தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய 2 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி

302 0

தமிழகத்தில் 2 தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கியதை முன்னிட்டு தமிழகத்தில் முதல் முதலாக சென்னை கிண்டி கிங்ஸ் ஆய்வகத்துக்கு கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டுபிடிக்கும் பரிசோதனை மையம் அமைக்க மத்திய அரசு உத்தரவு வழங்கியது. இதைத்தொடர்ந்து தமிழக சுகாதாரத்துறை கூடுதல் ஆய்வகம் அமைக்க கோரிக்கை வைத்தது.

இதைத்தொடர்ந்து கூடுதலாக தேனி அரசு மருத்துவமனையில் அமைக்க அனுமதி அளித்தது. அதைத்தொடர்ந்து தமிழகத்தில் திருநெல்வேலி அரசு மருத்துவமனை, திருவாரூர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கியது. மேலும் சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையிலும், கோவை மற்றும் சேலம் அரசு மருத்துவமனையில் மத்திய அரசின் ஒப்புதலின்பேரில் ஆய்வகம் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்க தனிமைப்படுத்தப்பட்ட பிரத்யேக ‘வார்டு’ அமைக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தியது. இதையடுத்து கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறியும் வசதியை தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டுபிடிக்கும் ஆய்வகங்கள் அமைக்க 10 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதியை மத்திய அரசு வழங்கி உள்ளது. இதில் தமிழகத்தில் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை மற்றும் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டுபிடிக்கும் ஆய்வகம் அமைக்க அனுமதி கொடுத்துள்ளது.