கொரோனா அச்சம் காரணமாக சாதாரண காய்ச்சல், சளி வந்தாலே மக்கள் பதட்டம் அடைந்து விடுகிறார்கள் என்று உலக சுகாதார மையம் கூறியுள்ளது.உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் சுகாதாரத்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிக அளவில் மக்கள் கூடும் இடங்கள், சுற்றுலாத்தலங்கள், தியேட்டர்கள், மால்கள் மூடப்பட்டுள்ளன.
கிருமிநாசினி தெளிப்பது போன்ற ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. என்றாலும் பல்வேறு தகவல்கள் காரணமாக அச்சம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார மையம் கூறி இருப்பதாவது:-
கொரோனா அச்சம் காரணமாக சாதாரண காய்ச்சல், சளி வந்தாலே மக்கள் பதட்டம் அடைந்து விடுகிறார்கள். எனவே, தற்போது இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களைவிட, இது நம்மை தாக்கி விடுமோ என்ற அச்சம் மக்களிடையே அதிகமாக பரவி வருகிறது.
இதனால் கொரோனா வைரஸ் அதன் தாக்கம் ஆகியவை பலருக்கு மன அழுத்தத்தையும், கவலையையும் ஏற்படுத்துகின்றன. மக்களின் பய உணர்வு இதற்கு காரணமாக அமைந்துள்ளது.
இவ்வாறு உலக சுகாதார மையம் கூறியுள்ளது.
தினமும் சமூக வலைத்தளங்களில் உறுதி செய்யப்படாத தகவல்கள் பரவிக்கொண்டே இருக்கின்றன. இதை தொடர்ச்சியாக பார்க்கும் போதும், படிக்கும் போதும் எதிர்மறையான எண்ணங்கள் உருவாகின்றன. இதனால் பயம், பதட்டம், மன அழுத்தம் உருவாகிறது.
இது நோய் எதிர்ப்பு சக்தியும், மன வலிமையும் குறைக்கும் என்று மன நல வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மனநல ஆலோசகர் ஒருவர் கூறும்போது, ‘இந்த வைரஸ் காய்ச்சல் பற்றிய மனக்கவலை அல்லது மன உளைச்சல் இருந்தால் இந்த காய்ச்சல் தொடர்பான தகவல்களை பார்ப்பது, படிப்பது, கேட்பதை தவிர்க்க வேண்டும். பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களை அடையாளப்படுத்தக்கூடாது.
கொரோனா வைரஸ் பற்றிய புது தகவல்களை தொடர்ந்து தேடுவதை தவிர்க்க வேண்டும். நம்பகத்தன்மை உள்ள தகவல்களை மட்டும் மற்றவர்களுக்கு பகிருங்கள்.
குடும்ப மருத்துவர் அல்லது சுகாதார மைய இணைய தள தகவல்களை மட்டும் நம்புங்கள். தேவையான தடுப்பு முறைகளை கடைபிடியுங்கள். மற்றவர்களுக்கு ஆதரவாக இருங்கள். தேவையானபோது உதவுங்கள்.
கொரோனா தாக்கத்தை விட பாதிக்கப்பட்டு குணம் அடைந்தவர்களின் செய்தியை அதிகம் பகிருங்கள். இது மக்களிடையே பீதியை குறைக்கும். தேவையற்ற அச்சத்தை போக்கும். இதை கடைபிடித்தால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார்கள்’ என்று கூறினார்.

