தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அரசாங்கத்துக்கு பெற்றுக்கொடுக்க வேண்டுமென இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “விருப்புவாக்கு முறையிலே தேர்தலுக்கு செல்லவேண்டியிருப்பது துரதிஷ்டவசமானதாகும்.
எனவே மக்களுக்கு நன்மை ஏற்படுத்தும் வகையிலான தேர்தல் முறையை மாற்றியமைக்க அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொடுக்கவேண்டும்.
மேலும் நடைமுறையில் இருக்கும் தேர்தல் முறையை கடந்த 5 வருடங்களில் நீக்க முடியாமல்போனது துரதிஷ்டமாகும்.
விகிதாசார மற்றும் தொகுதி அடிப்படையில் தேர்தல் முறைமை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதே எமது எதிர்ப்பார்ப்பாகும்” என குறிப்பிட்டுள்ளார்.

