அரசியல்வாதிகளுக்குத் தேர்தல் காலம் மக்களுக்கு…..!மா.பாஸ்கரன் யேர்மனி

530 0

தமிழருக்கானதொரு தலையமற்ற வெற்றிடத்தில் எவரும் சவாரி செய்யலாம் என்றதொரு நிலையிற் கடந்த பத்தாண்டுகளைக் கடந்து செல்லும் தமிழரது அரசியலில் மூன்று அரசுத்தலைவருக்கான தேர்தலையும் இரண்டு நாடாளுமன்றத் தேர்தலையும் சந்தித்துள்ள சூழலில் மீண்டுமொரு நாடாளுமன்றத் தேர்தலை ஈழத்தமிழினம் எதிர்கொண்டு நிற்கும் இவ்வேளையில் கடந்தகாலத்திற் பதவிக்கு வந்த அரசுகளும் தமிழ்க்கட்சிகளும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினவா அல்லது குறைந்தபட்சம் ஏதாவது முனைப்புகளை மேற்கொண்டனவா என்றால் எம்மிடம் இருப்பது வெறும் சுழியமேயாகும். இந்தச் சுழியத்துள் சுற்றியவாறு அழிந்துவிடாது நிமிர்வதற்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்பையும் பயன்படுத்துவதே இன்றைய தேவையும் சாதுரியமும் என்பதைத் தமிழினம் கடந்துவந்த பட்டறிவு சுட்டிநிற்கிறது.

2009இல் தமிழரது அரசியல் வேணவாவை நந்திக்கடலில் அமிழ்த்திவிட்டதாகச் சிங்களம் கொக்கரித்ததை அப்படியே முன்னெடுத்துச் செல்வோராகத் தமிழ்த் தலைமைகள் என்றுசொல்வோர், குறிப்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நகரும் நிலையானது ஈழத்தீவிலே தமிழினத்தின் மிகுதி இருப்பையும் இல்லாமற்செய்து அழிவை நோக்கி அழைத்துச் சென்றதையே கடந்து வந்த ஆண்டுகள் பதிவுசெய்துள்ளன. இனியும் பதிவுசெய்யும். இந்த சூழலில் மீண்டும் வாழவைப்போம் ஆளவைப்போம் என்று வாக்குக் கேட்டு அரசியல்வாதிகள் எந்தக் கூச்சமும் இன்றி உங்கள் வாசற்படிகளை நோக்கிவரும் வேளையில், பழைமை வழமை கைகாட்டியோர் என்று கண்மூடியிருக்காது காத்திரமாகச் சிந்தித்துச் செயற்பட வேண்டியது வாக்குப்பலமுள்ள ஒவ்வொரு தமிழரதும் கடமையாகும்.

தமிழினத்துக்குப் பாதகமானதும் சிங்களத்துக்குச் சாதகமானதும், இனவழிப்பு மற்றும் நில ஆக்கிரமிப்பிற்கான சட்டங்களை இயற்றவும் நடைமுறைப்படுத்தவும் இருக்கும் ஒரு பெரும் அலகாகவே ஈழத்தீவின் நாடாளுமன்றம் இருக்கின்றமையை இந்த உலகால் புரிந்துகொள்ள முடியாதெனினும், தமிழினத்தின் தொடரும் துயரநிலையே தமிழினத்திற்கான பாடமாகும். அப்படியாயின் ஏனிந்த நாடாளுமன்றத் தேர்தலைத் தமிழினம் கருத்திலெடுக்க வேண்டும் என்ற வினா எழுவது இயல்பானதே. இந்தக் வினாவுக்கான விடை தேடவேண்டும் என்றால் கடந்த தேர்தல்களைத் தமிழினம் மீளாய்வு செய்வதூடாகத் தெளிவடைவதோடு, தெளிவான முடிவையும் எடுப்பதே இன்றைய தேவையாகும்.

சனநாயகப்பிரதிநிதிகள் நாடாளுமன்றினூடாக வந்து பேசவேண்டும் என்று உலக அரசுகளும் அமைப்புகளும் நகரும் வேளையில் தமிழரது உரிமைப் பிரச்சினையை துணிவோடு முன்வைக்கும் தலைமையை இனம்காண்பதும் தெரிவுசெய்வதுமே தமிழினத்தின் அடிப்படைகளுக்கான முன்மொழிவையாவது நகர்த்த முடியும் என்பதே இன்றிருக்கும் யதார்த்தநிலையாகும். ஊதிப்பெருத்திருக்கும் சிங்கள உயரினவாதமானது தனிச்சிங்களவரால் தீர்மானிக்கப்பட்ட அரசுத்தலைமை என்ற இறுமாப்போடு, நாடாளுமன்றமும் தனிச்சிங்கள வாக்குகளால் அமைக்கப்படவேண்டும் என்ற இறுமாப்பில் சிங்களத் தரப்புக் குறிப்பாக, இறுதிக்கட்ட இனஅழிப்புக்குத் தலைமை தாங்கிய கோத்தபாய – மகிந்த தரப்புகள் நகரும் அதேவேளை, தமிழர்தரப்பிலும் தாமே தமிழ்தேசியத்தின் காப்பாளர்கள் என்றும், பாரம்பரியக் கட்சிகள் என்றும், தம்மை தெரிவு செய்தால்தான் தமிழ்த் தேசியத்தின் ஒற்றுமை ஓங்கும் என்றும் ஓலமிடுகின்றனர். இந்த ஓலத்தின் பின்னால் இருக்கும் அரசியலைத் தமிழினம் புரிந்துகொள்வதே தற்போதைய அவலத்திலிருந்து விடுபடுவதற்கான வழியாகும். வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம் செல்வதும் பின் சிங்களத்துக்கே வால்பிடிப்பதும் வக்காளத்து வாங்குவதுமே தமது நிகழ்வுநிரலாகக் கொண்டுள்ளோரை முதலில் நிராகரிப்பதே உலகுக்கும் சிங்களத்துக்குமான செய்தியாக அமையவேண்டும். அதேவேளை வாக்கைப்பெற்று நாடாளுமன்ற அவையையும் சிற்றுண்டிச்சாலையையும் அலங்கரிப்போராய் இல்லாது ஆக்கபூர்வமாகத் தமிழரது உரிமைப்பிரச்சினையை உலகுக்கு எடுத்துச்செல்லும் ஆற்றலுள்ளோரைத் தேர்வுசெய்வதே பொருத்தப்பாடாகும்.

ஏனென்றால் சிங்கள நாடாளுமன்று, ஏன் சிங்கள நாடாளுமன்றமென்று சொல்ல வேண்டியுள்ளது என்பதைத் தமிழினம் புரிந்தகொள்ள வேண்டியதும் அவசியமானது. ஏனெனில் ஆகக்கூடியது வட – கிழக்கிலிருந்து 22தமிழ் உறுப்பினர்களால் தமிழர் சார்பாக எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாதென்ற மெய்நிலையைப் புரிந்துகொண்டு உற்றுநோக்கி நகர்வது தமிழரது தலையாய கடமையாகும்.225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றிற்கு 196 உறுப்பினர்கள் மக்களால் தேர்;தெடுக்கப்பட மிகுதி 29 உறுப்பினர்கள் தேசிய அளவில் கட்சிகள் பெறும் வாக்குகளின் அடிப்படையில் விகிதாசார முறைப்படி கட்சியின் செயலாளரினால் முன்மொழியப்படுபவர்கள் நாடாளுமன்றுக்குத் தெரிவாகின்றனர். மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலமே எந்த மாற்றத்தையும் செய்யலாம் என்ற சட்ட அமைப்புக்கொண்ட நாடாளுமன்றிலே எந்தவொரு காலத்திலும் தமிழர்தரப்பால், தமிழருக்கான எந்தவொரு நன்மையையும் பெற்றுக்கொள்ள முடியாதென்பதே மெய்நிலையாகும். இங்கு தமிழர்களைப் பொறுத்தவரை பிரச்சனைகளைக் குறைந்தபட்சம் விவாதிக்க அல்லது சொல்வதற்கானதொரு சபையன்றி வேறில்லை. ஆனால் அந்தசபையைக்கூடத் சரியாகப் பயன்படுத்தாது சிங்களத்துக்கு வால்பிடிப்பதோடு, சிங்களத்தை வளமாக்குக்கும் தமிழ்த் தலைமைத்துவம் தேவையா(?) என்பதைத் தமிழ் மக்கள் தம்மைத் தாமே கேட்டுக்கொள்ள வேண்டியது காலத்தின் வினாவென்பதை கருத்திற் கொள்ளவேண்டும் என்ற காலத்தில் நிற்கின்றோம் என்பதைத் தமிழர்கள் புரிந்துகொள்வதே ஒரு அரசியல் வெற்றிதான்.

தமிழினத்தின் இருப்புக்கான சிந்தனை தமிழ்தேசியப் பரப்பில் மேலொங்குதலே எமது விடியலுக்கான கதவுகளைத் திறக்கும் என்ற பேருண்மையை தமிழினம் பற்றாதவரை அனைத்தும் வினாக்களோடு சுருங்கி விடைதெரியாது அமிழ்ந்துவிடும். விடைகள் எம்முன்னே தெரியவேண்டுமானால் விழிப்படைதலே முதல்வழியாகும். இல்லையேல் மக்களுக்குப் பட்டையைப் போட்டுவிட்டு வெள்ளை வேட்டியும் சட்டையுமாக அரசியல்வாதிகள் தமது வித்தைகளைக் காட்டும் களமாகத் தமிழர் தேசம் இருளில் அமிழ்ந்துவிடுதல் விதியென்றாகிவிடும். ஈழத்தீவில் தமிழினத்தின் வாக்குப்பலம் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக இல்லாதுவிடினும், தமிழினத்தின் தலைவிதியை மாற்றும் சக்தியாகவேணும் மக்கள் தம் வாக்குப்பலத்தை மாற்றவேண்டும்.
விதியை மதியால் வெல்லும் வகைசெய்தல் அறிவின் செயலென்ற உண்மையை உணர்ந்து கொண்டு கட்சிகளின் அடிமைகளாக இல்லாது, கட்சிகளிடம் வினாத்தொடுப்போராகத் தமிழினம் மாறவேண்டும். கொள்கையற்ற இலக்கற்ற தமிழினத்தின் இருப்பை நிலைநிறுத்தும் சிந்தனையற்ற கட்சிகள் தேவையா(?)என்று சிந்திப்பதுகூட விடியலுக்கான வழியாகும்.

மா.பாஸ்கரன்
யேர்மனி.