சீனாவின் மிகப்பெரிய சுகாதார அவசரநிலை: சீன அதிபர் ஜின்பிங் பிரகடனம்

189 0

கொரோனா வைரஸின் கோரப்பிடிக்கு இதுவரை 2442 பேர் உயிர் இழந்த நிலையில் சீனாவின் மிகப்பெரிய சுகாதார அவசர நிலை என சீன அதிபர் ஜி ஜின்பிங் அறிவித்தார்.

சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வுகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. 27 நாடுகளுக்கும் மேல் இந்த வைரஸ் பரவி உள்ளதால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.

கொரோனா வைரஸ் சீனாவில் மிகவும் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரசின் பிறப்பிடமாக கருதப்படும் வுகானில் இந்த வைரஸ் பாதிப்பால் மருத்துவமனைகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. ஆயிரம் வரை மெதுவாக உயர்ந்த பலியின் எண்ணிக்கை தற்போது நாளுக்குநாள் சராசரியாக 100-க்கும் உயர்ந்து கொண்டிருக்கிறது. இன்றைய நிலவரப்படி 2,345 பேர் உயிரை குடித்திருந்தது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் சீனாவின் மிகப்பெரிய சுகாதார அவசர நிலை என அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் அறிவித்துள்ளார். மேலும், ‘‘பரவலான தொற்றுநோயை கொண்டுள்ள இந்த வைரஸ் மிகவும் வேகமாக பரவுகிறது. இதை தடுத்து கட்டுப்படுத்த மிகவும் கடினமாக உள்ளது’’ என்றார்.

கொரோனா வைரஸ் சீனாவை உலுக்கி வரும் நிலையில், அதிபர் பாதுகாப்பான இடத்தில் ஒழிந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.