மார்ச் 1 முதல் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்குமாறு ஜனாதிபதி அறிவித்துள்ள நிலையில் இதுவரையில் அது குறித்த உத்தியோகபூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
எவ்வாராயினும் எதிர்வரும் வாரம் அது சம்பந்தமான முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத் துறை நிறுவனங்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போதும் ஆயிரம் ரூபாவாக நாளாந்த அடிப்படை வேதனத்தை அதிகரிக்கும் விடயத்தில் இணக்கப்பாடு ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களது நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரித்து காட்டும் நோக்கில் தொழிலாளர்களுக்கு வேலைப்பளுவை அதிகரிக்கும் வகையிலான உடன்படிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டு வருவதாக உலக சோசலிச இணையதளம் குற்றம் சுமத்தியுள்ளது.
அந்த இணையதளத்தில் வெளியாகியுள்ள கட்டுரை ஒன்றில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வேலை பளுவை அதிகரித்து அதன் ஊடாக நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாவாக கூட்டும் முயற்சிகள் இடம்பெறுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இது சம்பந்தமாக இதுவரையில் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை .
இதேவேளை பெருந்தோட்ட தொழிலாளர்களின் உழைப்பால் நாட்டின் பல பகுதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டாலும் பெருந்தோட்ட மக்கள் வாழும் பகுதிகள் அபிவிருத்தி செய்யப்படாதிருப்பது கவலைக்குரிய விடயம் என நாடாளுமன்ற உறுப்பினர் அருணாச்சலம் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார்.
லுணுகலை பார்க் 50 ஏக்கர் தோட்டப்பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

