கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த உலக சுகாதார ஸ்தாபனத்தினால் முன்வைக்கப்பட்டிருக்கும் ஆலோசனைகளை அரசாங்கம் உரிய முறையில் பின்பற்றவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரமதாச தெரிவித்தார்.
இதன் காரணமாகவே நாட்டு மக்கள் அந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகும் ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், “கொரோனா வைரஸின் தாக்கம் உலகளாவிய ரீதியில் பாரிய சுகாதார நெருக்கடியாக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில், கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பியிருந்தேன். ஆயினும் அரசாங்கம் அதனை கேலிக்குரிய விடயமாகவே எடுத்துக்கொண்டது.
இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வகையிலான ஜனாதிபதி செயலணியை உடனடியாக ஸ்தாபித்து இந்த சுகாதார நெருக்கடியை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.

