கொரோனா தொற்று – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பதுளை வைத்தியசாலையில் அனுமதி

298 0

கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பதுளை அரசினர் வைத்தியசாலையின் விசேட சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாய், தந்தை மற்றும் அவர்களது ஏழு வயது மகன் ஆகிய மூவரும் இவ்வாறு அனுமதிக்கப்பட்டு விசேட சிகிச்சைபெற்று வருகின்றனர்.

அவர்கள் மூவரும் தென்கொரியாவில் வசித்து வந்த இலங்கையர்களாவர். தென்கொரியாவில் கொரோனா நோய் பரவுவதை அடுத்து குறித்த மூவரும் அச்சம் கொண்டு தமது சொந்த நாடான இலங்கைக்கு கடந்த 27 ஆம் திகதி வருகை தந்துள்ளனர்.

அவர்கள் வந்து சேர்ந்த ஒரு வாரத்தில் ஏழு வயது நிரம்பிய சிறுவனுக்கு கொரோனா நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டதும் பெற்றோர் அவரை பதுளை அரசினர் வைத்தியசாலையில் அனுமதித்தனர். இதனையடுத்து அச்சிறுவனின் தாயும் தந்தையும் விசேட சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஏனைய நோயாளர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டு விசேட மருத்துவ அறையில் சிகிச்சையளிக்கப்படுவதாகவும் பதுளை அரசினர் வைத்தியசாலையின் சுகாதார பணிப்பாளர் ரஞ்சித் அமரகோன் தெரிவித்தார்.