கரோனா அச்சத்தால் வெறிச்சோடிய கொடைக்கானல் சுற்றுலா தலம்: காய்கறி விற்பனையும் முடக்கம்- சிறு வியாபாரிகள் கடும் பாதிப்பு

215 0

கரோனா அச்சுறுத்தலால் சுற்றுலா தலங்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் வழக்கமாக மார்ச் தொடக்கத்திலேயே களைகட்டத் தொடங்கும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் கோடை வாசஸ்தலம் கலையிழந்து காணப்படுகிறது.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொடைக்கானல் மலைப்பகுதியில் வனத்துறை, நகராட்சி, சுற்றுலாத்துறை ஆகியவை தங்கள் பராமரிப்பில் உள்ள சுற்றுலாத்தலங்களை மூடியது. இதோடுமட்டுமின்றி கொடைக்கானலில் உள்ள தங்கும் விடுதிகளும் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளன. இதனால் கொடைக்கானல் செல்பவர்களுக்கு தங்க அறைகள் கிடைக்காத நிலை உள்ளது.

அரசியல் கட்சிகள் பந்த் அறிவிக்கப்பட்ட நிலையிலும் சொந்த வாகனத்திலாவது கொடைக்கானல் வந்து செல்பவர்கள், கொடைக்கானலில் தங்கியிருப்பவர்கள் நடமாட்டம் என கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் இல்லாத நாட்களே இல்லை எனலாம்.

ஆனால் தற்போது கரோனா வைரஸ் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசின் உத்தரவை அனைத்து துறையினர் மற்றும் ஓட்டல், தங்கும்விடுதி உரிமையாளர்கள் என அனைவரும் முழுமையாக பின்பற்றுவதால் சுற்றுலாபயணிகள் முற்றிலும் இல்லாதநிலையில் முதன்முறையாக கொடைக்கானல் வெறிச்சோடிக் காணப்படுகிறது.

இதுபோன்ற ஒரு நிலையை பார்த்ததில்லை என்கின்றனர் சுற்றுலா தொழிலை நம்பி தொழில்செய்துவருபவர்கள். சுற்றுலா தலம் முற்றிலும் முடங்கியுள்ளதால் இதை நம்பி தொழில் செய்வோர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானல் மலைப்பகுதி சுற்றுலா தலங்களில் இதுவரை இல்லாதநிலை தற்போது ஏற்பட்டுள்ளது பலரையும் கவலை கொள்ளச் செய்துள்ளது.

கொடைக்கானல் ஏரியில் தினமும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க வலம்வந்த படகுகள், தற்போது முடங்கிக்கிடக்கின்றன.

மேலும் கொடைக்கானலில் விளைவிக்கப்படும் காய்கறிகளை விற்பனைசெய்யும் சந்தை மூடப்பட்டதால் காய்கறிகள் வீணாகும் நிலை ஏற்பட்டு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சந்தையில் காய்கறிகளை விற்பனை செய்து அன்றாட வாழ்க்கையை நடத்தும் சிறுவியாபாரிகள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.