பாடசாலைகளில் முதலாம் தவணைப் பரீட்சையை நிறுத்துவற்கு நடவடிக்கை!

230 0

பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகள் போன்ற விளையாட்டுத்துறை நடவடிக்கைகளில் மாணவர்கள் கவனத்தைக் குவிப்பதற்கு வசதியாக முதலாம் தவணைப் பரீட்சைகளை நிறுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்திருக்கிறது.

முதலாவது தவணையின் போது விளையாட்டுப் போட்டிகளில் பாடசாலைகள் கூடுதல் கவனத்தை செலுத்துவதை கண்டறிந்த பிறகு இந்த விடயம் குறித்து கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆராய்ந்திருக்கிறார்கள். இதனால் முதலாம் தவணைப் பரீட்சைகளுக்கு தங்களை தயார் செய்வதில் மாணவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட நேரமே இருக்கிறது.

எனவே இந்தப் பரீட்சைகளை நடத்துவது நடைமுறைச் சாத்தியமானதல்ல என்று அதிகாரிகள் முடிவெடுத்திருப்பதாக தெரியவருகிறது. இந்தக் கலந்துரையாடல்களுக்கு தெரிவு செய்யப்பட்ட ஒரு பெற்றோர் குழுவும் அழைக்கப்பட்டிருந்தார்கள்.

கல்வி அமைச்சின் அதிகாரிகள் எடுத்த முடிவின் பிரகாரம் அடுத்த வருடத்தில் இருந்து பத்தாம் வகுப்புக்கு கீழ்ப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கான முதலாம் தவணைப் பரீட்சைகள் நடத்தப்பட மாட்டாது.

பரீட்சையை அடிப்படையாகக் கொண்ட கல்விக்கு பாடசாலைகளில் கூடுதலான நேரம் செலவிடப்படுவதால் விளையாட்டுக்கள் மற்றும் ஏனைய புறக்கிருத்திய நடவடிக்கைகளுக்கு குறைந்தளவு நேரமே செலவிடப்படுகிறது என்று மக்களிடம் இருந்து முறைப்பாடுகள் வந்ததன் விளைவாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் , மாணவர்கள் பெருமளவு தனியார் வகுப்புக்களில் செலவிடுவதாகவும் தெரியவருகிறது.