முல்லைத்தீவில் பொதுமக்களின் காணிகளை இராணுவம் சூறையாடுகிறது-சிவமோகன்

335 0

sivamohanமுல்லைத்தீவில் இராணுவத்தினர் பொதுமக்களின் காணிகளைக் கையகப்படுத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் குற்றம்சாட்டியுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தின் முடிவுகளை மீறி இராணுவம், மத்திய அரசாங்க அமைச்சரவையின் அனுமதியுடன் பொது மக்களின் காணிகளை சூறையாடி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவருமான சி.சிவமோகன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய பாதுகாப்பு என்பது மக்களின் வாழ்வியலை உருக்குலைத்து அவர்களின் காணிகளை பறிப்பதுதானா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இதன்போது கருத்து தெரிவித்த சிவமோகன் ‘நான் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான இணைத்தலைவராக உள்ளேன். அந்த வகையில் எமது மாவட்டத்தில் மக்கள் முழுமையாக மீள்குடியேற்றப்பட வேண்டும்.

அவர்கள் தமது தொழிலை தாமாக செய்யும் வகையில் இராணுவ தலையீடுகள் அற்றதாக செயற்பட அனுமதிக்கப்படவேண்டும். முள்ளிவாய்க்காலுக்கு கிழக்குப்புறமாக உள்ள வட்டுவாகல் எனும் பிரதேசம் மீன்பிடித்தொழிலை நம்பிய குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கக்கூடிய ஒரு பிரதேசம்.

சிறுகடலும் அதனுடன் இணைந்த பெருங்கடலும் உள்ள இடமாகும். ஆனால் இன்று அப்பிரதேசத்தில் கோத்தபாய கடற்படை முகாமுக்கு அடாவடித்தனமாக மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

ஆனால் நாங்கள் இணைத்தலைவர்கள் என்ற ரீதியில் சில தீர்மானங்கள் எடுத்திருக்கின்றோம். அதாவது அப்பிரதேசம் எமது மக்களுக்கான சுற்றுலா பிரதேசமாகவும் கடற்றொழில் பல்கலைக்கழகம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட பிரதேசம்.

ஆனால் இராணுவம் இன்று அபிவிருத்திக்குழுவின் தீர்மானத்தையும் மீறி மத்திய அமைச்சரவைக்கு கொண்டு சென்று காணி அபகரிப்புக்கான வேலையை முன்னெடுத்துள்ளது.

ஆகவே முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்த அரசின் நல்லாட்சியில் சிவில் ஆட்சி நடைபெறுகின்றதா அல்லது இராணுவ ஆட்சி நடைபெறுகின்றதா என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது.

இந்த அரசு எமது மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யமுன்வருமாக இருந்தால் இந்த அநாவசிய இராணுவ முகாம்களை மக்களின் காணிகளை விட்டு அகற்றவேண்டும். அதற்கு அரசு துணை நிற்க வேண்டும்.

ஆனால் இங்கு அப்படி நடைபெறுவதில்லை.

அரசு தேசிய பாதுகாப்பு என்ற காரணத்தை சொல்லி காணிகளை எடுத்துக்கொள்கின்றது. தேசிய பாதுகாப்பு என்பது எமது மக்களின் வாழ்வியலை உருக்குலைத்து அவர்களின் காணிகளை பறிப்பதுதான் என்று சொன்னால் பகிரங்கமாக இராணுவ ஆட்சி நடைபெறுகின்றது.

எனவே உங்கள் காணிகளை தரமுடியாது என அரசு அறிவித்து காணிகளை பறிமுதல் செய்யவேண்டும். ஆகவே நல்லாட்சி என்று சொல்லி இவ்வாறான நிலை முல்லைத்தீவில் காணப்பட்டால் எவ்வாறு நாம் பூரண அபிவிருத்தியை கொண்டு செல்வது.என்றும் குறிப்பிட்டார்.