நாடு இராணுவ ஆட்சியை நோக்கி நகரவில்லை- சுசில்

290 0

நாடு இராணுவ ஆட்சியை நோக்கி ஒருபோதும் நகரவில்லை. மாறாக ஒழுங்கான கட்டமைப்புடைய நாடாகவே மாறி வருகின்றதென முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தால், நாடு இராணுவ ஆட்சியை நோக்கி கொண்டுச் செல்லப்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இராணுவ ஆட்சியல்ல. ஒரு ஒழுங்கான நாடு என்ற வகையில்தான் நாடு சென்று கொண்டிருக்கிறது.

இராணுவ ஆட்சிக்கும் ஒழுங்கான நாட்டுக்கும் தெளிவான வேறுபாடு உள்ளது. தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி நாட்டை ஒழுங்காக நடத்திச் செல்வதற்கான மக்கள் ஆணை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் அவரும் மக்கள் வழங்கிய ஆணைக்கு அமைய திறன்பட தற்போது செயற்பட்டு வருகின்றார்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தினால் அதனை அவர் முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாகத்தான் எமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்படுகிறது.

இதேவேளை அரசியலுக்குள் நுழைவதற்கு கல்வி மாத்திரம் போதாது. அவர்களுக்கு அரசியல் விழிப்புணர்வும் அரசியல் ஞானம் அல்லது அனுபவமும் இருக்க வேண்டும்.

சட்டத்தரணிகள் மட்டுமே நாடாளுமன்றம் செல்ல வேண்டும் என்று கருத்துக் கூறப்பட்டது. ஆனால் வைத்தியர்கள் பொறியியலாளர்கள், விஞ்ஞானிகள் ஆகியோரும் நாடாளுமன்ற வர வேண்டும். இவ்வாறானோரின் பிரதிநிதித்துவம் இருந்தால் அது ஆரோக்கியமான நாடாளுமன்றமாக இருக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.