தொடாமலேயே காய்ச்சலை கண்டுபிடிக்கும் தெர்மா மீட்டரை ரூ.15 ஆயிரத்துக்கு விற்ற மருந்து கடைக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக முக கவசம், கை கழுவும் சானிடைசர் கிருமி நாசினிக்கு தமிழகத்தில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல மருந்து கடைகளில் இவை கிடைப்பதில்லை.
இவற்றை அத்தியாவசிய பொருட்களாக அரசு அறிவித்துள்ளதால் கூடுதல் விலைக்கு யாரேனும் பதுக்கி விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
பொதுமக்களுக்கு இவற்றை ஆங்காங்கே இலவசமாக கொடுக்கவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்பாடு செய்துள்ளார். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுகாதார பணியாளர்கள் மூலம் இவை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் அனைத்து மருந்து கடைகளிலும் நிர்ணயிக்கப்பட்ட குறைந்த விலையில் இவைகள் விற்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்கவும் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் சென்னை திருவல்லிக்கேணி ஓமந்துரார் பல்நோக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு எதிரே உள்ள ‘ஐடியல் சர்ஜிகல்’ மருந்து கடையில் முககவசம், காய்ச்சலை கண்டுபிடிக்கும் இன்ப்ராரெட் தெர்மா மீட்டர் ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டு அதிக விலைக்கு விற்பதாக சுகாதாரதுறை அதிகாரிகளுக்கு இரவில் தகவல் கிடைத்தது.
உடனே சுகாதாரதுறையினர் ஐ.ஏ.எஸ். அதிகாரி செந்தில்ராஜ் தலைமையில் ‘ஐடியல் சர்ஜிகல்’ மருந்து கடைக்கு விரைந்தனர்.
சுகாதாரதுறைக்கு தெர்மா மீட்டர், முககவசம் தேவைப்படுவதாக விலை கேட்டனர். அதற்கு கடை உரிமையாளர் ரூ.2800-க்கு விற்க வேண்டிய இன்ப்ரா-ரெட் தெர்மா மீட்டரை (ஒரு நபரை தொடாமல் காய்ச்சல் கண்டுபிடிக்கும் கருவி) ரூ.15 ஆயிரத்துக்கு விலை சொன்னார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த கடையில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
அப்போது அங்கு ஏராளமான முக கவசம், தெர்மா மீட்டர் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர்.
உடனே ‘ஐடியல் சர்ஜிகல்’ மருந்து கடைக்கு ‘சீல்’ வைத்தனர். பொது சுகாதார சட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்களை பதுக்கி அதிக விலைக்கு விற்றதாக கடை உரிமையாளர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

