புதிய அமைச்சரவை பத்திரமொன்றை பாதுகாப்பு அமைச்சு விரைவில் சமர்ப்பிக்கும் – கமல் குணரத்ன

298 0

ஆயுதப்படைகள் மற்றும் காவல்துறையில் ஊனமுற்றோருக்கான ஓய்வூதியம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க பாதுகாப்பு அமைச்சு புதிய அமைச்சரவை பத்திரமொன்றை விரைவில் சமர்ப்பிக்கும் என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்தார்.

முத்தரப்பு தளபதிகள், உயர்மட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகளுடன் நேற்று பாதுகாப்பு அமைச்சில்  நடைபெற்ற அவசர கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்தார்.

ஊனமுற்ற போர் வீரர்கள், உயிரிழந்த வீரர்களின் குடும்பங்கள் மற்றும் விதவைகளுக்கான ஓய்வூதிய கொடுப்பனவுகளில் நிலவும் முரண்பாடுகள் தீர்க்கப்படும். அமைச்சு அதிகாரிகள் தற்போதுள்ள ஓய்வூதியம் மற்றும் கொடுப்பனவுகளில் உள்ள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும்.

ஊனமுற்ற போர் வீரர்கள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் விதவைகளுக்கான ஓய்வூதியம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பாக தற்போதுள்ள நடைமுறை முரண்பாடுகளை நீக்குவது எங்கள் கடமையும் பொறுப்பும் ஆகும்

ஜனாதிபதியும் பிரதமரும் தங்களால் வழங்கப்பட்ட உறுதிமொழிகளைக் நிறைவேற்றுவதற்ற இந்த பிரச்சினையை தீர்க்க உறுதிபூண்டுள்ளனர்.

ஒரு முன்னாள் படைவீரர் என்ற முறையில், போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது பரிவு காட்டுகிறேன், ஊனமுற்ற போர் வீரர்களின் ஓய்வூதியம் மற்றும் கொடுப்பனவு பிரச்சினைகளை தீர்க்கும் முதல் அமைச்சரவை பத்திரம் மார்ச் 12, 2019 அன்று அனுப்பப்பட்டது, பின்னர் இது ஒரு துணைக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது, இதில் நிதி அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் ஓய்வூதிய திணைக்கள மூத்த அதிகாரிகள் அடங்குவர்.

கடந்த ஆட்சியின் போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாட ஊனமுற்ற போர் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களினால் கோரப்பட்ட கோரிக்கைகள் மறுக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நிதியமைச்சு ஓய்வூதியக் கொடுப்பனவிற்கு பதிலாக தனியான கொடுப்பனவுகளாக வழங்குவதற்கு ஒப்புதல் அளித்தது, ஓய்வூதியம், கொடுப்பனவுகள் மற்றும் பிற கொடுப்பனவுகள் தொடர்பான அவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்றும் இதன்போது தெரிவித்தார்.