உலக சந்தையில் எரிபொருள் விலை குறிந்துள்ளமை தற்காலிகமானது என்றும் எதிர்வரும் மாதங்களில் மேலும் அதிகரிக்கலாம் என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், உலகச் சந்தையில் எரிபொருள் விலை குறைவடையுமானால் அதன் பிரதிபலனை மக்களுக்கு பெற்றுக் கொடுக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்கும் என கூறினார்.
கடந்த 2019 ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து 2020 ஜனவரி மாதம் வரை உலகச் சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்து காணப்பட்டது என அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்த நிலையில் எரிபொருள் விலை தற்காலிகமாக குறைவடைந்தது என்றும் எனினும் தற்போது மீண்டும் அது அதிகரித்துள்ளது என குறிப்பிட்டார்.
இந்த நிலையில் எதிர்வரும் மாதம் முதல் வாரமளவில் எரிபொருள் விலை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்ததற்கிணங்க கடந்த ஜனவரியில் டீசலின் விலை மற்றும் மண்ணெண்ணெய் விலையும் அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றாலும் அரசாங்கம் அவ்வாறு விலை அதிகரிப்பு மேற்கொள்ளவில்லை என அவர் தெரிவித்தார்.

