வல்லரசுகளுடனேயே நாம் பேரம் பேச வேண்டியிருக்கிறது- கஜேந்திரகுமார்

328 0

“சிறிலங்கா அரசாங்கத்துடனோ, எதிர்க்கட்சியினரிடமோ, சிங்களத் தரப்புக்களுடனோ நாங்கள் பேரம் பேச வேண்டியதில்லை. வல்லரசுகளுடனேயே பேரம் பேச வேண்டியிருக்கிறது. ஆகவே, இதற்கான அறிவுள்ள, ஆளுமையுள்ளதொரு தலைமைத்துவத்தையே தமிழ்மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். இதன் ஊடாக நிச்சயம் நாங்கள் முன்னோக்கிச் செல்லலாம் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை” எனக் கூறியிருக்கின்றார் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

தினக்குரலுக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனைக் கூறியிருக்கின்றார். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடனான நேர்காணல்….

கேள்வி:- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் காலத்தில் உங்களுக்கு நடந்த விடயங்கள் தொடர்பில்…

பதில்:- உண்மையிலேயே அரசாங்கம் இந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை முடக்குவதற்காகத் திட்டமிட்டு மேற்கொண்ட நடவடிக்கையாகத் தான் நாம் அனைத்துத் தடைகளையும் பார்க்கின்றோம். இது வெறுமனே எங்களுடைய அமைப்பிற்கு மட்டுமல்ல வேறு அமைப்புக்களுக்கும் இந்த நெருக்கடிகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆனால், முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் தமிழினப் படுகொலை வாரமாக அனுஷ்டிக்க வேண்டுமென்ற கூடுதலான ஏற்பாடுகளை நாங்கள் தான் மேற்கொண்ட தரப்பு என்ற வகையில் எங்களை நோக்கித் தான் அதிகமான குறி வைக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை வாரமென்பது வெறுமனவே நாங்கள் நினைவு கூரும் நிகழ்வாக மாத்திரம் பார்க்க முடியாது. இந்த இனப்படுகொலை வாரத்தை அனுஷ்டிக்கும் அதேநேரம் இனப் படுகொலை செய்த தரப்புக்கள் தொடர்பாக இன்னொரு செய்தியையும் நாங்கள் கொடுக்கின்றோம். அத்துடன் யார் உண்மையான குற்றவாளிகள் என்பதையும் நாம் இனம் காட்டுகின்றோம்.

தற்போது அரசாங்கத்தில் அங்கம் வகிப்போர் இனப்படுகொலை செய்த தரப்புக்களில் மிக முக்கியமானவர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாகத் தற்போதைய ஜனாதிபதி போர் நடாத்தியதில் மிக முக்கிய மூளையாகச் செயற்பட்டுள்ள நிலையில் தான் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் பல்வேறு தடைகளும், எதிர்ப்பு நடவடிக்கைகளும் எங்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

ஆனாலும், எம்மைப் பொறுத்தவரை நாங்கள் உரிமைகளுக்காகப் போராடுகின்றதொரு தரப்பென்ற வகையில் இவ்வாறான தடைகள், எதிர்ப்புக்களைத் தாண்டியும் எங்களின் செயற்பாடுகள் அமைய வேண்டுமென்பதில் நாங்கள் மிகவும் தெளிவாகவிருக்கின்றோம்.

சட்டவிரோதமாக எங்கள் மீது குற்றம்சாட்டப்பட்டு எங்களைத் தனிமைப்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டாலும் கூட எங்களால் இயன்றளவுக்கு நீதிமன்றத்தை நாடி எமக்கெதிரான திட்டமிட்ட செயற்பாடுகளை முறியடி த்தோம்.

நாங்கள் ஒரு இலக்கை நிர்ணயித்து வைத்துள்ளோம். எனவே, அந்த இலக்கை அடைவதற்கு எத்தகைய தடைகள் வந்தாலும் நாங்கள் தொடர்ச்சியாகப் போராடுவோம். இதுவே, இந்த வருட மே-18 நினைவேந்தல் நிகழ்வு மூலமாக எங்கள் மக்களுக்கு நாம் சொல்ல வரும் மிக முக்கியமான செய்தி.

கேள்வி:- உங்கள் மீது அச்சுறுத்தல் விடுத்த பொலிஸ், இராணுவம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக கூறியிருந்தீர்கள்.அந்த செயற்பாடு தற்போது எந்தக் கட்டத்தில் உள்ளது?

பதில்:- இதுதொடர்பாக நாங்கள் எங்கள் சட்ட ஆலோசகர்களுடன் தற்போது ஆலோசித்து வருகிறோம். சிறிலங்கா சட்டத்தையே மீறி எங்களுக்கெதிராக எடுக்கப்பட்ட தனிமைப்படுத்தும் நடவடிக்கை இரண்டு வாரத்திற்கு எங்கள் சுதந்திரத்தையே கட்டுப்படுத்தும் நடவடிக்கை. ஆகவே, இதுவொரு சாதாரண நடவடிக்கையல்ல.

பொதுத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளதொரு சூழலிலேயே இவ்வாறானதொரு செயற்பாடு அரங்கேறியுள்ளது. கொரோனாத் தொற்றால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் எங்களுடைய கட்சி முன்னின்று செயற்பட்டு வருகிறது. அதுமாத்திரமன்றி சமகாலத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டும் என்பதிலும் எங்கள் கட்சி முனைப்புடன் செயற்பட்டு வருகிறது. இத்தகையதொரு சூழ்நிலையில் தான் எங்களை முடக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

எனவே, எமக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இத்தகைய மோசமான செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுப்பதற்கு முன்னர் இதனால் ஏற்படப் போகும் விளைவுகள் தொடர்பிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். இதுதொடர்பில் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படாதவிடத்து எமக்கெதிரான இத்தகைய நடவடிக்கைகள் தொடரவே செய்யும். ஆகவே, இனியும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர நாம் இடமளிக்க கூடாது.

எனவே, சட்ட நுணுக்கங்களைத் தெளிவாக ஆராய்ந்த பின்னர் தான் சட்டவிரோதமாக எங்களுக்கெதிராக நீதிமன்றத்தை நாடி நடவடிக்கைகள் எடுத்த தரப்புக்களுக்கெதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளவிருக்கின்றோம்.

கேள்வி:- உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்கே தடைகளைப் போடும் அரசாங்கத்திடமிருந்து நீங்கள் எதிர்பார்க்கும் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கிறீர்களா?

பதில்:- நடந்த இனப்படுகொலைக்கு அஞ்சலி செலுத்துவதற்கு அரசாங்கம் தடைகளைப் போடுவதால் அவர்கள் தீர்வைக் கொடுக்கப் போவதில்லை எனக் கூறுவது என்னைப் பொறுத்தவரையில் தவறானதொரு கணிப்பு.

முன்னர் இந்த நாட்டை ஆட்சி செய்த அரசாங்கம் அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதி வழங்கியிருந்தது. எனினும், அவர்களும் தீர்வு வழங்குவதற்குத் தயாராகவிருக்கவில்லை. மாறாக அவர்கள் தமிழ்த் தரப்புக்களைப் பயன்படுத்தித் தமிழ்மக்களுக்கு சாபக்கேடாக காணப்படும் ஒற்றையாட்சியை ஏமாற்றி ஏற்றுக் கொள்ள வைக்கும் மிக ஆபத்தானதொரு செயற்பாட்டைச் செய்தார்கள்.

ஆகவே, நினைவு கூருவதற்கு அனுமதி வழங்கியமையால் தமிழ்மக்களுக்கு நன்மை செய்வார்களெனவும், நினைவு கூருவதற்குத் தடை விதிக்கின்றமையால் எதுவுமே செய்ய மாட்டார்கள் என்ற முடிவுக்கும் நாங்கள் வரக் கூடாது.

நாங்கள் இந்த விடயங்கள் தொடர்பில் ஆழமாக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அந்த வகையில் சிங்களத் தேசியவாதத் தரப்புக்கள் எவருமே தமிழ்மக்களுக்கு விரும்பி எதனையும் வழங்கப் போவதில்லை என்பது உறுதி.

அவ்வாறாயின் நாங்கள் எவ்வாறு எங்கள் உரிமைப் போராட்டத்துக்கான தீர்வைப் பெற்றுக் கொள்ளப் போகின்றோம்? என்ற கேள்வியை எமக்குள் நாமே எழுப்பி அதற்குரிய விடையையும் தேட வேண்டும்.

இவ்வாறான விடையை நாம் மிகத் தெளிவாகத் தேடிப் பெற்றுக் கொண்டமையால் தான் நாங்கள் வெறுமனவே இலங்கைத் தீவுக்குள் மாத்திரம் நிலவும் அரசியல் நிலைமைகளை மாத்திரம் வைத்துக் கொண்டு எங்களுடைய காய் நகர்த்தல்களைச் செய்வோமானால் இதைப் போன்றதொரு முட்டாள்தனம் வேறு கிடையாது. எனவே, இலங்கைத் தீவைச் சுற்றியுள்ள சர்வதேச அரசியலையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். இலங்கைத் தீவு தொடர்பான வல்லரசு நாடுகளுடைய போட்டிகளையும் அவதானிக்க வேண்டும். இதன் ஊடாகத் தமிழ்த்தேசிய அரசியலுக்குக் கிடைக்கக் கூடிய வாய்ப்புக்கள், இழப்புக்கள் தொடர்பாக கவனம் செலுத்தித் தான் நாங்கள் எங்கள் காய்நகர்த்தல்களை மேற்கொள்ள வேண்டும்.

எனவே, இதற்கு முதலில் எங்கள் மத்தியில் மிகத் தெளிவான, உறுதியானதொரு கொள்கை காணப்பட வேண்டும். எங்களுக்கென உறுதியானதொரு கொள்கை இல்லாமல் நாங்கள் வேறொரு தரப்பை அணுகிப் பேரம் பேசுவதற்கு வாய்ப்புக்களில்லை.

சிறிலங்கா அரசாங்கத்துடனோ, எதிர்க்கட்சியினரிடமோ, சிங்களத் தரப்புக்களுடனோ நாங்கள் பேரம் பேச வேண்டியதில்லை. வல்லரசுகளுடனேயே பேரம் பேச வேண்டியிருக்கிறது. ஆக்வே, இதற்கான அறிவுள்ள, ஆளுமையுள்ளதொரு தலைமைத்துவத்தையே தமிழ்மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். இதன் ஊடாக நிச்சயம் நாங்கள் முன்னோக்கிச் செல்லலாம் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை.

கேள்வி:- தமிழ்மக்களுடைய தீர்வு விடயத்தில் நீங்கள் தற்சமயம் கொண்டுள்ள நிலைப்பாடு என்ன?

பதில்:- தமிழ்மக்களுடைய தீர்வு விடயத்தில் தற்சமயம் என்ற நிலைப்பாடு எங்களிடமில்லை. நாங்கள் இந்த விடயத்தில் நிரந்தரமாக ஒரே நிலைப்பாடு உடையவர்களாகவே உள்ளோம். அந்த வகையில் எங்கள் தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்டே ஆக வேண்டும். அது தான் தமிழ்மக்களுக்கான நியாயபூர்வமான தீர்வு.

தமிழ்த் தேசத்தை அழிக்கும் செயற்பாடு தான் இனப்பிரச்சினை. எனவே, இதற்கான தீர்வு தமிழ்த் தேசத்தினுடைய அங்கீகாரமே. இந்த விடயத்தில் எங்களிடம் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்களுமில்லை.

நாட்டைப் பிரிப்பதற்கு சட்டத்தில் இடமில்லை. ஆகவே, அந்தத் தமிழ்த் தேசம் ஓர் தனிநாடாக இல்லாமல் சிங்கள தேசத்துடன் இணைந்து ஒரே நாட்டுக்குள் அமையும் அரசியல் கட்டமைப்பையே நாங்களும் கோருகிறோம்.

அந்த அடிப்படையில் தான் தமிழ்மக்கள் பேரவையில் எங்களுடைய திட்டங்களை முன்வைத்து, தீர்வுத் திட்டமொன்றைத் தயாரித்து
இந்தத் தீர்வுத் திட்டத்தையே தமிழ்மக்களுக்கான நிரந்தரத் தீர்வுக்கான தீர்வுத் திட்டமாக அடையாளப்படுத்தி எங்கள் மக்கள் மத்தியிலொரு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றோம்.

கேள்வி:- இலங்கை படையினர் மீது அழுத்தங்களை கொடுக்கும் அமைப்பிலிருந்து வெளியேறுவோம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறியிருக்கிறார்.இது தொடர்பில் உங்களுடைய நிலைப்பாடு என்ன?

பதில்:- இது ஆச்சரியப்படக் கூடியதொரு விடயமல்ல. கோட்டாபய ராஜபக்சவாகவிருக்கலாம் அல்லது அவரது சகோதரர் மஹிந்த ராஜபக்சவாகவிருக்கலாம். அவர்களின் சிங்களத் தேசியவாதமென்பது உச்சத்திலுள்ள, முரட்டுத்தனமான தேசியவாத அணுகுமுறையாகும். அவர்களைப் பொறுத்தவரை சிங்களத் தேசிய நலன்களை அடைவது என்பது வெறுமனவே அடைவு மட்டுமல்லாமல் அவர்களின் நேரடிப் பார்வைக்கு உட்பட்டதாகவும் அமைய வேண்டும்.

சிங்களத் தேசியத்திற்கு எதிராக நெருக்கடி எழுகின்ற போது மற்றைய தரப்பை முற்றாக நிராகரித்து அவர்களை அழிக்கின்றவளவுக்குச் செல்ல வேண்டுமென்பது தான் அவர்களுடைய தேசியவாதம்.

ஐக்கியதேசியக் கட்சியினுடைய தேசியவாதமும் நாசூக்காக இத்தகைய விடயங்களைக் கையாண்டது. ஐ. நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுத் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்ட நிலையில் தீர்மானத்திற்குத் தாமே இணை அனுசரணை வழங்குகின்றோம் என இணக்கம் தெரிவித்து விட்டுப் பின்னர் ஐந்து வருட காலமாக அதனை முற்றுமுழுதாக நிராகரிக்கும் வகையில் தான் செயற்பட்டார்கள்.

ஆகவே, இலங்கை படையினர் மீது அழுத்தங்களை கொடுக்கும் அமைப்பிலிருந்து வெளியேறுவோம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறியிருப்பது ஒரு விமர்சனம் முன்வைப்பதையே ஏற்றுக் கொள்ள மறுப்பதாக அமைந்துள்ளது. எனினும், ஐக்கியதேசியக் கட்சி விமர்சனத்தை ஏற்றுக் கொண்டு பின்னர் தான் விரும்பியவாறு செயற்பட்டது.

எனவே, முன்னைய ஆட்சிக் காலத்திலும் சரி தற்போதும் சரி நடைமுறை ரீதியாகத் தமிழ்மக்களுக்கு கிடைக்கும் முன்னேற்றம் என்பது பூச்சியமாகவே காணப்படுகின்றது.

கேள்வி:- எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் உங்களுடைய கட்சியும் போட்டியிடவுள்ளது.இந் நிலையில் தமிழ்மக்களுடைய உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியாத, தமிழ் மக்களைத் தொடர்ந்தும் புறக்கணித்து வரும் தலைவர்களைக் கொண்டுள்ள பாராளுமன்றத்துக்குச் சென்று நீங்கள் எதனைச் சாதிக்கமுடியும் எனக் கருதுகிறீர்கள்?

பதில்:- பாராளுமன்றம் ஊடாகச் சாதிக்க முடியுமென நாங்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் கருதவில்லை. நாங்கள் ஒருபோதும் இலங்கைத் தீவுக்குள் எங்கள் அரசியலை முடக்கி எதனையும் சாதிக்க முடியாது. 75 வீதமான மக்கள் சிங்கள- பெளத்த மக்களாகவிருக்கும் நிலையில் 12.5 வீதத்திற்கும் குறைவான சனத்தொகையைக் கொண்ட தமிழ்மக்களைப் பார்த்து எந்தவொரு சிங்களத் தலைமைகளும் பயப்பட வேண்டிய தேவையில்லை.

ஆனாலும், தற்போது நிலவும் பூகோள அரசியலில் தமிழ்மக்களுடைய அரசியலென்பது மிக முக்கியமானதொரு கருவி. சிங்கள தேசத்திற்கு அழுத்தம் பிரயோகிப்பதற்கு ஒரு வல்லரசு எங்களுக்குப் பின்னாலிருக்கும் நிலைமை வந்தால் அது கடும் சவாலை சிங்கள தேசத்திற்கு ஏற்படுத்தும்.

தமிழர்கள் ஓர் தேசமாக இலங்கைத் தீவில் இருப்பது தான் சிங்கள- பெளத்த தேசியவாதத்திற்கு இருக்கக் கூடிய மிகப் பெரிய அச்சுறுத்தல். இலங்கைத் தீவு வெறுமனே சிங்கள- பெளத்தர்களுக்கு மாத்திரம் இருக்க வேண்டுமென்ற சித்தாந்தத்தில் வளர்ந்து எவரும் இந்தத் தீவுக்கு உரிமை கோரக் கூடாது என்கின்ற மகாவம்ச மனநிலையிருக்கின்ற காரணத்தால் சிங்கள- பெளத்த தேசிய வாதிகள் தமிழ்த் தேசிய அரசியலை மிக மிக ஆபத்தானதொரு விடயமாகவே அவர்கள் பார்ப்பார்கள். எனவே, தமிழ்த்தேசிய அரசியலுக்குப் பின்னால் ஓர் வல்லரசு வருகின்ற போது அது சிங்கள தேசத்திற்கு கடும் சவாலானதொன்றாக அமையும்.

எனவே, தமிழ்த்தேசிய அரசியல் மட்டும் தான் சிங்கள- பெளத்த தேசியவாதத்திற்குக் கடும் அழுத்தத்தை வழங்குமொரு கருவியாக அமைந்துள்ளது. இதனால் தான் தமிழ்த்தேசிய அரசியலைக் கையாள்வதற்கு மேற்கு, இந்தியா நாடுகள் மிகவும் கஷ்ரப்பட்டுத் தங்களுடைய முகவர்களைத் தமிழ் அரசியலுக்குள் இறக்கினார்கள். இதே காரணத்துக்காகத் தான் தமிழ்த்தேசிய அரசியலில் தமிழ் இனத்துக்காகவும், தமிழ்மக்களுடைய உரிமைகளுக்காகவும் நேர்மையாகப் போராடிக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளையும் தமிழ்த்தேசிய அரசியலிலிருந்து அகற்றியது. பின்னர் மீதியாகவுள்ள தமிழ்த் தரப்புக்களைத் தாம் கையாளக் கூடிய வகையிலும், தாம் சொல்லும் சொற்களைக் கேட்கக் கூடிய வகையிலும் இருக்கக் கூடிய தரப்புக்களைத் தலைமைப் பீடத்திற்குக் கொண்டது வர வேண்டுமென்ற முடிவெடுத்துத் தான் மேற்கும், இந்தியாவும் இணைந்து தமிழ்மக்களுடைய உரிமைப் போராட்டத்தை மெளனிப்பதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள்.

ஆகவே, வல்லரசுகள் போட்டி விடயத்தில் தற்போதைய நிலையிலும் தமிழ்த்தேசிய அரசியல் என்பது மிக முக்கியமானதொரு இடத்திலுள்ளது. இதனை விளங்கிக் கொண்டு அந்தத் தரப்புக்களுடன் மாத்திரம் தான் பேச வேண்டும். மாறாக, இலங்கைப் பாராளுமன்றத்திற்குள் மாத்திரம் பேசி நாங்கள் எமக்கான தீர்வுகளைப் பெற முடியாது. எனினும், நாங்கள் பாராளுமன்றத் தேர்தலில் ஏன் நாங்கள் போட்டியிடுகின்றோம் எனில் தமிழ்மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய பிரதிதிகளாக எங்களை அடையாளப்படுத்த வேண்டியுள்ளமையாலேயே ஆகும்.

கேள்வி:- எதிர்வரும் தேர்தலில் வடக்கு,கிழக்கில் பல கட்சிகள் களமிறங்கவுள்ள நிலையில் உங்களுடைய கட்சியினுடைய வெற்றி வாய்ப்புக்கள் எவ்வாறு அமையுமென எதிர்பார்க்கிறீர்கள்?

பதில்:- தற்போதைய சூழலில் வட- கிழக்கில் ஒரு மாற்றம் நிகழ வேண்டுமென்ற திட்டவட்டமான முடிவுக்குத் தமிழ்மக்கள் வந்துள்ளனர். அந்த மாற்றம் என்பது ஒரு உண்மையான மாற்றமாகவிருக்க வேண்டுமென்பதிலும் அவர்கள் மிகத் தெளிவாகவிருக்கின்றார்கள்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உண்மையில் தமிழ்த்தேசிய அபிலாசைகளுடன் இல்லையென்ற முடிவுக்கு வந்தமையால் கண்களை மூடிக் கொண்டு இன்னொரு தரப்பிற்கு வாக்களிப்பதனால் எதனையும் சாதிக்க முடியாது என்பது கடந்த காலச் செயற்பாடுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வடக்கு- கிழக்கில் எட்டு மாவட்டங்களிலும் கூட்டமைப்பு பிழையானதொரு தரப்பு எனத் தமிழ்மக்கள் விளங்கிக் கொண்டாலும் சரியான தரப்பை அடையாளப்படுத்தி வாக்க்களிக்கவில்லை. இதனால் தான் உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்குப் பின்னரான கடந்த இரண்டரை வருடங்களில் இவ்வளவுக்கு ஊழல்களையும், பிரச்சினைகளையும் காண முடிகிறது.

யாழ். மாவட்டத்தில் மாத்திரம் தான் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கணிசமான மாற்றுத் தரப்பாக காணப்படும் நிலையில் யாழில் ஊழல்களும் , மோசடிகளும் ஒரு எல்லையை மீறி இடம்பெறாதவளவுக்கு நாங்கள் கட்டுப்படுத்தி வைத்துள்ளோம். இந்த இரண்டரை வருடங்களிலும் உண்மையில் தமிழ்மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் தரப்பு யார்? என்பதைத் தமிழ்மக்கள் அடையாளப்படுத்தியுள்ளனர் என்பது தான் எங்களுடைய கணிப்பு.

கடந்த-2010 ஆம் ஆண்டு முதல் நாங்கள் தமிழ்மக்களுடன் இணைந்து செயற்பட்டு வருகிறோம். 2010 ஆம் ஆண்டு நாங்கள் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவுடன் மக்கள் மட்டத்தில் செல்கையில் எம்மைப் பற்றி எங்கள் மக்கள் மத்தியிலிருந்த பார்வையும், தற்போது மக்கள் எம்மைப் பற்றிக் கொண்டுள்ள பார்வையும் தலைக்கும், காலுக்கும் இடையில் வித்தியாசம் போன்று தானிருக்கிறது. அந்தளவுக்குத் தற்போது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதொரு தரப்பாகவும், நம்பக் கூடியதொரு தரப்பாகவும், கொள்கையில் உறுதியாகவுள்ள ஒரேயொரு தரப்பாகவும் பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த பத்து வருடங்களாகத் தமிழ்மக்கள் கண்களை மூடிக் கொண்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கியுள்ள ஆணைக்குச் சமமாகத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவு வழங்கினால் எதிர்வரும் ஐந்து வருடத்திற்குள் கணிசமானதொரு முன்னேற்றத்தை எங்கள் மக்களுக்கு நிரூபித்தே ஆவோம்.

கேள்வி:- தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து தமிழர்களுடைய பிரச்சினைகள் தொடர்பாகப் பேசியுள்ளார்கள். இதனை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில்:- மகிந்த ராஜபக்சவுக்கும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தமிழ்மக்களின் உரிமை சார்ந்ததோ அல்லது தமிழ்மக்களுடைய நலன்கள் சார்ந்த பேட்ச்சுவார்த்தைகளோ அல்ல.

மகிந்த ராஜபக்ச தற்போது நாட்டின் பிரதமராகப் பதவி வகித்து வரும் நிலையில் தேர்தல் சூழல் நிலைமையில் வட- கிழக்கில் தமிழ்மக்கள் மத்தியில் காணப்படும் காலநிலைமையைப் புலனாய்வுப் பிரிவு பிரதமருக்கு நிச்சயம் தெரியப்படுத்தியிருக்கும். எனவே, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் தற்போது பலவீனமான தரப்பாக காணப்படும் விடயமும் அவர்களுக்குத் தெரிந்திருக்கும். இவ்வாறான பலவீனமானதொரு சூழலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ்மக்களுக்காக அரசாங்கத்துடன் சென்று பேரம் பேசியுள்ளார்கள் எனக் கூறுவது முட்டாள்தனமானதொரு பார்வை.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ்மக்களுக்காக அரசாங்கத்துடன் பேரம் பேசவில்லை. மாறாகத் தங்களுடைய அரசியல் இருப்பு, சுயநல அரசியல் என்பவற்றை உறுதிப்படுத்துவதற்காக மீண்டும் அரசாங்கத்தின் ஒத்துழைப்பைப் பெற்றாவது வெல்ல வேண்டுமென்பதற்கான பேரம் பேசலாகவே நாங்கள் மேற்படி சந்திப்பைக் கருதுகிறோம். காலப் போக்கில் இந்த விடயம் இன்னும் இன்னும் தெளிவாகும்.

  • என்.லெப்டின்ராஜ்