நாடாளுமன்றத்தை 2-3 வருடங்களுக்கு மூடினாலும் பிரச்சினை இல்லை – விதுர!

180 0

ஒருவருக்கொருவர் புரிந்துணர்வு இல்லாத மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ளாத நாடாளுமன்றம் காணப்படுவதனால் அதனை மூடுவதில் எந்த பிரச்சினையும் இருக்காது என இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) ஹொரான பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

தற்போது அதிக செலவீனங்கள் ஏற்படும் இடமாக நாடாளுமன்றம் காணப்படுகின்றது என சுட்டிக்காட்டிய அவர், நாடாளுமன்றம் கூட்டப்படும் ஒரு நாளில் அரசாங்கம் 9.2 மில்லியனையும், நடைபெறாத ஒரு நாளில் 8.7 மில்லியனும் அரச நிதியில் இருந்து செலவாகின்றது என கூறினார்.

இருப்பினும் மரியாதையாக நடந்துகொள்ள தெரியாதவர்களே நாடாளுமன்றில் இருப்பதாகவும் அண்மையில் மிளகாய் தூள் தாக்குதல் மற்றும் கத்திகளை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்த சம்பவங்களையும் சுட்டிக்காட்டிய அவர், இவர்களுக்காக 9.2 மில்லியன் ரூபாயை செலவழிப்பதில் அர்த்தமில்லை என கூறினார்.

எனவே 2 அல்லது 3 வருடங்களுக்கு நாடாளுமன்றத்தை மூடினாலும் எந்தப் பிரச்சினையும் இருக்காது என்றும், மாணவர்களின் கல்விக்கு அந்த பணத்தை பயன்படுத்தலாம் எனவும் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க குறிப்பிட்டார்.

மேலும் நாடு புதிய சிந்தனையுடன் ஒரு பயணத்தை மேற்கொண்டுள்ளது, அதைச் செயற்படுத்துவதற்கு, மனநிலையிலும் மாற்றம் இருக்க வேண்டும் என அவர் கூறினார்.