கொரோனா தொற்று அறிகுறி – வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

430 0

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான சந்தேகத்தின் பேரில் 18 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்களுள் நான்கு வெளிநாட்டவர்களும் உள்ளடங்குவதாக அந்தப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகளுடன் 10 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுள் மூன்று வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றனர்.

றாகமை போதனா வைத்தியசாலையில் ஒருவரும் குருணாகல் வைத்தியசாலையில் வெளிநாட்டவர் ஒருவர் உள்ளடங்கலாக இருவர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், நீர்கொழும்பு போதனா வைத்தியசாலையில் மூவரும் சிறுவர் வைத்தியசாலையில் ஒருவரும் உள்ளடங்கலாக 18 பேர் இவ்வாறு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் இல்லாதபோதிலும் உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளமையினால், உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய சுகாதார பழக்கவழக்கங்களைப் பின்பற்றுமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதேவேளை, கொரோனா வைரஸின் தாக்கம் நாட்டில் அதிகளவில் இல்லையென்பதனால் பாதுகாப்பு கவசங்களை அணிய வேண்டிய தேவையில்லை என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.