நோயாளர்களை ‘தனிமைப்படுத்திய’ தேசியத் தலைவரின் மதிநுட்பத்தை நினைவூட்டுகின்றார் முன்னாள் போராளி

331 0

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கும் செயற்பாடு தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த தனிமைப்படுத்தல் செயற்பாட்டை தேசியத் தலைவர் வே.பிரபாகரன் கடந்த காலத்திலேயே செயற்படுத்தி வெற்றிகண்டார் என்பதை முன்னாள் போராளி ஒருவர் பெருமிதத்துடன் வெளிப்படுத்தியிருக்கின்றார்.

தேசியத்தலைவரின் சிந்தனையும் செயற்பாடுகளும் காலத்தை விஞ்சி நிற்பவை என்பதை அவர் நடைமுறைப்படுத்திய சம்பவங்கள் ஊடாகவே அறிந்துகொள்ளலாம் என அந்தப் போராளி தெரிவித்திருக்கின்றார்.

கொரோhனா நோய்த்தொற்று மக்களுக்குப் பரவிவிடாதிருக்க தனிமைப்படுத்தல் அவசியமானது என்பதை இப்போதுதான் உலகம் முழுவதும் ஓடி ஓடிப் போதிக்கிறார்கள்.

ஆனால் அதைத் தலைவர் மிகவும் நெருக்கடியான 1998 காலப்பகுதிகளிலேயே செயற்படுத்தியிருக்கிறார்.

ஜயசிக்குறு சமர் இற்கு முன்பாக கிழக்கிலிருந்து வன்னிக்கு வந்த ஒரு தொகுதி போராளிகளை திருமலைக்கும் மட்டக்களப்பிற்கும் இடையில் ஓரிடத்தில் வைத்துக் கடலால் ஏற்றிவரும்படி கடற்புலிகளுக்குப் பணிக்கப்பட்டது.

அவ்வாறு ஏற்றப்பட்ட போராளிகளில் பலர் வாந்திபேதி, வயிற்றோட்டம் மற்றும் இனம்புரியாத காய்ச்சலொன்றின்மூலம் பாதிக்கப்பட்டிருந்திருக்கிறார்கள். நடந்துவரும்பாதையில் எங்கேயோ ஓரிடத்தில் அருந்திய நீரினால் வந்த விளைவு அது.

விடயம் தலைவருக்கு அறியத்தரப்பட, உடனே ஏற்றப்பட்ட போராளிகளையும் அவர்களை ஏற்றச்சென்ற போராளிகளையும் திட்டமிட்ட இடத்திற்கு வரவேண்டாமென்றும், நாயாற்றுக்கும் செம்மலைக்கும் இடையில் தென்னந்தோட்டமொன்றை ஒழுங்குசெய்து அங்கே அனைவரையும் தரையிறக்குமாறும் கூறி மருத்துவக்குழு ஒன்றையும் தலைவர் உடனடியாக அனுப்பியிருக்கிறார்.

உணவு, மருந்து ஆகியவற்றைக் கொண்டுவரும் வழங்கல் பிரிவு தூரத்திலேயே அவற்றை  இறக்கிவிட்டுப்போய்விட, இவர்களில் ஒரு சிலரே நடந்துபோய் அவற்றைத் தூக்கிவந்தார்கள்.

இந்தச் செயற்பாடு அந்தப் போராளிகளிடையே ஒருவித கோபத்தையும் சலனத்தையும் ஏற்படுத்தியிருந்தது. நோய் என்றும் பார்க்காமல் எங்களை தனி இடம் ஒன்றில் விட்டிருக்கின்றார்களே என போராளிகள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

எனினும், போராளிகளை ஏற்றப்பட்ட படகுகள் அனைத்தும் நன்றாகத் தொற்றுநீக்கம் செய்யப்பட்டு போராளிகளும் நன்றாகக் குணப்பட்டு இரண்டு வாரங்களின் பின்பு அவர்கள் செல்லவேண்டிய இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

தேசியத் தலைவர் நேரடியாக அவர்களைச் சந்தித்து அவர்கள் மத்தியில் உரையாற்றியபோதுதான்  தனிமைப்படுத்தலுக்காக காரணத்தைப் போராளிகளுக்குத் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

‘எங்கட மக்கள் இப்பவே பல பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ்கிறார்கள். அவர்களுக்கு மத்தியில் நடமாடும் நாம்  இன்னுமொரு சுமையாக  அவர்களுக்கு நோயைப்பரப்பிவிடும் நிலையை உருவாக்கிவிடக்கூடாது. அதற்காகவே நீங்கள் தனிமைப்படுத்தப்பட்டீர்கள்’ என தலைவர் விளக்கமளித்தார்.

இதைக்கேட்ட போராளிகள் தலைவரின் மதிநுட்பத்தை மெச்சினார்கள். தீர்க்கதரிசியான எமது தேசியத் தலைவரின் வழிப்படுத்தல்கள் எக்காலத்திலும் தமிழ் மக்களை பாதுகாக்கும்.