ஐ.தே.க வில் இல்லாமல் போன ஒற்றுமை மீண்டும் கட்டியெழுப்பப்படும்-சஜித்

325 0
சமகி ஜனபல வேகய எனப்படும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக இலங்கை வரலாற்றில் முன்னொரு போதும் இல்லாத ஜனநாயக மற்றும் அபிவிருத்தி பயணத்தின் முதல் அத்தியாயம் திறக்கப்படும் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட அமைப்பாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தாக பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக ஆரம்பிக்கப்படும் புதிய பயணத்தின் மூலம் பல புதிய திட்டங்கள் அமுலாகும் எனவும் எதிர்க் கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஆகவே, உருவாக்கப்படும் புதிய சக்தியின் ஊடாக நாட்டில் இதுவரை இல்லாத ஜனநாயக ரீதியான மேம்பாட்டை கட்டியெழுப்ப எதிர்பார்ப்பதாகவும் எதிர்க் கட்சித் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இல்லாமல் போயுள்ள ஒற்றுமையை மீண்டும் கட்டியெழுப்ப உள்ளதாக கூறினார்.

அதேபோல் சமகி ஜனபல வேகய எனப்படும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக கிராமபுற மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் இன்று உதயமாகும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக புதியதொரு பயணத்தை ஆரம்பிக்க திடசங்கற்பம் பூண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.