முக்கிய நகரங்களைக் குறிவைத்த ஏமனின் ஏவுகணைகள்: தடுத்து நிறுத்திய சவுதி

281 0

எங்கள் நாட்டின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து ஏமனிலிருந்து ஏவப்பட்ட சில ஏவுகணைகளைத் தடுத்து அழித்ததாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சவுதி தரப்பில், “ஏமன் தலைநகர் சனாவிலிருந்து ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் சவுதியின் முக்கிய நகர் மற்றும் குடிமக்கள் பகுதிகளின் மீது குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணைகளை எங்கள் நாட்டு கூட்டுப் படைகள் தாக்கி அழித்தன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இத்தாக்குதல் குறித்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தரப்பில் கருத்து ஏதும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

 

மேலும், ஐக்கிய அமீரக ஆதரவு ஏமன் தென்பகுதி பிரிவினைவாதிகள், ஏமன் அரசுக்கு எதிராகச் சண்டையிட்டு வந்தனர். ஏமனில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.