ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இலங்கை குறித்த பிரேரணையில் இலங்கை அரசாங்கம் இனி பங்குதாரர் இல்லை என்பதனை நான் எதிர்வரும் 26 ஆம் திகதி ஜெனிவாவில் உத்தியோகபூர்வமாக அறிவிப்பேன் என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையானது அரசியலமைப்புக்கு விரோதமானது. அதற்கு மக்கள் அங்கீகாரமளிக்கவுமில்லை.
பாராளுமன்றத்தில் அங்கீகாரம் கிடைக்கவுமில்லை என்றும் வெ ளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜெனிவா மனித உரிமை பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் 26 ஆம் திகதி வெ ளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன உரையாற்றவுள்ளார். அத்துடன் இலங்கையானது 30 – 1 என்ற ஜெனிவா பிரேரணையிலிருந்து இலங்கை விலகுவதாகவும் அவர் அறிவிக்கவுள்ளார். இது தொடர்பில் அவரிடம் கேட்டபோதே இதனை குறிப்பிட்டார்.
அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்
எதிர்வரும் 26 ஆம் திகதி நான் ஜெனிவா மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் உரையாற்றவுள்ளேன். அதாவது இலங்கையானது 30-1 என்ற பிரேரணையிலிருந்து உத்தியோகபூர்வமாக வெ ளியேறுகின்றது என்பதனை நான் ஜெனிவா பேரவையில் அறிவிக்கவுள்ளேன்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இலங்கை குறித்த பிரேரணையில் இலங்கை அரசாங்கம் இனி பங்குதாரர் இல்லை என்பதனை நான் ஜெனிவாவில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளேன்.
2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையானது அரசியலமைப்புக்கு விரோதமானது. அப்போது பதவியில் இருந்த ஜனாதிபதி தனக்கு இது குறித்து தெரியாது என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் இந்த பிரேரணைக்கு மக்கள் அங்கீகாரமளிக்கவுமில்லை. அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அங்கீகாரம் பெறப்படவுமில்லை. எனவே இது சட்டவிரோதமானது என்றும் ஜனநாயகத்துக்கு எனவும் நான் ஜெனிவா பேரவையில் அறிவிக்கவிருக்கின்றேன்.
இந்த பிரேரணைக்கு எதிராகவே மக்கள் கடந்த தேர்தலில் ஆணை வழங்கினர். எனவே மக்களின் அங்கீகாரம் 30-1 பிரேரணைக்கு கிடைக்கவில்லை. எனவே அதிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்தோம். அந்தவகையில் அரசாங்கத்தின் தீர்மானத்தை நான் 26 ஆம் திகதி அறிவிப்பேன்
என்ன பிரச்சினையாக இருந்தாலும் நாங்கள் உள்ளக ரீதியில் அதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுத்து செல்வோம் என்றார்.

