கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைய, சிறைக் கைதிகள் அனைவரும் முகக் கவசம் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை (13) நடைபெற்ற அனைத்து சிறைச்சாலைக் கண்காணிப்பாளர்களுடனான கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சிறைச்சாலைத் துறையினரின் சீருடைக்குப் பயன்படுத்தும் துணி வகைகளை அடிப்படையாகக் கொண்டே இந்த முக மூடிகளைத் தயாரிக்கத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு சிறைச்சாலைக்கும் தலா நூறு மீட்டர் துணி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், சிறையறைகளுக்குள் நுழைவதற்கு முன்னதாக, கைதிகள் கைகளைக் கழுவவும் வசதிகள் செய்யுமாறு, அனைத்துச் சிறைச்சாலைக் கண்காணிப்பாளர்களுக்கும் சிறைச்சாலைத்துறை அறிவுறுத்தல் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

