காவலரண் தாண்டிய முள்வேலிகள்.

126 0

காவலரண் தாண்டிய முள்வேலிகள்.


தம்மை எதிர்த்தங்கே புலியாளென நின்று
போராடிச் சாவடைந்த தமிழச்சி வித்துடலில்…
எம்மனங் கொண்டங்கே காமங் களித்தனரே?
இம்மையில் யாமறியோம் இப்படி யோர்செயலை!

அன்னை முகம்பாந்த்து ஆறுதல் சொன்னவரும்
பிள்ளை தனைப்பார்த்து பிரிந்துமே சென்றவரும்….
மனையாள் மனமேங்க மௌனமாய்ப் போனோரும்
ஆனது எந்நிலையோ யாரறிவார் பாதகரே!

தப்பி வந்தோர் தயவானோர் என்றெண்ணாது….
துப்பி இகழ்ந்து தூய்மை கெட்டோர் போலெமை
கூட்டுப் பிணங்களாய் ஏற்றிப் போயினர் எங்கோ?
குடியிருந்த மனைகளும் மட்டறியா மனிதராய் நாம்!

வதைப் பாதையொன்றும் சிறைப் பாதையொன்றும்
முள்வேலி முகாமென்றும் முன்னறியா மந்தைகளாய்….
மூவழிப் பாதையாய் முன்னாலே பிரிபட்டு
ஏங்கியேங்கி உறவுகள் எங்கெங்கோ போயினர்.

 
  • வன்னியூர் குரூஸ் –