தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டியதன் அவசியத்தை சர்வதேசம் உணர வேண்டும்- மாவை

278 0

இலங்கை தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, சர்வதேச நாடுகள் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் தமிழர் பிரச்சினை தொடர்பாக வெளியிடும் கருத்துக்கள் தொடர்பாக கூறும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக மாவை சேனாதிராஜா மேலும் கூறியுள்ளதாவது, “ஜனாதிபதி  மற்றும் பிரதமர்  ஆகியோர் இந்தியாவிற்கு விஜயங்களை மேற்கொண்டு திரும்பியுள்ளனர்.

இவர்கள் இந்தியாவுடன் பேசிய விடயங்களை வெளியில் வந்து பேசவில்லை. குறிப்பாக இலங்கையில் இனப்பிரச்சினை ஒன்று இல்லை என்ற விதத்திலேயே இவர்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

மேலும் இராஜதந்திரிகள் ரீதியிலான சந்திப்புக்கள் ஒன்று நடைபெற்றாலும் அல்லது ஐ.நா.மனித உரிமைப் பேரவை அமர்வுகள் நடைபெற்றாலும் பல கருத்துக்களைக் கூறுவார்கள்.

ஆனால் அதுவல்ல முக்கிய விடயம். சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் என்ன கதைத்துள்ளார்கள் என்பதுதான் நாம் அறிய வேண்டிய விடமாகும்.

அதாவது இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் ஏற்பட்ட 13 ஆம் திருத்தச் சட்டத்தை அது கொண்டுவரப்பட்ட நாளில் இருந்து  இன்று வரையும் கூட அதனை இனப்பிரச்சினைக்குத் தீர்வாக ஒருவரும் ஏற்றுக்கொள்ளவில்லை.

கடந்த ஆட்சிக் காலத்தில் இனப்பிரச்சினை தீர்வாக முன்மொழியப்பட்ட அரசியல் அமைப்பு கூட 13 ஆம் திருத்தச் சட்டம் பற்றிய கதை எதுவுமே இல்லை.

இந்நிலையில் 13ஆம் திருத்தச் சட்டத்துக்கு அப்பால் சென்றே தீர்வுகாண முயற்சிகள் இடம்பெற்றன.

இலங்கை இந்தியாவுக்கு இடையிலான கலந்துரையாடலும் அவ்வாறே அமைந்துள்ளது. அந்தவகையில் ஜனாதிபதி மற்றும் பிரதமரும் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

எனவே தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் விடயத்தில் சர்வதேச நாடுகள்தான் கூடிய கவனம் செலுத்த வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.