திட்டங்கள் உள்ளனவா?

பதில்: சுய சார்புப் பொருளாதாரம் என்பது இன்றியமையாதது. இலங்கை அரசாங்கத்தின் பாகுபாடான இனவாதச் செயற்பாடுகளும் நடந்து முடிந்த யுத்தமும் எமது பொருளாதார அபிவிருத்தியை நிறையவே பாதித்திருக்கின்றது. யுத்தத்திற்குப் பின்னர் தமிழ் மக்களுக்கு புதிய புதிய தேவைகள் எழுந்திருக்கின்றன. யுத்தத்தின் காரணமாக ஏறத்தாழ 80,000க்கும் மேற்பட்ட பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உருவாகியிருக்கின்றது. இவர்களது வாழ்வாதாரங்கள், இவர்களது குடும்ப விளக்குகளின் கல்வி உள்ளிட்ட ஏனைய நலன்புரி விடயங்கள் கவனத்தில் எடுக்கப்படவேண்டியுள்ளது. ஆயிரக் கணக்கான மாற்றுத்திறனாளிகள் உருவாகியிருக்கின்றனர். இவர்களுக்கான எதிர்காலம் குறித்தும் திட்டமிடவேண்டியுள்ளது. விவசாயம் நலிவடைந்துள்ளது. கடற்றொழிலிலும் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இவை அனைத்தையும் கவனத்தில் எடுத்து இவற்றைப் போக்கும் அடிப்படையில் புதிய திட்டங்கள் உருவாக்கப்படவேண்டும். இவை தொடர்பான பல கலந்துரையாடல்களை எமது கட்சி மட்டத்தில் நாங்கள் நடாத்தியிருக்கின்றோம். அரசியல் பிரச்சினையைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டும் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சுயசார்புப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டும் கொள்கைத் திட்டங்களை வரைந்திருக்கின்றோம்.

நாம் நினைப்பது அனைத்தையும் செயற்படுத்தக்கூடிய வகையில் மாகாணசபைக்கு அதிகாரங்கள் போதாது. புலம்பெயர் உறவுகளின் முதலீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கு மாகாணசபைக்கு அதிகாரங்கள் தேவை. நட்புநாடுகளிலிருந்து உதவிகளைப் பெறுவதற்கும் அதேநிலைதான் உள்ளது. விவசாயத்தை அபிவிருத்தி செய்வதற்கும் அதனை ஒரு உற்பத்திசார் தொழிற்சாலையாக மாற்றியமைப்பதற்கும் எம்மிடம் எண்ணங்கள், திட்டங்கள், கருத்திட்டங்கள் பல இருந்தாலும் அதனை முன்னெடுத்துச் செல்வதற்கான காணிகள், முதலீடுகள் போன்றவற்றை பெற்றுக்கொள்வதற்கான அதிகாரங்கள் மாகாணசபைக்கு இல்லை.

அதனைப் போன்றே எமது கடற்றொழிலை எடுத்துக்கொண்டாலும் வட-கிழக்கில் இருக்கின்ற தமிழ் மீனவர்களிடம் மூன்றே மூன்று ஆழ்கடல் மீன்பிடி படகுகள் மட்டுமே உள்ளன. ஆகவே எமது மீன்பிடி உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டுமானால் இப்பிரிவில் அதிக அளவில் முதலீடுகள் தேவைப்படுவதுடன் ஆழ்கடல் மீன்பிடிக்கான உரிமத்தை மத்திய அரசிடமிருந்துதான் பெற்றுக்கொள்ள வேண்டிய சூழல் நிலவுகிறது. ஆகவே எமக்கு சுயசார்புப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான வளங்கள் நிறையவே இருக்கின்றன. அத்தகைய துறைகளில் முதலீடு செய்ய நட்பு நாடுகளும் புலம்பெயர் உறவுகளும் இருக்கின்றனர். இவற்றை மாகாண அரசுகள் மேற்கொள்வதற்கான அதிகாரங்களைப் பெற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது.

கேள்வி: நாடாளுமன்றத் தேர்தல் குறித்து தாங்கள் கூறவிழைவது?

பதில்: தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என்பது தமிழ் மக்களுக்கான ஒரு மாற்றத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றது. அரசியலிலும் பொருளாதாரத்திலும் அந்த மாற்றங்கள் நிகழ்ந்தாக வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். இந்த மாற்றங்களைச் செய்வதற்கு மத்திய அரசின் ஒத்துழைப்புகளும் தேவை. அந்த அடிப்படையில் நாங்கள் தேர்தலை எதிர்கொள்வதற்குத் தயாராக இருக்கின்றோம். ஆனால் நடைபெறக்கூடிய தேர்தல் ஜனநாயகபூர்வ தேர்தலாக இருக்க வேண்டும். மக்கள் பிரச்சாரம் செய்வதற்கும் அவர்கள் பெருமளவில் தேர்தலில் பங்குபற்றி வாக்களிப்பதற்கான புறச்சூழல் உருவாக்கப்படவேண்டும். இப்பொழுது இருக்கக்கூடிய கொரோனா வைரஸ் காலம் என்பது கூட்டம் கூட முடியாது, மக்களுடன் பேசமுடியாது, பிரசச்hரங்கள் செய்ய முடியாது என்ற நிலைமையே தொடர்ந்தும் நீடிக்கின்றது. எனவே இயல்புநிலை ஏற்பட்டபின்னர் தேர்தலை நடாத்துவதே சிறப்பானதாக இருக்கும்.

கடந்த மூன்று நாட்களாக உயர்நீதிமன்றத்தில் இதுதொடர்பான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றது. தேர்தல் ஆணையகமும் தாம் ஏற்கனவே அறிவித்ததைப் போன்று ஜூன் 20ஆம் திகதி தேர்தலை நடாத்த முடியாது என்றும் சுகாதார அமைச்சின் முடிவுகளுக்கு இணங்கவே தேர்தலுக்கான திகதி குறிக்கப்படலாம் என்று கூறியுள்ளது.

கடந்தகால அனுபவங்கள், படிப்பினைகள் ஆகியவற்றின் அடிப்படையில் தமிழ் அரசியல் தளத்தில் ஒரு மாற்றம் வேண்டும் என்பதில் எமது மக்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். அவர்களது எண்ணங்கள் மற்றும் சிந்தனைகள் அனைத்தையும் பிரதிபலிக்கும் வகையில் அவர்கள் எமது தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கு தமது ஆதரவினை வழங்குவார்கள் என்பதில் நாம் அசையாத நம்பிக்கை கொண்டுள்ளோம். இதற்காக ஒரு ஜனநாயகபூர்வமான தேர்தலை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்.

என்.லெப்டின்ராஜ்