கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை குறைப்பதற்காக புதிய பொருளாதார பொதி ஒன்றை ஜனாதிபதி அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், இதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஜனாதிபதி, செலவினங்களை கட்டுப்படுத்துவதற்கான அதிகாரங்களை நிதியமைச்சின் செயலாளருக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் விசேட ஊடக சந்திப்பு இன்று (வியாழக்கிழமை) அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.
இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையின் தீர்மானம் வருமாறு,
புதிய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலக பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளதுடன், போக்குவரத்து, சுற்றுலா மற்றும் விமான பயணத்துறை முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்த நோய் ஆரம்பமான சீனாவினால் நோயைக் கட்டுப்படுத்துவதற்கும் தவிர்ப்பதற்கும் மேற்கொண்ட நடைமுறையின் காணரமாக நோய் பரவுவதை கட்டுப்படுத்திய நடைமுறையை அந்த நாடு எடுத்துக்காட்டியதுடன், தற்பொழுது இந்த புதிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் வளர்ச்சியடைந்த நாடுகள் உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் பரவிவருகின்றது.
இந்த நிலைமையின் கீழ் நாட்டில் பொதுமக்கள் சுகாதார சேவையை முன்னெடுத்தல், நோய்க்கான சிகிச்சையை வழங்குவதற்காக முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுதல் பாரிய அளவிலான வரையறுக்கப்பட்ட சேவை மற்றும் விநியோகத்தை மேற்கொள்வதைப் போன்று சுற்றுலா ஏற்றுமதி வெளிநாட்டு வேலைவாய்ப்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் அந்த துறைகள் சம்பந்தப்பட்ட சிறிய வர்த்தகங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் தலையிடுவது அவசிமாகியுள்ளது.
2020 மார்ச் மாதம் 2ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் 2020ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.
அத்தோடு அதுவரையில் கடைப்பிடிக்கப்பட்ட இடைக்கால நிறைவேற்று கணக்கின் மூலம் வழங்கப்பட்டிருந்த மானியம், 2019 ஆம் ஆண்டுக்கு அமைவாக மருந்துகளைக் கொள்வனவு செய்தல், உரத்தை கொள்வனவு செய்தல் மற்றும் பல்வேறு நிர்மாணங்களை மேற்கொள்வதற்கான பற்றுச்சீட்டுக்கான கொடுப்பனவுகள் வழங்குவதைப் போன்று 2020 பொதுத் தேர்தலை நடத்துவதற்கு போதுமானதாக இல்லை என்ற அடிப்படையில் தேவையான மானியத்தை பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு எதிர்கட்சியின் ஒத்துழைப்பு கிடைக்காமையின் காரணமாக மாற்று முறை தொடர்பில் கவனம் செலுத்தவேண்டி அரசாங்கத்துக்கு ஏற்பட்டது.
இதனால் அரசியல் யாப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைவாக இந்த பணிகளுக்கு தேவையான மானியத்தை பெற்றுக்கொள்வதற்கான முறைகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இதற்கு அமைவாக திறைசேரியினால் பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
- நிலுவை மருந்து பற்றுச்சீட்டை செலுத்துவதற்காக 10 பில்லியன் ரூபாவை விடுவித்தல்.
- கொரோனா ஒழிப்பு செயற்பாடுகளுக்காக 500 மில்லியன் ரூபாவை விடுவித்தல்.
- உர பெறுகைக்கான பற்றுச்சீட்டு தொகையை செலுத்துவதற்காக 3 பில்லியன் ரூபாவை விடுவித்தல்.
- சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பற்றுச்சீட்டுதொகையை தீர்ப்பதற்காக 5 பில்லியன் ரூபாவை விடுவித்தல்.
- 2 வருட காலம் முழுவதும் செலுத்தப்படாத சிரேஸ்ட பிரஜைகளின் வைப்பீட்டுக்கான வட்டிக்காக 46 பில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்தல்
- 2020 பொது தேர்தலுக்கு தேவையான 8 பில்லியன் ரூபா மானியத்தை வழங்குதல்.
- சர்வதேச பொருளாதாரத்தில் உருவாகியுள்ள மந்த போக்கின் காரணமாக பொருளாதாரத்தில் உள்ள இடர்நிலையை கவனத்தில் கொண்டு மத்தியகால தேசிய தீர்வு தொடர்பில் ஈடுபடவேண்டிய நிலைமை பெரும்பாலான நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு அமைவாக தற்பொழுது உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலை குறைவை கவனத்திற்கொண்டு உரிய பயனைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் அரசாங்கத்தினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட துறைகளின் நிபணர்களின் கருத்துக்களை கவனத்தில் கொண்டு கீழ் கண்ட ஆலோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
- வீதி நெரிசலைக் கட்டுப்படுத்துதல் மற்றும் பொது மக்களைப் போன்று தனியார் வாகன போக்குவரத்தை இலகுபடுத்துவதை நோக்காக கொண்டு தற்பொழுது சந்தையில் எரிபொருள் விலையை அதேபோன்று முன்னெடுத்தல்.
- எரிபொருள் இறக்குமதியில் அரசாங்கத்துக்கு இலாபத்தை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இறக்குமதி வரியை விதித்தல்.
- சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை குறைவினால் கிடைக்கப்பெறும் தொகையை பயன்படுத்தி எரிபொருள் நிலைப்படுத்திய நிதியத்தை அமைத்தல் மற்றும் 6 மாத காலப்பகுதிக்குள் 200 பில்லியனை இந்த நிதியத்திற்குள் திரட்டுதல்.
- இலங்கை மின்சார சபையினால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு செலுத்தவேண்டிய தொகையை குறைக்கக்கூடிய வகையில் இந்த நிதியத்தில் 50 பில்லியன் ரூபாவை இலங்கை மின்சார சபைக்கு வழங்குதல் அதன் மூலம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் மக்கள் வங்கிக்கும் இலங்கை வங்கிக்கும் செலுத்தவேண்டிய கடன் நிலுவையை தீர்த்தல்.
- எரிபொருள் விலை குறைப்பை கவனத்தில் கொண்டு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் மசகு எண்ணெய் ஒரு லீட்டர் 70 ரூபா வீதம் இலங்கை மின்சார சபைக்கு வழங்குதல் அதன் மூலம் அனல் மின்நிலையத்தினால் உற்பத்தி செய்யப்படும் மின்சார அலகுக்கு செலவாகும் 30 மில்லியன் ரூபாவிலும் பார்க்க குறைத்து வங்கி கடன் மற்றும் வட்டி தொகையை தீர்த்தல்.
- நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் வரட்சி நிலை நிலவுவதும், தற்போதைய நிலைமையின் கீழ் நியாயமான விலைக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கும் தேவையை கவனத்தில் கொண்டு 1 கிலோ கிராம் பருப்பின் ஆகக்கூடிய சில்லறை விலை 65 ரூபாவாகவும், ரின் மீன் 425 கிராம் ரின் மீனின் ஆகக் கூடிய சில்லறை விலையை 100 ரூபாவாக குறைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
- புதிய கொரோனா வைரஸின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலா, தைத்த ஆடை, வர்த்தகம் போன்ற துறைகளை வர்த்தக பேண்தகு முறையில் முன்னெடுப்பதற்ககாக கீழ் கண்ட நிவாரணங்களை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
- வங்கி மற்றும் நிதி நிறுவனங்களினால் பெற்றுக்கொண்ட கடனை செலுத்துவதற்காக 6 மாத நிவாரண காலத்தை வழங்குதல்.
- விசேடமாக தகவல் தொழில்நுட்ப மற்றும் தைத்த ஆடைத்துறைக்காக நெகிழ்வுத்தன்மையைக்கொண்ட கடமைக்கான கால எல்லையை அறிமுகப்படுத்துதல் மற்றும் மேலதிக கொடுப்பனவு மற்றும் விடுமுறை தின கொடுப்பனவுக்கான நிவாரணத்தை வழங்குதல்.
- 4 சதவீத வட்டியின் அடிப்படையில் பணி மூலதன தேவையை ஏற்படுத்திக்கொடுத்தல்.

