சக்தியின் மூலமாகவே பெண்கள் படைக்கப்பட்டுள்ளார்கள்!தமிழ்ப் பெண்கள் அமைப்பு-பிரான்சு

362 0

 

சர்வதேச பெண்கள் நாள் !

இன்று சர்வதேச பெண்கள், உலகின் பெண்களின் நிலையை பல நோக்கு நிலையில் இருந்து பேசுகின்ற நாளாக இது அமைகின்றது. மானுட வாழ்வியல் வரலாற்றில் இன்றுவரை ஓர் இயங்கு நிலை இருக்கின்றதெனில் அதற்கு பெண் எனும் படைப்பியல் மகா சக்தியும் காரணமாய் நிற்கின்றது.இயற்கை பெண்களை சக்தியின் மூலமாகவே படைத்திருக்கின்றது. அதை பெண்ணின வரலாறு காலத்துக்கு காலம் நிரூபித்திருக்கின்றது.ஆணுக்கு நிகர் பெண்ணென ஒப்பீடுகளுக்கு அப்பால் பெண் என்ற வடிவம், படைப்பு தனித்துவமான சக்திகளோடு உள்ளது. அதை ஆணோடு ஒப்பிட்டு அதன் ஆற்றலை ஆளுமையைக் கூட குறைத்துவிட முடியும்.பெரும் சக்தியாயிருந்த பெண்.அடிமைப்படுத்தப்பட்ட நிலையில் மீள எழுகின்றபோது ஆண் என்ற ஓர் அளவுகோல் திணிக்கப்பட்டதே தவிர பெண் எனும் பெரும் சக்தி தனித்துவமானது.

புராணங்களும் இதிகாசங்களும் இலக்கியங்களும் பெண்மையை எத்தகைய நோக்கு நிலையில் படைத்தன என்பது ஆணாதிக்க சமுதாய நிலையிலேயே அதிகம் வெளிப்பட்டிருக்கின்றது.தாய் வழிச்சமுதாய நிலை அருகிய நிலையின் பின் மிக நீண்ட காலம் பெண் என்பவள் இந்த மனித சமுதாயத்தில் எதன் பங்காளி என்பது பற்றிய கலங்கலான அல்லது தெளிவற்ற ஒரு பயணமே நடந்திருக்கின்றது.மாற்றங்களின் வாயிலான மறுமலர்ச்சிகள், புரட்சிகள் புதிய தேசங்கள் பிறத்தலின்போது பெண் என்பதன் அர்த்த பரிமாணமும் மாற்றத்துக்கு உள்ளாகியது.அதுவே பெண்ணின் ஆரம்ப மூலத்தின் பொருளையும் சக்தியையும் மீள வெளிப்படுத்தலாயிற்று.
இன்றைய நாளில் உலகப்பெண்களின் நிலை இன்றைக்கும் ஒரு பக்கத்தில் உயராத தராசாகவே காணப்படுகின்றது.குறிப்பாக போர்களின் போது போர்களின் பின்னாகவும் பெண்களின் நிலை அவலத்துக்கு உள்ளானதாக இருப்பது இந்த உலகத்தின் அறிவு வளர்ச்சியற்ற தன்மையையும் போர் தர்மம் பற்றிய ஏராளமான கேள்விகளையும் எழுப்புகின்றது.பெரும் சாதனைக்கு சொந்தமான பெண்களின் பங்கு உலகத்தின் எங்கோ ஓர் இடத்தில் ஏதோவிதத்தில் காலின் கீழ் போட்டு மிதிக்கப்படுகின்றது.

ஈழப்பெண்களின் கடந்த கால நீண்ட வரலாறும் உலகப்பொதுமை சார்ந்ததுதான்.ஈழப் பெண் தன்னை மீளக்கட்டமைக்க தனக்கான தனித்துவத்தை, பாதுகாப்பை, தனக்கான இயங்கு நிலையை காணவும் தேடவும் காலனித்துவ ஆட்சியில் இருந்து தேசங்கள் விடுபடும் நிலையில் அதற்கான போராட்ட முனைப்பில் தொடர்ந்த காலத்தை கருவியாக்க வேண்டியிருந்தது.

விரும்பியோ, விரும்பாமலோ அவளே கருவியும் ஆனாள்.பாரதி கண்ட புதுமைப்பெண்கள் பிறக்கவேண்டிய காலம் மாற்றங்களுக்குள்ளான உலக நிலையின் காலடியில் வரும்போது அதனை ஈழப்பெண்ணும் பற்றிக்கொள்கின்றாள்.

சாதிய மத வர்க்க பேதங்களை கடந்த தளைகளை உடைக்கும் பெண்ணிய வரையறைகளை உருவாக்க பெண்களின் மனவுலகு இயங்க ஆரம்பித்த நிலையில் ஈழவிடுதலைப்போராட்டம் அதற்கு வடிகாலாய் அமைந்துவிட்டது.

இன்றைக்கு ஈழப்பெண் இருக்கின்ற நிலையை தாய் வழிச்சமுதாய நிலையிலோ அல்லது அதற்குப் பிறகான புராண இதிகாசங்களில் படைக்கப்பட்ட கண்ணகி மயப்பட்ட அல்லது பாஞ்சாலி மயப்பட்ட பாத்திர நிலைகளிலே தேட வேண்டியதாய் இருக்கவில்லை.கடந்த அரை நூற்றாண்டுக்குள் நடந்த இயங்கு நிலையை வைத்து ஒப்பிட்டு பார்க்கவேண்டியது போதுமானதாய் இருக்கின்றது.தன்னைத் தானே தீர்மானிக்கின்ற தனக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் நிலையில் ஈழப்பெண் தன்னை ஓர் உயர்நிலையான படைப்பாக மாற்றியிருக்கிறாள் அல்லது மீட்டெடுத்தாள் என்று கூறலாம்.அத்தகைய நிலை இந்த உலகுக்கு ஈழப்பெண்களால் கொடுக்கப்படவேண்டிய பெரும்பங்களிப்பாகவும் கருதலாம்.

ஆனால் ஈழத்துப்பெண்களை ஒரு போரினூடே இந்த உலகம் எவ்வாறு எதிர்கொண்டுள்ளது; தரிசித்துள்ளது என்பதை நோக்கும்போது, உலகின் கீழ் நிலையையே காணமுடிகின்றது.இன்று ஈழப்பெண் தனது பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாதவளாக தனது பொருளாதாரத்தை மீட்க முடியாதவளாக தனது உரிமைகளை பெறமுடியாதவளாக உலகின் முன் நிற்கின்றாள்.போரின் பின் ஈழத்துப்பெண்களின் இயலாமையை, அவலத்தை, கண்ணீரை, இழப்புக்களை உலகின் அல்லது இந்த சமுதாயத்தின் எந்தெந்த தரப்பு, எந்தெந்த நோக்கத்திற்காக பயன்படுத்தியுள்ளது என்பதை நோக்கும்போது அருவருப்பான ஒரு பதிலே கிடைக்கும்.

குறிப்பாக இளம் விதவைகள் முதிர்கன்னியாகும் நிலையில் அவர்கள் கடந்துள்ள மனப்போர் உள்ளிட்ட சமுதாய வன்முறை அளவற்றது.
போருக்குப்பின்னர் ஈழப்பெண்களுக்கான ஒரு மௌனப்புரட்சியை செய்வதில் ஈழப்பெண்கள் சார்ந்த சமுதாயமும்
சர்வதேச பெண்கள் நலன்கள் சார்ந்த அமைப்புக்களும் தூரநோக்கற்று நடந்துள்ளன.
உலகத்தின் பனிப்போருக்காக பாதிக்கப்பட்ட ஈழப்பெண்களை வல்லரசுகளின் முகவர்களும்
நேரடியாக வல்லரசுகளும் கையாளும் துரதிர்ஷ்டமான நிலை காணப்படுகிறது.

எல்லாவற்றுக்குமான முழு முதற்காரணமாக ஈழப்பெண்கள் இழந்த பொருளாதாரம் சார்ந்த மூலங்களை மீளவும் கட்டியெழுப்புவதற்காக வாயில்களை அடைத்து
பாதிப்புக்களை மையமாகக் கொண்ட நிறுவனமயப்படுத்தலின் மூலம் உலகின் கண்ணுக்குத் தெரியாத ஒரு தரப்பு சுயலாபங்களை அடைந்துகொள்கின்றது.

இன்னொரு புறத்தில் நுண்கடன்கள் பெண்களை அதிகம் பலவீனப்படுத்தியுள்ளதுடன் தற்கொலை வரை கொண்டு சென்றுள்ளது.நுண்கடன்களின் ஊடாக பெண்கள் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.ஈழத்தில் இது அதிகம் நடந்தேறுகின்றது.

போரில் பாதிப்பட்ட பெண்கள் ஒரு மீளெழுச்சியை உருவாக்க முடியுமெனினும் அதற்கான சந்தை வாய்ப்புகள் இல்லை.அதேவேளை தவறான கல்வி முறைக்குள் கற்றுக்கொண்டிருக்கும் பாதிக்கப்பட்ட பெண்களின் பிள்ளைகளின் கல்வி செயற்பாடுகளும் மறைமுகமாக ஈழப்பெண்களை பலவீனப்படுத்திச்செல்கின்றது.

மிகவும் அவலம் ஈழப்பெண்களின் சொந்த காணிகள் இன்னமும் படைத்தரப்பால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.அதனால் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக சுயதொழிலில் ஈடுபடமுடியாத துர்ப்பாக்கிய நிலை.பெண்களின் விவசாய நிலங்கள், மந்தை வளர்ப்பு நிலங்கள் இன்று படையினரின் ஆக்கிரமிப்பில்.

அடுத்து கடந்த பத்து வருடமாக தமது பிள்ளைகளைத் தேடுகின்ற தாய்மார்களின் நிலை.காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் பிள்ளைகளைத் தேடித் தொடர் போராட்டம் செய்யும் தாய்மார்கள், தந்தையர்களில் பல பத்துப்பேர் இறந்துவிட்டனர்; இறந்து கொண்டிருக்கின்றனர் என்றே சொல்லவேண்டும்.காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் பிள்ளைகள் தம்மோடு இருந்தால் தாம் வறுமைப்பட்ட நிலையில் இருக்கவேண்டியதில்லை என்பதும், காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடிப் போராடும் பெண்களின் ஆணித்தரமான கருத்து.

ஓர் ஈழப்பெண் தனது அன்றாட வாழ்க்கையில் தினமும் பல தடைகளைக் கடந்தே இரவு தூக்கத்திற்கு போகிறாள்.அல்லது சாமம் கடந்தும் தூங்காமல் இருக்கிறாள்! ஏனெனில் தான் உரிமையோடு, சுதந்திரத்தோடு உலவிய  ஒரு காலத்தையும் தினமும் நினைக்கின்றாள்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!