புகையிரதத்தில் மோதி நபர் ஒருவர் பலி!

312 0

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி அரபாநகர் பகுதியில் வைத்து புகையிரதத்தில் குடும்பஸ்தர் ஒருவர் மோதுண்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணமான புகையிரதத்தில் நேற்று (26) இரவு 9.10 மணியளவில் ஓட்டமாவடி அரபாநகர் ஹம்ஸா வீதியைச் சேர்ந்த முகம்மது பௌமி அனீஸ் முகம்மட் (வயது 28) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

அத்தோடு மரணமடைந்தவருக்கு மூன்று பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தைகள் உள்ளதுடன், முதலாவது பிள்ளைக்கு நான்கு வயதாக உள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

வாழைச்சேனை மற்றும் புணாணை புகையிரத நிலையத்திற்கு இடைப்பட்ட ஓட்டமாவடி அரபாநகர் புகையிரத கடவையில் கையடக்கத் தொலைபேசியில் கதைத்து கொண்டிருந்த வேளையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த குடும்பஸ்தரின் வீட்டிற்கு அருகில் புகையிரத கடவை உள்ள நிலையில் புகையிரத கடவையில் இரவு நேரத்தில் இருப்பதாகவும், இதன் நிமிர்த்தமே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த சடலம் குடும்பஸ்தரின் வீட்டிற்கு அருகில் உள்ள நிலையில் இன்று மட்டக்களப்பு குற்றத்தடுப்பு பொலிஸார் வருகை தந்து வாழைச்சேனை பொலிஸாருடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தார்.