பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள மூன்று சட்டமூலங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் இன்று (19) கூடிய அரசாங்க நிதி பற்றிய குழு அனுமதி வழங்கியது.
இதற்கமைய, நாட்டைக் கட்டியெழுப்புதல் வரி (திருத்தச்) சட்டமூலம், பொருளாதார சேவை விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலம் மற்றும் துறைமுக, விமான நிலைய அபிவிருத்தி அறவீடு (திருத்தச்) சட்டமூலம் என்பன எதிர்வரும் வியாழக்கிழமை (20) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.
அதேநேரம், திறைசேரி முறி விநியோகம் தொடர்பான தடயவியல் கணக்காய்வு குறித்த தமது கண்காணிப்பினை இலங்கை மத்திய வங்கி முன்வைக்க வேண்டும் என கடந்த பெப்ரவரி 5 ஆம் திகதி நடைபெற்ற அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
எனினும், தடயவியல் கணக்காய்வில் தாமும் ஒரு பகுதியினர் என்பதால் சொந்த கண்காணிப்பை வழங்குவது நெறிமுறையற்றது என மத்திய வங்கியின் அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டியிருந்தனர். இதற்கமைய மத்திய வங்கியின் கண்காணிப்பை கவனத்தில் கொள்வது என்ற நிலைப்பாட்டை அரசாங்க நிதி பற்றிய குழு ஒத்திவைத்ததுடன், அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு அமைப்பை வலுப்படுத்த முயற்சிக்குமாறும் வலியுறுத்தியது.
இராஜாங்க அமைச்சர்களான சுசந்த புஞ்சிநிலமே, தாரக பாலசசூரிய, காஞ்சன விஜயசேகர பாராளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா, பிமல் ரத்னாயக்க, மயந்த திஸாநாயக்க, பேராசிரியர் ஆஷு மாரசிங்க மற்றும் கலாநிதி மொஹமட் இஸ்மயில் ஆகியோர் இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

