புலத்திலும் பதியமாகும் தமிழர் கலைகள்- தமிழ்க் கல்விக் கழகம் யேர்மனி

2373 0

தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவினரால் கடந்த மூன்று ஆண்டுகளாக நடாத்தப்பட்டு வந்த கலைத்திறன் போட்டி இந்த ஆண்டும் 08.02.2020 அன்று தொடங்கி மிகச்சிறப்பாக நடைபெற்று வருகின்றது. கடந்த ஆண்டுகளில் மாநில மற்றும் யேர்மன் தழுவிய மட்டத்தில் இரு நிலைகளாக நடாத்தப்பட்டு வந்த போட்டியை இந்த ஆண்டுமுதல் தமது மாணவச் செல்வங்களின் வளர்ச்சியையும் நன்மையையும் கருத்திற்கொண்டு மாநில மட்டத்திலே இறுதிப் போட்டிக்கு நிகராக முதல் மூன்றுநிலைகளைப் பெறும் வெற்றியாளர்கள் மதிப்பளிக்கப்படுகின்றார்கள்.

இங்கே மதிப்பளிப்புகள் இருநிலைகளாக அணிசெய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். அதாவது, போட்டியாளர்கள் தமது நிகழ்வை அரங்காற்றியதும் உடனடியாகப் போட்டியிற் பங்குபற்றியமைக்காக பங்கேற்புப்பட்டி அணிவிக்கப்பட்டு பங்கேற்புச் சான்றிதழும் வழங்கப்படுவதோடு, மாநில மட்டத்திலே முதல் மூன்று நிலைகளைப்பெறும் வெற்றியாளருக்கு அதே நாளில் அதே அரங்கில் வைத்து சிறப்பான மதிப்பளிப்புகளை வழங்கும் அதேவேளை, இங்கு கலைத்திறனை வெளிப்படுத்தி வெற்றிகளைத் தமதாக்கி முதல் மூன்று நிலைகளைப் பெற்ற தமிழாலயங்கள் அறிவிக்கப்பட்டதோடு, அவர்களுக்கான மதிப்பளிப்புகள் வரும் ஏப்பிரல் மாதம் நடைபெறவுள்ள தமிழ்க் கல்விக் கழகத்தின் 30வது அகவை நிறைவு விழா அரங்குகளில் வழங்கப்பட உள்ளன.

அத்தோடு யேர்மனி முழுவதும் கலைத்திறன் போட்டிகளில் பங்குபற்றியுள்ள தமிழாலயங்களின் புள்ளிகளின் அடிப்படையில் முதலாம் இடத்தைப் பெறும் தமிழாலயத்திற்கு தமிழீழத்தின் முன்னணிக் கலைஞர் “மாமனிதர் சந்தியோகு ஜேசுதாசன்” எனும் விருது வழங்கி மதிப்பளிக்கப்படவுள்ளது.

தமிழர் கலைவடிவங்களைத் தமிழர்களது தேச எல்லைகளைக் கடந்து புலத்திலே வாழும் எமது தமிழ்ச் சிறார்கள் மத்தியிலே பதியமிடும் முயற்சியில் தமிழ்க் கல்விக் கழகத்தோடு பெற்றோரும் மாணவர்களும் இணைந்திருந்த காட்சிகள் சிறப்பிற்குரியவை. இதுவரை நடைபெற்ற மூன்று மாநிலங்களிலும் 500 ற்கு மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளதோடு, எதிர்வரும் 22.02.2020 அன்று கனோவர் நகரிலும், 08.03.2020 அன்று எசன் நகரிலும் முறையே வட மற்றும் வடமத்திய மாநிலங்களுக்கான போட்டிகள் நடைபெறும்.

யேர்மனி தென்மாநிலம் ஸ்ருட்காட் நகரில் நடைபெற்ற கலைத்திறன் போட்டிகளின் புகைப்படத்தொகுப்பு.