தமிழரசுக் கட்சியின் தேர்தல்கால குத்து வெட்டுகள்!

316 0
தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், கடந்த இரு வாரங்களாக, தமிழரசுக் கட்சிக்குள் இடம்பெற்றுவரும் வேட்பாளர் நியமனத்துக்கான இழுபறியும் குத்து வெட்டுகளுமே முதன்மைக் கவனத்தைப் பெற்றிருக்கின்றன.

தம்முடைய வெற்றிக்கு அச்சுறுத்தலானவர்கள் என்று கருதும் நபர்களை ஓரங்கட்டுவது முதல், ஆளுமையுள்ள புதியவர்களை வேட்பாளர் பட்டியலுக்குள் உள்வாங்குவதைத் தவிர்ப்பது வரை, மிகமிக கொச்சையான நடவடிக்கைகளில், தமிழரசுக் கட்சியின் தலைவரும், அந்தக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஈடுபட்டு வருகிறார்கள்.

யாழ்ப்பாணத்துக்குள், கூட்டமைப்புக்கு எதிரான சக்தியாக எழுவார்கள் என்று நம்பப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியும் தமக்கிடையிலான முரண்பாடுகளால் மக்களிடம் பெரிய நம்பிக்கைகள் எதையும் பெறவில்லை. அதனால், கூட்டமைப்பை நோக்கிய திரட்சி, வேண்டா வெறுப்பாகவேனும் மக்கள் மீது இம்முறையும் திணிக்கப்பட்டிருக்கின்றது.

அத்தோடு, யாழ்ப்பாணத்துக்கு அப்பாலான தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், கூட்டமைப்புக்கு எதிரான எந்தவொரு தரப்பும் இல்லை என்பதும், கூட்டமைப்பின் மிகப்பெரிய பலம். இவ்வாறான கட்டங்கள் எல்லாமும் சேர்ந்தும் கூட, கூட்டமைப்புக்குள்ளும் தமிழரசுக் கட்சிக்குள்ளும் ஆசனப் பங்கீட்டுச் சண்டைகளையும் வேட்பாளர் நியமனத்துக்கான இழுபறிகளையும் தோற்றுவித்திருக்கின்றது.

தேர்தலை முன்னிறுத்திய அரசியலில், வெற்றி என்பதே அடிப்படை ஆகும். வெற்றியை நோக்கி ஓடாத யாரும், தேர்தல் அரசியலுக்கு இலாயக்கற்றவர்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளைக் கடந்த காலங்களில் வகித்த தமிழரசுக் கட்சிக்காரர்களோ, அல்லது கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிக்காரர்களோ அவர்களின் கடந்த காலச் செயற்பாடுகள் குறித்து மீள்பரிசீலனை செய்தால், பலரை அவர்களின் கைகளே ஓங்கி அறையும் நிலையே காணப்படுகின்றது.

நாடாளுமன்றத்தில் நீண்ட தூக்கம் போட்டவர்கள் முதல், நான்கரை ஆண்டுகளில் ஒற்றை உரை நிகழ்த்தியவர்கள் வரையில், நீண்ட பட்டியல் உண்டு. இப்படியான தகுதிகளைக் கொண்டிருக்கின்ற நபர்கள், மீண்டும் தங்களது பதவிகளைத் தக்கவைப்பதற்கு ஆளுமையுள்ள நபர்களுக்கு முன்னால் தடுப்புச் சுவர்களாக மாறியுள்ளார்கள்.

இளைஞர்களையும் பெண்களையும் கூட்டமைப்புக்குள் போதியளவில் முன்னிறுத்தவில்லை என்கிற குற்றச்சாட்டு, கடந்த பத்து ஆண்டுகளாக நீடிக்கின்றது. சாக்குப் போக்குக்காக ஓரிரண்டு இளைஞர்களும் பெண்களும் தேர்தல்களில் நிறுத்தப்படுவார்கள்; அவர்கள், நிறுத்தப்படும் போதே, தோற்றுப்போவார்கள் என்று தெரிந்துதான் நிறுத்துகிறார்கள்.

இந்த நிலையை மாற்றுவதற்கான நடவடிக்கையை, கூட்டமைப்பின் எந்தத் தலைவரும் பெரிதாக முன்னெடுக்கவில்லை. ஏனெனில், அவர்களின் எண்ணம், வாழ்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்துவிட வேண்டும் என்பதே ஆகும்.

கூட்டமைப்புக்குள் தமிழரசுக் கட்சியோடு ஒப்பிடும்போது, ஏனைய பங்காளிக் கட்சிகள் இரண்டும் தமக்கு வழங்கப்பட்ட ஆசனப்பங்கீட்டில் ஓரளவுக்கு இளைஞர்களை உள்வாங்கியிருக்கின்றன. அப்படி உள்வாங்கப்பட்டவர்களும், அந்தக் கட்சிகளின் தலைவர்களின் வெற்றியை உறுதி செய்வதற்கான போக்கிலானதுதான்.

ஆனால், தமிழரசுக் கட்சியைப் பொறுத்தளவில், எந்தவொரு முன்னேற்றகரமான அம்சத்தையும் காணக்கிடைக்கவில்லை. என்ன அடிப்படையில், ஏற்கெனவே நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த அனைவருக்கும் வேட்பாளர் நியமனங்களை வழங்குவதற்கு இரா. சம்பந்தனும் மாவை சேனாதிராஜாவும் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவும் முன்வந்தது என்று தெரியவில்லை.

சம்பந்தன் முதற்கொண்டு, அந்தக் கட்சியின் மத்திய குழு வரையில், கடந்த நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருந்த பலர் மீது, நீண்ட விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் இருக்கின்றன. அப்படியான நிலையில், கேள்விகளுக்கு அப்பாலான வேட்பாளர் அங்கிகாரம் என்பது, அடிப்படையில் அயோக்கியத்தனமானதுதான்.

ஏனெனில், தங்களை நோக்கி, மக்கள் வாக்களிக்கிறார்கள் என்பதற்காக, எந்தவித தகுதியுமற்ற, தங்களை நிரூபிக்கத் தவறியவர்களை வேட்பாளர்களாக முன்னிறுத்திவிட்டு, அவர்களுக்கு வாக்களிக்கக் கோருவது அரசியல் அறமல்ல.

இன்னொரு பக்கம், தமிழரசுக் கட்சியின் தலைவர் முதற்கொண்டு முக்கியஸ்தர்களும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவிகளை நோக்கிய எதிர்காலத் திட்டங்களோடும் வாரிசு அரசியலை நோக்கிய நகர்வுகளோடும் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதற்குப் பதவியில் இருப்பது அவசியமானது என்று கருதுகிறார்கள். அதனால், எந்தவித முன்னோக்கிய சிந்தனையும் இன்றி, தமிழ்த் தேசிய அரசியலைக் குறுக்கு வழியில் கையாண்டு சிதைக்கும் கட்டத்துக்கும் செல்லத் தயாராக இருக்கிறார்கள். அதற்காக, எவ்வளவு மோசமான தரப்புகளோடும் கள்ள உறவோடு இயங்கவும் தயாராக இருக்கிறார்கள்.

ஏனெனில், தேர்தல்களை முன்வைத்து, குறிப்பாக விருப்பு வாக்குகளை இலக்கு வைத்து, தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆடும் ஆட்டம், அவ்வளவு அப்பத்தமான கட்டங்களையும் காட்டிக் கொண்டிருக்கின்றது.

சிரேஷ்ட ஊடகவியலாளர் வித்தியாதரன், திங்கட்கிழமை (09) நடைபெற்ற அரசியல் கூட்டமொன்றில், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவைக் கடுமையான தொனியில் விமர்சித்திருந்தார்.

குறிப்பாக, இன்று நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அவர், மாகாண சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும், முதலமைச்சர் வேட்பாளர் தானே என்று முன்வருவார் என்று; உண்மை நிலையும் அதுவாகத்தான் இருக்கின்றது.

ஏனெனில், மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட விருப்பமுள்ள மாவை சேனாதிராஜா, இந்தப் பொதுத் தேர்தலில் ஆளுமையுள்ள இளைஞர் ஒருவர் போட்டியிடுவதற்கான வாய்ப்பைத் தட்டிப்பறித்திருக்கின்றார். அதற்காகத் தோற்றுப்போகக்கூடிய வேட்பாளர் ஒருவரைத் தேடிப் பிடித்து சேர்த்துக் கொண்டிருக்கின்றார். இது, ஒரு கட்சியின் தலைவராக, அவர் செய்திருக்கக் கூடிய காரியமா?

இதனால், திருகோணமலையில் இன்னொருவரை நிறுத்திவிட்டு, தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்கு வர இருந்த சம்பந்தனும் மீண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டி வந்திருக்கின்றது.

இன்னொரு முகம், இன்னோர் ஆளுமைக்கான வெற்றி சம்பந்தன் மீண்டும் போட்டியிடுவதன் மூலம் இல்லாமல் செய்யப்பட்டிருக்கின்றது. மாவை சேனாதிராஜா, இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கு எடுத்த தீர்மானத்தை அடுத்தே, சம்பந்தனையும் போட்டியிடுமாறு தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு வலியுறுத்தி, இணங்கவும் வைத்திருக்கின்றது.

பொதுத் தேர்தலுக்கும் மாகாண சபைத் தேர்தலுக்கும் இடையில் ஒரு சில மாதங்கள் பதவியின்றி இருப்பதில், மாவை சேனாதிராஜாவுக்கு இருந்த பிரச்சினை, பல்வேறு பிரச்சினைகளைத் தோற்றுவித்திருக்கின்றது.

தமிழரசுக் கட்சியைப் பொறுத்தளவில், இந்தத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் இரண்டு பெண் வேட்பாளர்களை களமிறக்கியமை, மட்டக்களப்பில் ஓய்வுபெற்ற முன்னாள் மாவட்டச் செயலாளர், இளைஞர் ஒருவரின் நியமனம் குறிப்பிட்டளவு வரவேற்கக்கூடிய செய்திகளாகப் பார்க்கப்படுகின்றது.

யாழ். தேர்தல் மாவட்டத்தில் தோற்றுப்போவதற்காகச் சாக்குக்கான ஒரு பெண் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்கிற கட்டம் தாண்டி, சம்பந்தனின் முயற்சியால் வெற்றிகளை நோக்கி ஓடக்கூடிய வகையில், இரு பெண் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டு இருக்கிறார்கள். திருமதி சசிகலா ரவிராஜ், அம்பிகா சற்குணநாதன் ஆகியோரில் ஒருவர் கட்டாயம் அடுத்த நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பார்கள் என்று தெரிகிறது. அவர்கள் குறித்து ‘கொழும்பு இறக்குமதிகள்’ என்கிற விமர்சனம் இருப்பது உண்மையே. அது தொடர்பிலான விமர்சனமும் தட்டிக்கழிக்க முடியாதது.

யாழ். தேர்தல் மாவட்டத்தைப் போன்று, ஏனைய தேர்தல் மாவட்டங்களிலும் குறைந்தது இரண்டு பெண் வேட்பாளர்களையாவது, அதுவும் வெற்றிகளை நோக்கி ஓடக்கூடிய பெண்களைத் தமிழரசுக் கட்சி முன்னிறுத்தியிருக்க வேண்டும்.

அது, கட்சிக்குள் பெண்களுக்கான வகிபாகத்தை அதிகரிப்பதுடன், நியாயமான உரையாடல்களைப் பெண் உரிமைகள் சார்ந்தும் முன்னெடுக்க வைத்திருக்கும். ஏனெனில், தமிழ்த் தேசியம் என்பது, ஆணிய சிந்தனைகளுக்குள் குறுக்கப்பட்ட ஒன்றல்ல; அது, பரந்துபட்ட உரிமைகளை அங்கிகரிக்கின்ற சித்தாந்தம் ஆகும்.

மக்கள் எங்களுக்குத்தான் வெற்றியை வழங்குவார்கள்; அவர்களுக்கு எங்களைத் தவிர்த்தால் வேறு மார்க்கமில்லை என்கிற நினைப்போடுதான் தமிழரசுக் கட்சியும் கூட்டமைப்பும் செயற்பட்டு வருகின்றன.

இதைத்தான், தேர்தல் கால குத்து வெட்டுகளும் காட்டுகின்றன. இந்தநிலை நீடிக்குமாக இருந்தால், மக்களின் நம்பிக்கை தோற்கடிக்கப்பட்டு, அரசியல் அறமும் தார்மீகமும் அநாதையாக்கப்பட்டுவிடும். அப்போது, ஓநாய்களிடம் மாட்டிய ஆட்டுக்குட்டிகளாக தமிழ் மக்கள் மாறியிருப்பார்கள்.

புருஜோத்தமன் தங்கமயில்