புதிய பட்டுப்பாதை இலக்கிற்காக கொரோனாவை கையாளும் சீனாவின் இராஜதந்திரம்

70 0

முழு உலகுமே செயலிழந்து ஸ்தம்பிதமடைந்துள்ள ;கொரேனா வைரஸ் குறித்து ஆரம்பத்திலிருந்தே சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஒருவருக்கொருவராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்தனர். அதவாது அமெரிக்க இராணுவமே கொரோனா வைரஸை சீனாவில் பரப்பியதாக சீன அரச தலைவர்கள் கடுமையாகவும் வெளிப்படையாகவும் குற்றம் சுமத்தினர். மறுப்புறம் அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் கொரோனா வைரஸை சீன வைரஸ் என அழைத்தது மாத்திரமின்றி திட்டமிட்டு முழு உலகிற்கும் சீனா வைரஸை பரப்பியதாக குற்றம் சுமத்தினார். இந்த இரு தரப்பு சொற் சமரின் ஊடாக இதுவரைக்காலமும் பணிப்போராக இருந்த அமெரிக்க – சீனா மோதல்கள் அந்த நிலையிலிருந்து மாறி ; தற்போது வெளிப்படையாக இடம்பெறுவதாகவே உள்ளது. அதே போன்று இவ்வாறு இரு நாடுகளுமே மோதிக்கொள்ளும் போதே கொரோனா வைரஸ் ஒரு உயிரியல் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டுள்ளதா ? என்ற சந்தேகம் அனைத்துலகத்திற்கும் ஏற்படுகின்றது.

சீனாவின் புதிய பட்டுச்சாலை திட்டம் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் பூகோள அரசியலில் காணப்படுகின்றன.ஒரு சாலை ஒரு மண்டலம் கோட்பாட்டானது சீனாவின் அனைத்துலக பொருளாதார இராஜதந்திரத்திற்கான முக்கிய திட்டமாகும். இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்கு எதிராக மேற்குலகத்தின் பல நாடுகள் எதிர்ப்பை தெரிவித்த நிலையில் இந்தியா மற்றும் அமெரிக்காவின் கடும் எதிர்ப்புகள் தொடர்ச்சியாகவே காணப்பட்டது. இதனிடையில் அமெரிக்க – சீன பொருளாதார போர் கடுமையானதொரு நிலைக்குசென்றது. அதுவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆட்சியில் சீனாவுடனான பொருளாதார போட்டித்தன்மையும் கடும் போக்கும் வெளியுலகிற்கு தெரியும் வகையிலேயே இடம்பெற்றது.

உலக அரசியல் மற்றும் போரியல் சார்ந்த ஆய்வாளர்கள் சீனா- அமெரிக்க பொருளாதார போட்டித்தன்மையானது ஆயுதப்போராகவோ அல்லது 3 ஆம் உலக போராகவோ பரிணமிக்காது . ஆனால் இரு தரப்புமே தமது பொருளாதார நிலைகளை பாதுகாக்கவும் எதிரியின் பொருளாதாரத்தை நசுக்கவும் தந்திரோபாயமாக செயற்படலாம் என்ற தூரநோக்காக கருத்தினை தெரிவித்திருந்தனர்.

கடும் எதிர்ப்பு நிறைந்த சூழலிலேயே ஐரோப்பா  , ஆசியா மற்றும் ஆபிரிக்காக முனை வரையிலான பட்டுவழி பாதை திட்டத்தை சீனா முன்னெடுத்து வந்தது. இந்த திட்டத்தினை அனைத்துலகமும் அங்கிகரிக்க வேண்டும் என்றும் அதற்கான ஆதரவு வேட்டையிலும் சீனா நட்பு கரத்துடன் நாடுகளை அணுகியது.

இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே கொரோனா வைரஸ் சீனா – ஹுவான் பகுதியிலிருந்து பரவ தொடங்கியது. இந்த வைரஸ் தொற்றினால் இன்று அனைத்து உலக நாடுகளுமே செயலிழந்து போயுள்ளது. மக்களின் வாழ்வியல் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது மாத்திரமன்றி வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் பொருளாதார ரீதியில் அனைத்து உலக நாடுகளுமே கடும் சவால்கை எதிர்க்கொண்டுள்ளது. அது மாத்திரமன்றி பெரும்பாலான உலக நாடுகள் உணவு பற்றாக்குறையை எதிர்கொள்ளும் அச்ச நிலையும் காணப்படுகின்றது. கொவிட்19 தொற்றினால் உலகளாவிய ரீதியில் 13 இலட்சத்து 46 ஆயிரத்து 566 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 74 ஆயிரத்து 697 பேருக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இத்தாலிக்கு அடுத்தப்படியாக அதி கூடிய மரண எண்ணிக்கை அமெரிக்காவில் பதிவாகும் நிலையே தற்போது காணப்படுகின்றது. ஆனால் சீனாவில் தற்போது நிலைமை சீராகி விட்டுள்ளது.

ஆனால் சீனாவில் தற்போது நிலைமை சீராகி விட்டுள்ளது. ஆனால் அனைத்து மேற்குலக நாடுகளுமே கொவிட்19 தொற்றினால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு , இழப்புகளை சந்தித்து மீள இயலாது இன்று வரை தவிக்கும் நிலையே காணப்படுகின்றது. அமெரிக்காவை நம்பியிருந்த பல நாடுகள் செய்வதறியாதுள்ளது. அடுத்து வரும் நாட்கள் அமெரிக்க மக்களுக்கு கடுமையானதாக இருக்கும் என்று ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் அறிவித்ததன் பின்னர் உலக நாடுகள் பலவும் பேரதிர்ச்சியடைந்தன.

உலக அரசியலில் தலைமைத்தும் என்ற கேள்வி ஏற்பட தொடங்கியுள்ளது. ஏனெனில் கொவிட்19 பரவலை கட்டுப்படுத்தி ஏனைய நாடுகளுக்கு உதவும் தன்மையை அமெரிக்கா இழந்ததாலேயே இந்த நிலை உருவாகியது. மறுப்புறம் கொரோனா வைரஸின் ஆரம்பம் சீனா என்று கூறப்பட்ட நிலை மாறி அதற்கான தீர்வே சீனா என்றளவிற்கு பாரியதொரு மாற்றத்தை அனைத்துலக நாடுகள் மத்தியிலும் சீனா உருவாக்கி வருகின்றது. இதன் விளைவாக பல நாடுகள் சீனாவிடம் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உதவி கரம் நீட்டுகின்றன.

இதனை சீனாவின் இராஜதந்திரமாகவும் கொள்ளலாம். குறிப்பாக கொரோனா வைரஸ் பரல் உலக நாடுகளை கடுமையாக ஆக்கிரமிக்கையில் கடந்த மார்ச் மாதம் 21 ஆம் திகதி பெரும் தொகையான முக கவசங்கள் உட்பட சுகாதார பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் மருத்துவ ஆடைகளுடன் புகையிரதமொன்றை சீனா ஸ்பெயினுக்கு அனுப்புகின்றது. கிழக்கு சீன நகரமான யுஹீயிலிந்து ; ஸ்பெயின் நோக்கிய இந்த பயணமானது சுமார் 13 ஆயிரம் கிலோமீற்றரை கொண்டதுடன் 17 நாட்கள் தேவைப்பட்டது. ஒரு சாலை ஒரு மண்டலம் அல்லது புதிய பட்டுவழிப்பாதை திட்டதின் கீழாகவே இந்த புகையிரத பாதையை சீனா அமைத்துள்ளது.

இதே  போன்று புதிய பட்டுவழிப்பாதையை பயன்படுத்தி கொரோனா வைரஸ் ஒழிப்பிற்கு தேவையான உபகரணங்களை சீனா பல நாடுகளுக்கு அனுப்பி வருகின்றது. இந்நிலையில் ஆரம்பத்தில் சீனாவின் ஒரு சாலை ஒரு மண்டலம் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நாடுகள் இன்று மௌனித்துள்ளது. மறுப்புறம் தனது திட்டத்தின் முக்கியத்துவத்தை சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சீனா உணர்த்தி வருகின்றது. அதே போன்று சுகாதார நெருக்கடி நிலைமை உலகில் ஏற்படும் பட்சத்தில் நாடுகளுக்கு இடையில் அத்தியாவசிய மருத்துவ பொருட்களை புதிய பட்டுவழிப்பாதை ஊடாக கொண்டு செல்ல முடியும் என்ற திட்டத்தை 2017 ஆண்டில் சீனா உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு சமர்பித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

ஸ்பெயினுக்கு மாத்திரமல்ல கொரோனா வைரஸ் தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சுமார் 81 நாடுகளுக்கு சீனா தனது மருத்து உற்பத்திகளை அனுப்பிக்கொண்டுள்ளது.அந்த நாடுகளில் பட்டுவழிப்பாதை திட்டம் காணப்படும் பட்சத்தில் அதனை சீனா முழு அளவில் பயன்படுத்துகிறது. எனவே புதிய பட்டுவழிப்பாதையை தற்போது அனைத்துலகதிற்குமாக சுகாதார வழிப்பாதையாக மாற்றி தனது இலக்கை நோக்கி வேகமாக சீனா நகர்கிறது.

லியோ நிரோஷ தர்ஷன்