கரைந்தோம் நெருப்பாற்றுக் கரையிலே!- 20 ஆம் நாள்.

107 0

கரைந்தோம் நெருப்பாற்றுக் கரையிலே!
****** *****
கொட்டிய குண்டுகளின் கோரத்தால் உறவுகளின்
உடலோடு உடைகளும் கிளிந்தே இருந்தாலும்…
இரத்தத்தின் வாடையோடு நடைப் பிணம்போலே
வட்டுவாகல் வந்தங்கே நின்றோரின் பாடிது!

வரண்டு நாவுக்கோ வந்தவுடன் நீர்கொடுத்து…
பசித்த குடலுக்கோ பிஸ்கட்டும் பரிமாறி…
“எல்லாம் முடிந்தது பயப்பட வேணா” என்று கொச்சையாய்…
நல்லவர்போல் நடித்தெம்மை ஏமாறச் செய்தார்கள்!

மறைத்து வைத்ததோ மானம் மட்டுமென்ற
உண்மையதை உணர்ந்திருந்த கள்ளக் காமப்படை….
கைகொண்டு தடவியும் காயத்தைத் தட்டியும்
உள்ளேதோ இருப்பதாய் உரிந்து பார்த்தார்கள்!

மறைப்பில்லா வெளியிலே அடைபட்ட நிலையிலே…
அண்ணன் முன் அக்காவும் அப்பா முன் மகளும்
அவமானச் சகதியியுள் இறுகக் கண்மூடி…
புண்பட்ட நெஞ்சோடு பொறுத்தங்கே நின்றார்கள்.

– வன்னியூர் குரூஸ்-