ஸ்டான்லி மருத்துவமனையில் 500 உள்நோயாளிகள் வெளியேற்றம்

343 0

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு வருவதால் ஸ்டான்லி மருத்துவமனையில் தங்கி இருந்த உள்நோயாளிகள் 500-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர்.

சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் தினமும் தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் வெளிநாட்டில் இருந்து சென்னை வந்து கடந்த 10 நாட்களாக தங்கி உள்ள கணவன்-மனைவி உள்பட 3 பேர் தங்களுக்கு கொரோனா நோய் தொற்று இருப்பதாக கூறி சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் பரிசோதனைக்கு வந்தனர்.

அதில் கணவருக்கு கொரோனா தொற்று இல்லை என்றும், அவரது மனைவி உள்பட மற்ற 2 பெண்கள் தனி வார்டில் தங்க வைத்து, சோதனை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் கொரோனா நோய் அறிகுறியுடன் வருபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படுக்கை வசதிகள் கொண்ட தனி வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ்

இதனால் அந்த கட்டிடத்தில் இருந்த சில உள்நோயாளிகள் உயர்தர சிறப்பு சிகிச்சை கட்டிடத்துக்கு மாற்றப்பட்டனர். இவர்கள் தவிர அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்நோயாளிகளாக உள்ளவர்கள், அறுவை சிகிச்சைக்காகவும், மேல் சிகிச்சைக்காகவும் தங்கி உள்ளவர்கள் என 500-க்கும் மேற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டு, அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 31-ந்தேதிக்கு பிறகு சிகிச்சைக்கு வரும்படியும் அவர்களை அறிவுறுத்தி அனுப்பினர்.

தினந்தோறும் வெளி நோயாளிகளாக வந்து சிகிச்சை பெறுபவர்கள், உயிருக்கு பாதிக்கப்படும் முக்கிய சிகிச்சைக்கு மட்டும் வரும்படியும், முக்கிய உயிர் காக்கும் அறுவை சிகிச்சைகள் மட்டுமே தற்போது செய்யப்படும். மற்ற சிறு சிறு அறுவை சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதாலும், பிற மாநில, மாவட்ட எல்லைகள் மூடப்பட்டதாலும் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேற்றப்பட்ட வெளிமாநில, மாவட்ட நோயாளிகள் தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாமல் பரிதவித்தனர். அவர்களுக்கு மருத்துவமனை டீன் சார்பில் உணவு வழங்கப்பட்டது. இதனால் ஸ்டான்லி ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.