பௌத்த மதத்தை முதலில் சில தேரர்களிடமிருந்து காப்பாற்றுங்கள்-மனோ கணேசன்

304 0

download-2பௌத்த மதத்தை சில தேரர்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் மனோ கணேசன்…..
‘பௌத்தத்தை காப்பாற்றுவது அரசின் கடமை என அரசியல் யாப்பில் கூறப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து மாற்றாமல் முன்கொண்டு செல்ல வேண்டுமெனவும் இப்போது குரலெழுப்படுகிறது.
இந்நிலையில், இங்கே சில கேள்விகள் இன்று எழுகின்றன. பௌத்தத்திற்கு எவரிடமிருந்து ஆபத்து வருகிறது? பௌத்தை எவரிடமிருந்து காப்பாற்ற வேண்டும்?
உண்மையில் பௌத்தத்திற்கு ஒரு சில பௌத்த துறவிகளிடமிருந்து தான் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்பது கண்கூடாக தெரிகின்றது.

ஆகவே, இத்தகைய துறவிகளிடமிருந்து பௌத்த மதத்தை காப்பாற்றுங்கள் என்று சிங்கள பௌத்த அரசியல் தலைவர்களை நான் கோரியுள்ளேன்.

இதேவேளை உண்மையான சிங்கள பௌத்தர்கள் தான் பௌத்த மதத்தை சீரழிக்கும் இத்தகைய தேரர்களுக்கும், நபர்களுக்கும் எதிராக சட்ட மற்றும் மத நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இந்நாட்டின் தென் பகுதியில் செயற்பட்டு வரும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் இனவாதத்தை எதிர்க்க முன்வர வேண்டும். ஊழல் ஒன்று தான் ஒரே பிரச்சினை போன்று செயற்படுவதை நிறுத்தி விட்டு ஊழலையும், இன,மத வாதங்களையும் எதிர்க்க தென்னிலங்கை சிவில் சமூகம் முன்வர வேண்டும்.

மட்டக்களப்பில் ஒரு விகாராதிபதி எழுப்பிய காட்டுக்கூச்சலை கண்டும், இரத்மலானையில் ஒரு விகாராதிபதி, அங்கு வாழும் ஒரு தமிழ் குடும்பத்துக்கு எதிராக இனவாதம் பேசி வன்முறையை தூண்டி விட்டதையும், அறிந்து நான் அதிர்ந்து போயுள்ளேன்.

மேலும் ஒருசிலர் தங்கள் மத விவகாரத்தில் தீவிரவாதியாக இருந்துகொண்டு, அடுத்தவர் மதத்தின் தீவிரவாதத்தை கடுமையாக விமர்சிப்பார்கள்.

இது பிழை என்பதையும், இந்நாடு பன்மை தன்மை கொண்ட பல இனங்கள், பல மதங்கள் கொண்ட ஒரு நாடு என்பதையும் தமிழர்களும், முஸ்லிம்களும் புரிந்து நடந்துக்கொள்ளவும் வேண்டும்’ எனவும் தெரிவித்துள்ளார்.