வாக்குறுதிகளில் இருந்து இலங்கை அரசாங்கம் பின்வாங்க முடியாது என வலியுறுத்தல்

253 0

அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினரும் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களின் வெளிவிவகார உபகுழுவின் தலைவருமான அமி பேரா கொழும்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை இன்று (17) சந்தித்து கலந்துரையாடினார்.

தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து குழுவினரை தெளிவுபடுத்திய இரா. சம்பந்தன், தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியல் யாப்பு உ ருவாக்கம் தொடர்பிலும் தெளிவுபடுத்தினார்.

ஆனால் தற்போதைய அரசாங்கம் வேறுவிதமான நிலைப்பாட்டினை கொண்டுள்ளதாகவும் பெருன்பான்மை மக்கள் அதிகார பரவலாக்கத்திற்கு அங்கீகாரம் அளிக்கவில்லை எனவும் அத்தகைய சந்தர்ப்பத்தில் மாற்று வழிகளை யோசிக்க வேண்டும் எனவும், உண்மைக்கு புறம்பாக அறிக்கைகள் வெளியிடுவதனையும் சுட்டிக்காட்டினார்.

தொடர்ச்சியாக வந்த அரசாங்கங்கள் இந்த விடயம் தொடர்பில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளனர். அவை அனைத்தும் பதியப்பட்டவையாக உள்ளன. எனவே, இத்தகைய நிலையில் சர்வதேச சமூகம் ஐந்தே வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுவதனை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இந்த வாக்குறுதிகள் அனைத்தும் விடுதலைப் புலிகளின் காலத்தில் கொடுக்கப்பட்டவை எனவும் தற்போது விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள் என்கிற காரணத்தினால் வாக்குறுதிகளில் இருந்து இலங்கை அரசாங்கம் பின்வாங்க முடியாது என்பதனையும், வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருக்க முடியாது என்பதனையும் இரா. சம்பந்தன் இந்த சந்திப்பின் போது வலியுறுத்தினார்.