நீர்க்கொழும்பு மோதல் சம்பவம் தொடர்பில் 18 வயது இளைஞன் கைது

265 0

நீர்க்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் நீர்க்கொழும்பு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக இன்று (10) குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

18 வயதுடைய நீர்க்கொழும்பு, பெரியமுல்ல பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் இன்றைய தினம் நீர்க்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

பெரியமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றிற்கு நேற்றிரவு (09) 9.30 மணியளவில் வருகை தந்த 6 பேர் கொண்ட குழுவொன்று குறித்த ஹோட்டலில் மது அருந்த முயற்சித்துள்ள போது ஹோட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பின்னர் குறித்த குழுவினர் ஹோட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மோதலின் போது உரிமையாளரையும் மற்றும் அதன் ஊழியர்கள் சிலரையும் கூரிய ஆயுதத்தால் தாக்கிய குறித்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான 5 பேர் படுகாயமடைந்த நிலையில் நீர்க்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து அதில் ஒரு ஊழியர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

36 வயதுடைய கனேவெல்பொல, கெகிராவை பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் நீர்க்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.