கொரோனோ ஆபத்திலிருந்து பாதுகாக்க அரசியல் கைதிகளையும் விடுவிக்குமாறு கோரிக்கை!

193 0

கொரோனோ ஆபத்திலிருந்து சிறைக்கைதிகளைப் பாதுகாக்கப் போதிய முன்னாயத்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டியுள்ள விடுவிக்கப்பட்ட அரசியல் கைதியான மு.கோமகன் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என கோரியுள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “உலகையே உலுக்கிவரும் கொரோனா இலங்கையையும் விட்டுவைக்கவில்லை. அதனைக் கட்டுப்படுத்த எல்லோரும் ஒன்றிணைந்து முயற்சிக்கின்றனர்.

இந்நிலையில், சிறைச்சாலைகள் பெரும் ஆபத்தான நிலையை எதிர்கொண்டு வருகின்றன. புதிதாக கைதுசெய்யப்படும் சந்தேகநபர்கள் எந்தவித உடல் பரிசோதனைகளும் இல்லாமால் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்படுகின்றனர். சிறைச்சாலையில் கைதிகளின் சுகாதாரங்கள் உரியமுறையில் பேணப்படவில்லை.

இந்நிலையில் தமிழ் அரசியல் கைதிகள் பல வருடங்களாக சிறையில் வாடுவதனால் நீரழிவு நோய் உள்ளிட்ட தொற்றா நோய்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். அந்த நோய்களினால் அவர்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாகவுள்ளது. அவற்றை கருத்திற்கொண்டு தமிழ் அரசியல் கைதிகளை பிணையிலோ, நிபந்தனைகளின் அடிப்படையிலையோ உடனடியாக விடுதலைசெய்ய வேண்டும் எனக் கோருகிறோம்.

நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் எமது அரசியல் கைதிகளை மரண தண்டனைக் கைதிகளோடு தடுத்து வைத்திருக்கின்றனர். இதனால் அவர்கள் உடல், உள ரீதியாக பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளார்கள். எனவே அவர்கள் தொடர்பாக கரிசணைகொண்டு மரண தண்டனைக் கைதிகளோடு அவர்களைத் தடுத்து வைக்காது தனியாக தடுத்து வைக்குமாறும் கோரி நிற்கிறோம்.

கொரோனோ தாக்கத்தால் ஈரானில் சிறைக்கைதிகள் பலரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் எனக் கோருகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.